spot_img
July 27, 2024, 1:33 pm
spot_img

நான்கு வழக்குகளில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் இழப்பீடு வழங்க நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு

கடந்த பிப்ரவரி மாதத்தில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் மீதான  நான்கு வழக்குகளில் நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு கவனிக்கத்தக்கதாக உள்ளது.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே பன்னீர்குத்தி பாளையத்தில் வசிப்பவர் வெள்ளையன் மகன் செல்வமணி.  இவர் இண்டேன் கேஸ் சிலிண்டர் இணைப்பை திருச்செங்கோட்டில் உள்ள வீனஸ் இன்டேன் கேஸ் எண்டர்பிரைசஸ் நிறுவனத்தில் பெற்றுள்ளார். 

கடந்த 2019   ஜூலையில் இவரது மனைவி செல்வி சமையல் செய்து கொண்டிருந்தபோது கேஸ் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு தீ விபத்து   ஏற்பட்டுள்ளது. இதனால் தமக்கேற்பட்ட   சேதம் ரூபாய் ஆறு லட்சத்தை தருமாறு உள்ளூர் சிலிண்டர்  விநியோகஸ்தரிடமும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்திலும் விண்ணப்பம் செய்துள்ளார். அவர்கள் எவ்வித   இழப்பீட்டையும்  தராததால் செல்வமணி கடந்த 2019 ஆம் ஆண்டு நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

விசாரணை முடிவடைந்த நிலையில்  (20-02-2024) நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி டாக்டர் வீ. ராமராஜ் தலைமையிலான அமர்வு தீர்ப்பு வழங்கியது (20-02-2024).  வாடிக்கையாளருக்கு வழங்கப்படும் சிலிண்டரில் கேஸ் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு விபத்து நடந்தால் சேதத்தொகையை வழங்குவதற்காக இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம்   ஐசிஐசிஐ லம்போர்ட் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.  விபத்து நடந்த மறுநாளே சம்பவ இடத்தை எண்ணெய் நிறுவனத்தின் அலுவலர்களும் உள்ளூர் விநியோகஸ்தரின் அலுவலர்களும் ஆய்வு செய்துள்ளார்கள்.   வழக்கு தாக்கல் செய்தவர் இழப்பீடு கேட்டு விண்ணப்பித்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஆனால், எண்ணெய் நிறுவனமும் விநியோகஸ்தரும் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் உடனடியாக   இன்சூரன்ஸ் தொகையை வாடிக்கையாளருக்கு பெற்று தரவில்லை.  வாடிக்கையாளர் வழக்கு தாக்கல் செய்த பின்னர் விபத்து நடந்ததிலிருந்து 30 மாதங்கள் கழித்து இன்சூரன்ஸ்  தொகை ரூபாய் இரண்டு லட்சத்தை இன்சூரன்ஸ் நிறுவனம் வழக்கு தாக்கல் செய்தவருக்கு வழங்கியுள்ளது.  இன்சூரன்ஸ் தொகையை வழங்க 30 மாதம் காலதாமதம் செய்தது  சேவை குறைபாடு என்று தீர்ப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

சேவை குறைபாட்டால் வாடிக்கையாளருக்கு ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் சிரமங்களுக்கு உள்ளூர் சிலிண்டர் விநியோகஸ்தர், எண்ணெய் நிறுவனம் மற்றும் இன்சூரன்ஸ் நிறுவனம் ஆகிய  ஒவ்வொருவரும் இழப்பீடாகவும் செலவு தொகையாகவும் ரூ  25,000/- ஐ  30 மாதத்திற்கு ஆண்டொன்றுக்கு 9 சதவீத வட்டியுடன்    நான்கு வாரங்களுக்குள்  பாதிக்கப்பட்டவருக்கு வழங்க மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதனிடையே இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் விழாக்கால கொண்டாட்டம் என்ற பெயரில் குலுக்கல் சீட்டை நடத்தி வணிக லாபம் அடைந்தது நேர்மையற்ற செயல் என்று மூன்று வழக்குகளில் நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதன் விவரம் வருமாறு.

கடந்த 2022 அக்டோபர் மாதத்தில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன்   விநியோகஸ்தரான திருச்செங்கோடு சாலையில் உள்ள கூட்டுறவு சங்கம்  நடத்தும் பெட்ரோல் பங்கில் நாமக்கல்லை சேர்ந்த சுப்புராயன், சுப்ரமணி  ஆகியோர் பெட்ரோல் போட சென்றுள்ளனர்.  இதே மாதத்தில் சுப்பராயன் மோகனூர் சாலையில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போட சென்றுள்ளார். இவர்களுக்கு ரூபாய் 200/-க்கு மேல் பெட்ரோல் வாங்கினால் பரிசு கூப்பன் ஒன்று வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள்  பெட்ரோல் பங்க் ஊழியர் கூறியபடி ரூபாய் 200/-க்கு மேல் பெட்ரோல் வாங்கி பரிசு கூப்பன் பெற்றுள்ளார்கள். கூப்பன்களை வாங்கிய பின்னர் பரிசு குலுக்கல் முறையில் வழங்கப்படுகிறது என்பது அவர்களுக்கு தெரிய வந்துள்ளது.  இத்தகைய செயல் நேர்மையற்ற வணிக நடைமுறை என்று மூன்று வழக்குகளை நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் அவர்கள் தாக்கல் செய்திருந்தார்கள். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஒவ்வொரு வழக்கிலும் ரூ 3,000/- இழப்பீடாகவும் செலவு தொகையாகவும்  நான்கு வாரங்களுக்குள் வழங்க   எண்ணெய் நிறுவனத்திற்கு  உத்தரவு பிறப்பித்துள்ளது.

க.கதிர்வேல்
க.கதிர்வேல்
க.கதிர்வேல், ஊடகவியலார்

தொடர்புடைய கட்டுரைகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -Central Learning campus

சமீபத்திய கட்டுரைகள்