பெரும்பாலும் ஒவ்வொரு மனிதரும் பிறந்தது முதல் இறப்பு வரை தினமும் பாலை அல்லது பாலால் உற்பத்தி செய்யப்பட்ட பொருளை உட்கொள்கிறார். இத்தகைய நிலையில் பால் மனிதனின் உணவுகளில் முக்கியமான ஒன்றாக அங்கம் வகிக்கிறது. உலகத்திலேயே அதிகம் பால் உற்பத்தி செய்யும் நாடு இந்தியாவாகும்.
பொதுவாக, 100 மில்லி அளவுள்ள பாலில் 3.39 கிராம் புரோட்டீன், 2.06 கிராம், கொழுப்புச்சத்து 4.86 கிராம், சர்க்கரை 5.32 கிராம், நார்ச்சத்து, கால்சியம், பொட்டாசியம் 153 மில்லி கிராம், சோடியம் 42 மில்லி கிராம், பாஸ்பரஸ், மக்னீசியம், வைட்டமின்கள் உள்ளிட்ட சத்துக்கள் உள்ளன. இதில் 52 கிராம் கலோரிகளும் 216 kj, 52 kcal அளவு ஆற்றலும் உள்ளது. இந்த விகிதமானது மாட்டுப்பால், எருமை பால் போன்ற வகைகளுக்கு ஏற்ப மாற்றம் உள்ளதாகும்.
சத்தான வளத்தை கொண்டுள்ள பாலை ஒரு நாளுக்கு நானூறு மில்லி அளவுக்கு ஒவ்வொரு மனிதனும் எடுத்துக் கொள்ளலாம். இந்த அளவை தாண்டும் போது அஜீரண கோளாறுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. பாலில் லாக்டோஸ் எனும் சர்க்கரை உள்ளது. அதை ஜீரணிக்க நமது குடலில் லாக்டேஸ் எனும் என்சைம் இருக்க வேண்டும். இந்த என்சைம் குறைபாடு உடையவர்களுக்கு பால் ஒவ்வாத பொருளாகும்.
சத்து மிகுந்த பால் பலரின் உணவாக இருக்கும் நிலையில் தற்போது சில இடங்களில் கிடைக்கும் பாலின் உண்மை நிலையை பார்க்கும் போது பால் பாய்சனாக (விஷமாக) மாறிவிடுமோ? என்ற அச்சம் தோன்றுகிறது. அதாவது, உடலுக்கு கேடு விளைவிக்கக் கூடிய பானமாக மாறிவிடுமோ? என்ற பயம் ஏற்படுகிறது.
முதலாவதாக, இயற்கையான புல்வெளிகளில் பால் தரும் கால்நடைகள் அவற்றுக்கு தேவையான உணவுகளை எடுத்துக் கொள்வது குறைந்துள்ளது. மாறாக, பால் தரும் பசுமாடு, எருமை போன்ற கால்நடைகளிடமிருந்து அதிக பாலை பெறுவதற்காக ரசாயனம் கலந்த உணவுகளையும் மருந்துகளையும் கால்நடைகளுக்கு வழங்குவதால் அவற்றிடம் இருந்து கிடைக்கும் பால் ரசாயன கலப்பான பாலாகவே உள்ளது.
இரண்டாவதாக பாலில் லாபத்திற்காக கலப்படம் செய்வது அதிகரிக்கும் போதும் பாலின் நன்மைகள் நமக்கு கிடைப்பதில்லை. மாறாக, உடலுக்குத் தீங்கு விளைவிக்க கூடிய பொருட்களும் பாலுடன் இணைந்து நமது உடலுக்குள் செல்கிறது.
மூன்றாவதாக, பாலை பாக்கெட்டுகளில் அடைத்து அதிக நாட்களுக்கு விற்பனை செய்ய வேண்டும் என்பதற்காக பாலுடன் பிரிசர்வேட்டிவ்ஸ் எனப்படும் ரசாயன கலவை சேர்ப்பது உடலுக்கு தீங்கை ஏற்படுத்துகிறது.
தற்போது ஆர்கானிக் காய்கறிகள் எனக் கூறப்படும் ரசாயன கலப்பில்லாத காய்கறிகளின் விற்பனை சந்தையில் பிரபலமாக உள்ளது போல இயற்கையான தோட்டங்களில் மேய்ந்து எவ்வித ரசாயன உணவுகளும் மருந்துகளும் வழங்காத நிலையில் உள்ள மாடு மற்றும் எருமைகளில் இருந்து பெறப்பட்ட பால் தயாரிக்கப்பட்டு பாக்கெட்டுகளில் அடைக்காமல் அன்றன்றைய நாட்களிலேயே விற்பனை செய்யும் கலாச்சாரம் பல இடங்களில் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். அதே சமயத்தில் உடலுக்கு தீங்கு விளைவிக்காமல் இருக்கும் வகையில் பாக்கெட்டுகளில் விற்கப்படும் பாலை பொறுத்து எவ்வித பிரச்சனையும் இல்லை என்பதும் பதிவு செய்யத்தக்கதாகும்.