spot_img
November 15, 2024, 3:49 am
spot_img

ஆன்லைன் விற்பனை அதிகரிப்பால் கடந்த ஆண்டு 2 லட்சம் கடைகள் மூடல் –  நன்மைகள், தீமைகள் என்ன?- நுகர்வோர் பூங்காவின் இருநூறாவது கட்டுரை

அகில இந்திய நுகர்வோர் பொருட்கள் விநியோக நிறுவன கூட்டமைப்பு சமீபத்தில் இந்திய போட்டி ஆணையத்திடம் (Competition Commission of India) புகார் ஒன்றை சமர்ப்பித்து இருப்பதாக தெரிகிறது. இதில் ஆன்லைன் வணிகத்தால் கடந்த ஓராண்டில் மட்டும் மெட்ரோ நகரங்களில் 90 ஆயிரம் கடைகளும் நடுத்தர நகரங்களில் 60,000 கடைகளும் சிறு நகரங்களில் 50,000 கடைகளும் மூடப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர் ஆன்லைன் வணிகத்தை முறைப்படுத்த தக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய அரசுக்கு உத்தரவிடுமாறு இந்திய போட்டி ஆணையத்திடம் இந்த புகாரில் கேட்கப்பட்டுள்ளது.

2023 ஆம் ஆண்டில், இந்தியா முழுவதும் ஆன்லைன் மூலமாக பொருட்களை வாங்குபவர்களின் எண்ணிக்கை சுமார் 25 ஆயிரம் கோடி மக்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலமாக பொருட்களை வாங்குபவர்களின் எண்ணிக்கை 2027 ஆம் ஆண்டில் 42 கோடி மக்களாக அதிகரிக்கும் என்று கணக்கிடப்படுகிறது.

தற்போதைய ஆன்லைன் விற்பனையில் மெட்ரோ மற்றும் முதல் நிலை நகரங்களில் 50 சதவீத விற்பனையும் இரண்டாம், மூன்றாம் மற்றும் நான்காம் நிலை நகரங்களில் 50 சதவீத விற்பனையும் நடைபெறுவதாக தெரிகிறது. மெட்ரோ மற்றும் முதல் நிலை நகரங்களில் பெரும்பாலானோர் பொருட்களை வாங்குவதற்கு முன்பதிவு செய்யும் போதே ஏதாவது ஒரு வகையில் ஆன்லைனில் பணத்தை செலுத்தி விடுகிறார்கள். இரண்டாம், மூன்றாம் மற்றும் நான்காம் நிலை நகரங்களில் ஆன்லைனில் பணம் செலுத்தினால் ஏதாவது பிரச்சினை ஏற்படுமா? என கருதுவதாலே பொருளை பெறும்போது பணம் செலுத்தும் முறையை பெரும்பாலானோர் கடைப்பிடிக்கிறார்கள். 

பெருநகரங்களில் கிடைக்கக்கூடிய பொருட்களையும் வசிக்கும் பகுதியில் இல்லாத பொருட்களையும் ஆன்லைன் மூலமாக வீட்டிலிருந்தே வாங்க முடிகிறது. பெரு நகரங்களில் வாழக்கூடியவர்கள் பல கடைகளுக்கு அலைந்து பொருளைத் தேர்ந்தெடுத்து வாங்க வேண்டிய சிரமம் இல்லாமல் பொருட்களை ஆன்லைன் மூலம் வீட்டிலிருந்து வாங்க முடிகிறது. கடைகளில் பொருட்களுக்கு குறிப்பிடப்படும் அதிகபட்ச விலையை காட்டிலும் பல நேரங்களில் தள்ளுபடி நிலையில் விலையில் ஆன்லைன் நிறுவனங்கள் பொருட்களை விற்பனை செய்வது நுகர்வோருக்கு உபயோகமாக உள்ளது.

இதே சமயத்தில் ஆன்லைன் மூலம் பொருட்களை வாங்குவதிலும் பலருக்கு பிரச்சனைகள் ஏற்படுகின்றன. ஆன்லைனில் ஒரு பொருள் குறித்து தெரிவிக்கப்படுவதை நம்பி பணம் செலுத்தி பொருட்களை பெறுகின்ற போது சில ஏமாற்றங்களும் ஏற்படுகின்றன. அந்த வகையில் பெறக்கூடிய பொருள் எதிர்பார்த்தது போல அல்லாமல் இருக்கலாம். உதாரணமாக, ஒருவர் ஒரு சட்டையை வாங்க ஆன்லைனில் பணம் செலுத்தி முன்பதிவு செய்து பின்னர் அவருக்கு வந்த சட்டையை பார்த்த போது ஆன்லைனில் சொல்லப்பட்டதை போல அல்லாமல் வடிவமைப்பும் சட்டையின் வண்ணமும் சற்று மாறி இருக்கிறது.  

நாம் ஒரு பொருளை முன் பதிவு செய்த நிலையில் வேறு ஒரு பொருள் விநியோகிக்கப்பட கூடிய சூழ்நிலைகளும் உள்ளன. உதாரணமாக, நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தில் இருக்கும் ஒருவர் ரூ  50,000/- செலுத்தி மொபைல் போன் ஒன்றை முன்பதிவு செய்த நிலையில் அவருக்கு வந்த பார்சலில் இருந்தது சென்ட் பாட்டலாகும். விற்பனை செய்த நிறுவனம் பொருளை மாற்றி தர மறுத்து விட்டதால் தற்போது அவர் நுகர்வோர் நீதிமன்றத்திற்கு அலைந்து கொண்டுள்ளார். 

ஆயிரக்கணக்கான ஆன்லைன் நிறுவனங்கள் நாட்டில் செயல்படக்கூடிய நிலையில் பல்லாயிரக்கணக்கான பணியாளர்கள் ஆன்லைன் டெலிவரியை செய்கின்றனர். இதில் சில டெலிவரி நபர்களின் தவறான நடவடிக்கைகளும் சில குற்றங்களுக்கு காரணமாக அமைகின்றன. டெலிவரி செய்வது மற்றும் டெலிவரி பணியாளர்கள் நடைமுறைகள் குறித்த ஒழுங்கு முறைகள் எதுவும் இல்லை. ஆன்லைனில் பணத்தை செலுத்தும் போது சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு பணம் செல்லாததால் பணத்தை பொருளை பெறுவதிலும் பணத்தை திரும்பப் பெறுவதிலும் பலருக்கு பிரச்சனைகள் ஏற்பட்டு வருகின்றன.

ஆன்லைனில் பொருட்களை வாங்கிய பிறகு பிரச்சனை ஏற்பட்டால் நுகர்வோர் நீதிமன்றத்திற்கு செல்லும் போது, தாங்கள் ஆன்லைன் தளம் மட்டுமே என்றும் விற்பனையாளர்கள் அல்ல என்றும் விற்பனையாளர்கள் மீது மட்டுமே வழக்கு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் பாதங்களுக்கும் விற்பனையில் ஏற்பட்ட பிரச்சனைக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்றும் ஆன்லைன் விற்பனை வெப்சைட்டை நடத்துபவர்கள் வாதம் செய்கின்றனர்

நாடு முழுவதும் உள்ள சிறு சிறு வர்த்தக நிறுவனங்கள் ஆன்லைன் போட்டியை சமாளிக்க முடியாமல் முற்றிலும் மூடக்கூடிய ஆபத்து ஏற்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது. அவ்வாறு ஏற்படும் போது போட்டி போட்டுக் கொண்டு தள்ளுபடி விலையில் பொருட்களை விற்பனை செய்யும் ஆன்லைன் நிறுவனங்கள் பொருட்களின் விலையை மிக அதிகமாக உயர்த்தக்கூடிய ஆபத்தும் உள்ளது என்பதை கவனிக்க வேண்டும். இதனால் உள்ளூர் கடைக்காரர்களும் பாரம்பரிய வணிக நடைமுறையை பின்பற்றுவதோடு ஆன்லைனில் பொருட்களை விற்பதற்கான பழக்கத்தையும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். 

பெரிய ஆன்லைன் நிறுவனங்கள் மிக அதிக அளவிலான கோடிகளில் வணிகத்தை புரியும் போது சிறு வணிகர்கள் பாதிக்கப்படுகின்றனர். அதே சமயத்தில் ஆன்லைன் நிறுவனங்களால் பலருக்கு வேலை வாய்ப்பு ஏற்படுகிறது. இருந்தபோதிலும் அனைவருக்கும் பரவலாக கிடைக்க வேண்டிய லாபம் குறிப்பிட்ட சில ஆன்லைன் நிறுவனங்களுக்கு செல்கிறது என்பதையும் பல ஆன்லைன் நிறுவனங்கள் வெளிநாட்டில் இருந்து செயல்படக் கூடிய நிலையில் நமது நாட்டின் பணம் வெளிநாடுகளுக்கு அதிகமாக சென்றடைவதால் அந்நிய செலாவணி பிரச்சனை ஏற்படக்கூடும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஆன்லைனில் பொருட்களை வாங்குவது தவிர்க்க இயலாத நிலையாக மாறிவிட்ட சூழலில் ஆன்லைன் பொருட்கள் விற்பனை மற்றும் ஆன்லைன் பொருட்கள் டெலிவரி குறித்த தேசம் தழுவிய, பாதுகாப்பான, ஒருமித்த வரைமுறைகளை (National Unified safe Regulations for online sales and delivery system) உருவாக்க வேண்டிய தருணம் இதுவாகும்.

நுகர்வோர் பூங்கா
நுகர்வோர் பூங்கா
நுகர்வோர் பூங்காவின் படைப்பு

தொடர்புடைய கட்டுரைகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -Central Learning campus

சமீபத்திய கட்டுரைகள்