டெல்லியில் துக்ளக் சாலையில் அரசு இல்லத்தில் வசிக்கும் டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் வீட்டில் கடந்த 14 ஆம் தேதி இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அங்கு சென்ற தீயணைப்பு படையினர் தீயை அணைத்தனர். அப்போது நீதிபதி வீட்டில் உள்ள ஒரு அறையில் கட்டு கட்டாக பணம் இருந்துள்ளது. இது குறித்து அரசுக்கும் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணாவுக்கும் தகவல் வழங்கப்பட்டது.
நீதிபதி வீட்டில் பணம் கைப்பற்றப்பட்டது குறித்து டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவு பிறப்பித்ததை தொடர்ந்து விசாரணை அறிக்கையை அவர் கடந்த 22 ஆம் தேதி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் சமர்ப்பித்துள்ளார். பஞ்சாப் ஹரியானா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஷீல் நாகு, இமாச்சல பிரதேச உயர் நீதி மன்ற தலைமை நீதிபதி ஜி.எஸ். சந்தவாலியா, கர்நாடக உயர் நீதி மன்ற நீதிபதி அனு சிவராமன் ஆகியோர் அடங்கிய குழுவை விரிவான விசாரணைக்காக உச்சநீதிமன்றம் அமைத்துள்ளது.
இந்தப் பிரச்சனை உச்ச நீதிமன்றத்தின் கவனத்திற்கு வந்தவுடன் யஷ்வந்த் வர்மாவை அலகாபாத் உயர் நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்தது. உச்சநீதிமன்றம். தற்போது இடமாற்ற உத்தரவை நிறுத்தி வைத்துள்ளதோடு அவருக்கு எவ்வித நீதிமன்ற விசாரணை அலுவல்களை வழங்க வேண்டாம் என்று டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்நிலையில் நீதிபதி யஷ்வந்த் வர்மா விளக்க கடிதம் ஒன்றை சமர்ப்பித்துள்ளார். வீட்டில் தீப்பற்றிய போது, தான் மத்திய பிரதேசத்தில் இருந்ததாகவும் மார்ச் 15 மாலை தான் டெல்லி திரும்பியதாகவும் வீட்டில் தீ பரவிய போது தனது மகளும் பணியாட்களும் வீட்டில் இருந்ததாகவும் ஆனால், தீ அணைக்கப்பட்ட பிறகு அவர்கள் சேமிப்பு அறையில் பணம் எதையும் பார்க்கவில்லை என்றும் டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தன்னிடம் வீடியோவை காட்டிய பிறகே, எரிந்த நிலையில் இருந்த பணம் குறித்து தனக்கு தெரியவந்ததாக நீதிபதியின் விளக்க கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இதுநாள் வரை தானோ அல்லது தன் குடும்பத்தினரோ அந்த அறையில் பணத்தை வைத்ததில்லை என்றும் திறந்த நிலையில் இருக்கக்கூடிய, எல்லோரும் சென்று வரக்கூடிய ஓர் அறையில் யாராவது பணம் வைப்பார்களா என்பது நம்ப முடியாததாக உள்ளது என்றும் தாங்கள் வசிக்கும் வீட்டின் பகுதியிலிருந்து அந்த அறை முற்றிலும் பிரிக்கப்பட்டிருப்பதாகவும் தனது வீட்டுக்கும் அந்த அறைக்கும் இடையே ஒரு சுவர் இருப்பதாகவும் இதில் தொடர்புபடுத்தப்படும் பணத்தை தன்னிடம் காட்டவோ அல்லது கொடுக்கவோ இல்லை என்றும் தன்னுடைய பணியாட்களிடமும் இதுதொடர்பாக தான் விசாரித்ததாகவும், எந்த பணமும் அந்த அறையிலிருந்து என்றும் அந்த பணம் குறித்து எனக்கோ, என் குடும்பத்தாருக்கோ எதுவும் தெரியாது என்றும். அந்த பணத்துடன் எங்களுக்கு எந்தவித தொடர்பும் இல்லை என்றும் நீதிபதியின் விளக்க கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது.
உயர் நீதிமன்ற நீதிபதியாக பத்தாண்டுகளுக்கும் மேலாக இருந்து உருவாக்கிய என்னுடைய புகழை இந்த சம்பவம் சிதைத்துள்ளது. இதுநாள் வரை தனக்கு எதிராக எந்த குற்றச்சாட்டுகளும் இல்லை என்றும் தான் நீதிபதியாக இருந்த காலம் முழுவதையும் விசாரிக்கலாம் என்றும் நீதிபதியின் விளக்க கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது.
உச்ச நீதிமன்றத்தால் நியமனம் செய்யப்பட்டுள்ள குழு விசாரணையை முடிக்க காலக்கெடு எதுவும் நிர்ணயம் செய்யப்படவில்லை. சேமிப்பு அறையில் பாதி எரிந்த நிலையில் இருந்த 4-5 சாக்கு மூட்டைகளில் இருந்து பணம் கண்டெடுக்கப்பட்டதாக டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதியின் விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் அந்த வீட்டில் வசிப்பவர்கள், வேலையாட்கள் மற்றும் தோட்டக்காரர்கள் மட்டும் தான் சேமிப்பு அறைக்கு செல்ல முடியும் என்றும் எரிந்த நிலையில் இருந்த பணம் தொடர்பாக டெல்லி காவல்துறையால் வழங்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களும் அந்த அறிக்கைகளில் உள்ளன. எனினும், அந்த அறிக்கையின் சில பகுதிகள் கருப்பு நிறத்தில் மறைக்கப்பட்டுள்ளன என்றும் பிபிசி செய்தி தொகுப்பில் கூறப்பட்டுள்ளது.
குற்றம் நிரூபிக்கப்பட்டாலும் உயர்நீதிமன்ற நீதிபதிகளை பதவி நீக்கம் செய்ய பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் ஆதரவு வேண்டும். இந்திய வரலாற்றில் இத்தகைய நிகழ்வு சுதந்திரம் பெற்ற பின்னர் கடந்த 77 ஆண்டுகளாக நடந்ததில்லை. சமீபத்தில் ஊழல் புகார்களை விசாரிக்கும் லோக்பால் அமைப்பு உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு எதிரான லஞ்சப் புகாரை விசாரிக்க கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த விவரத்தையும் அறிந்து கொள்வது அவசியமாகும். (படத்துக்கு கீழ் கட்டுரை தொடர்கிறது)

பிரதமர், மத்திய அமைச்சர்கள், மத்திய அரசின் உயர் அதிகாரிகள் முதல் கடை நிலை ஊழியர் வரை இருப்பவர்கள் ஆகியோர் மீதான லஞ்ச புகார்களை விசாரிக்க அமைக்கப்பட்டது லோக்பால் அமைப்பாகும். இதைப் போலவே, மாநில முதலமைச்சர், மாநில அமைச்சர்கள், மாநில அரசின் உயர் அதிகாரிகள் முதல் கடை நிலை ஊழியர் வரை இருப்பவர்கள் ஆகியோர் மீதான லஞ்ச புகார்களை விசாரிக்க அமைக்கப்பட்டுள்ளது லோக் ஆயுக்தா அமைப்பாகும். தற்போது லோக்பால் அமைப்பின் தலைவராக முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ.எம். கான்வில்கர் இருந்து வருகிறார்.
ஒரு உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக பதவி வகிப்பவர் வழக்கறிஞராக பணியாற்றியபோது அவரது கட்சிக்காரராக இருந்த ஒரு தனியார் நிறுவனத்திற்கு சாதகமாக உத்தரவு பிறப்பிக்குமாறு சக உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதி ஒருவருக்கும் மாவட்ட நீதிபதி ஒருவருக்கும் அழுத்தம் தந்தார் என்பது குறித்து ஒருவர் ஊழல் புகார்களை விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள லோக்பால் அமைப்பில் புகார் சமர்ப்பித்துள்ளார். கடந்த 27 ஜனவரி 2025 அன்று சம்பந்தப்பட்ட உயர்நீதிமன்ற நீதிபதிக்கு நோட்டீஸ் நோட்டீஸ் அனுப்பவும் அவர் பதில் தரவும் லோக்பால் அமைப்பு உத்தரவிட்டது.

இந்நிலையில் லோக்பால் அமைப்பானது நீதிபதிக்கு அனுப்பிய அறிவிப்பை தானாக முன்வந்து வழக்காக பதிவு செய்தது உச்ச நீதிமன்றம். நீதிபதிகள் பி.ஆர். கவாய், சூர்யா காந்த் மற்றும் ஏ.எஸ். ஓகா ஆகியோர் அடங்கிய சிறப்பு உச்ச நீதிமன்ற அமர்வில் கடந்த 25 பிப்ரவரி 2025 அன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. உயர்நீதிமன்ற நீதிபதிகள், உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி, உச்சநீதிமன்ற நீதிபதிகள், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோர் அரசியலமைப்பு மூலமாக பதவி வகிப்பவர்கள் ஆவார்கள். இவர்கள் மீது விசாரணை நடத்த லோக்பால் அமைப்புக்கு அதிகாரம் இல்லை என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்ததோடு நீதிபதிக்கு லோக்பால் அனுப்பிய அறிவிப்பு மீதான விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தது இந்த அமர்வு. இந்த வழக்கு தொடர்பாக 18 மார்ச் 2025 அன்று பதில் தருமாறு மத்திய அரசுக்கும் லோக்பால் அமைப்பின் பதிவாளருக்கும் உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம்.

கடந்த 18 மார்ச் 2025 அன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது லோக்பால் அமைப்பிடம் புகார் தெரிவித்திருந்த தனிநபர் உச்ச நீதிமன்றத்தின் முன்பு ஆஜரானார். அப்போது தங்களுக்கு ஏதாவது சட்ட உதவி செய்ய வேண்டுமா? என்று அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர் லோக்பால் அமைப்பையும் நீதித்துறையையும் தான் மதிப்பதாகவும் தான் லோக்பால் அமைப்பிடம் எழுதிக் கொடுத்த விவரங்களை பரிசீலிக்க வேண்டும் என்றும் சட்ட உதவி தேவை இல்லை என்றும் தெரிவித்தார். “உங்கள் அடையாளத்தை, ரகசியத்தன்மையை நாங்கள் பாதுகாப்போம், நீங்கள் வெளிப்படுத்த முயற்சிக்கும் காரணத்தை நாங்கள் பரிசீலிப்போம்,” என்று புகார்தாரரிடம் நீதிபதி கவாய் கூறினார்.
இந்த வழக்கில் நீதிமன்றத்துக்கு உதவுவதற்காக மூத்த வழக்கறிஞர் ரஞ்சித் குமார் அவர்களை அமிகஸ் கியூரியாக நியமித்து உச்ச நீதிமன்றம் அமர்வு உத்தரவு பிறப்பித்தது. நீதிபதிகள் மீதான புகார்களை விசாரிக்கும் அதிகாரம் லோக்பால் அமைப்புக்கு உள்ளதா? என்பதை முடிவு செய்வதற்கான அடுத்த விசாரணையை 15 ஏப்ரல் 2025 ஆம் தேதிக்கு இந்த அமர்வு ஒத்தி வைத்துள்ளது.
உயர்நீதிமன்ற நீதிபதிகள், உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி, உச்சநீதிமன்ற நீதிபதிகள், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகிய அரசியலமைப்பு சட்டத்தால் வழங்கப்பட்டுள்ள நீதிபதிகள் மீதான புகார்களை லோக்பால் அமைப்பு விசாரிக்க முடியுமா? என்பதுதான் தற்போது உச்ச நீதிமன்றம் எழுப்பி உள்ள கேள்வியாகும். மற்ற கீழ் நீதிமன்ற நீதிபதிகள் மீது லோக்பால் அல்லது லோக் ஆயுக்தா விசாரணை நடத்த முடியுமா? என்பது குறித்து உச்ச நீதிமன்றம் எவ்வித கருத்தையும் தெரிவிக்கவில்லை.
நுகர்வோர் பூங்கா (The Consumer Park) கருத்து: லஞ்சம் ஊழல் இல்லாத சமூகமே நாட்டின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்பதை யாராலும் மறுக்க இயலாது. இத்தகைய சமூகத்தை உருவாக்குவது எப்படி? என்பதுதான் கேள்விக்குறியாகும்.