மருத்துவம், விண்வெளி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முன்னணியில் உள்ள அமெரிக்க தொழிலதிபரான எலன் மாஸ்கின் நிறுவனங்களில் புதிய படைப்பாக தொடங்கப்பட்டுள்ள நியூரோ லிங்க் என்ற நிறுவனம் மனித மூளையில் ‘சிப்’ பொருத்தும் ஆராய்ச்சிகளில் ஈடுபட்டுள்ளது. மூளையில் ‘சிப்’ ஒன்றைப் பொருத்தி அதனை கணினியுடன் (computer) இணைப்பதன் மூலம் அதிதீத பயன்களை பெற முடியும் என்ற நம்பிக்கையில் இந்த நிறுவனம் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது.
நியூரோ லிங்க் நிறுவனம் குரங்குகளின் மூளையில் சிப்பை பொருத்தி ஆய்வுகளை மேற்கொண்டு இருந்தது. இந்த ஆய்வு வெற்றியடைந்ததாகவும் மனித மூளையில் ‘சிப்’ பை பொருத்துவதன் மூலம் மனித குலத்துக்கு பெரும் பயன் கிடைக்கும் என்று இந்த நிறுவனம் இணையதளத்தில் வெளியிட்ட செய்தியில் தெரிவித்திருந்தது. குரங்கின் மூளையில் ‘சிப்’பை பொருத்த ஆராய்ச்சியில் இந்த நிறுவனம் ஈடுபட்ட போது விலங்கு பாதுகாப்பு ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மனிதனின் மூளையில் ‘சிப்’பை பொருத்தும் ஆராய்ச்சிக்கு அமெரிக்க அரசு அனுமதி அளித்துள்ளதாக இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால் ,அமெரிக்க உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு நிர்வாகம் இது குறித்து எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை.
மண்டை ஓட்டில் துளையிட்டு இந்த சிப்பை பொருத்தி இந்த சிப்பையும் கணினியையும் இணைத்து மூளையை இயக்க முடியும் என்று நியூரோ லிங்க் நிறுவனம் நம்புகிறது. இதன் மூலம் மனித மூளைக்கு சிக்னல்களை வழங்கி நரம்புகளை தூண்டச் செய்து உடல்நலம் பாதிக்கப்பட்டு இருப்பவர்களை குணமடைய செய்வதற்கு முயற்சியாக இந்த ஆராய்ச்சி பார்க்கப்படுகிறது. இந்த ஆராய்ச்சி வெற்றியடைந்தால் மருத்துவ துறையில் மிகப்பெரிய சாதனையாக அமையும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. குறிப்பாக, நரம்பு பிரச்சனையால் கண்பார்வை இழந்தவர்கள், பக்கவாதம் ஏற்பட்டு பாதிப்படைந்தவர்கள் உட்பட பல நரம்பியல் பிரச்சனைகளை சந்திக்கும் அனைவருக்கும் மிகச்சிறந்த தீர்வை இந்த ஆராய்ச்சி வழங்கக் கூடியதாக அமையும்.
நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த நபர் ஒருவர் தனது கால்களை இயக்க முடியாமல் தவித்த நிலையில், இது போன்ற சிப்புகளை மூளையில் பொருத்தி, அதன் மூலம் அவர் நடந்து செல்லுமளவுக்கு சுவிச்சர்லாந்து ஆராய்ச்சியாளர்கள் ஒரு முயற்சியை மேற்கொண்டு அதில் வெற்றியும் பெற்றுள்ளனர்.
எலன் மாஸ்க் அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஒரு பதிவில் வருங்காலத்தில் மொபைல் ஃபோன்களுக்கு வேலை இல்லாமல் போய்விடும் என்றும் மூளையில் பொருத்தவரிடம் சிப் மூலம் கணினிகளை இயக்கவும் கணினி வழியாக மற்றவர்களுடன் பேசிக் கொள்ளவும் வாய்ப்பு ஏற்படும் என்று தெரிவித்துள்ளார். இதைப்போலவே மனிதன் நினைப்பதை சிப் மூலமாக செயல்படுத்த இயலும் என்றும் அவரது வாதங்கள் உள்ளன. ஆனால், இவை நடைமுறை சாத்தியம் அரிதாகவே இருப்பதாக கருதப்படுகிறது. இருப்பினும் அறிவியல் எத்தகைய புதிய வழிகளை உருவாக்கும்? என்று யாராலும் உறுதியாக கூற முடியாது.
கற்பனை செய்ய முடியாத அளவில் செயற்கை நுண்ணறிவு (artificial intelligence) தொழில்நுட்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டு வெற்றி பெற்றுள்ளது அதே நேரத்தில் செயற்கை நுண்ணறிவு மூலம் மிகுந்த ஆபத்துக்களையும் மனிதகுலம் சந்தித்து வருகிறது. இதனை நெறிப்படுத்துவதற்கான (regulate) நடைமுறைகள் தொடங்கப்பட்டிருக்கின்றன இதே போலவே மூளையில் சிப்பை பொருத்தும் ஆராய்ச்சிகள் மூலமாக நன்மைகள் ஏற்படுவதைப் போன்று தீமைகளுக்கான வாய்ப்புகளும் உருவாகும் என்பதை மறுப்பதற்கு இல்லை.