spot_img
November 11, 2024, 5:15 am
spot_img

இன படுகொலைகளுக்கு காரணமான வெறுப்பு பேச்சு

சமீபத்திய ஆண்டுகளில், உலகம் பல பாரிய கொடுமைகளை கண்டுள்ளது. இந்த நிகழ்வுகளில் பலவற்றில் வெறுப்பூட்டும் பேச்சு “இனப்படுகொலை உட்பட அட்டூழியக் குற்றங்களுக்கு முன்னோடியாக” அடையாளம் காணப்பட்டது. வெறுப்பைப் பரப்புவதற்கு சமூக ஊடகங்கள் மற்றும் டிஜிட்டல் தளங்களைப் பயன்படுத்துவது ஒப்பீட்டளவில் சமீபத்தியது என்றாலும் அரசியல் ஆதாயத்திற்காக பொது உரையாடலை ஆயுதமாக்குவது   புதிதல்ல. கடந்த 75 ஆண்டுகளில் இனப்படுகொலை உள்ளிட்ட அட்டூழியக் குற்றங்களுக்கு முன்னோடியாக வெறுப்புப் பேச்சு உள்ளது.

இரண்டாம் உலகப் போரின் போது ஐரோப்பிய யூதர்களின் இனப்படுகொலை (1941)  ஹோலோகாஸ்ட் சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்பு பேச்சுடன் தொடங்கியது. கம்போடிய இனப்படுகொலையின் (1975) போது வெறுக்கத்தக்க சொற்பொழிவின் மூலம் அறிவாளிகள், நகரவாசிகள்,   எதிர் கருத்துடையோர், இன மற்றும் மத சிறுபான்மையினர் ஆகியோர் மக்களின் எதிரிகள் என்று பிரச்சாரம் செய்யப்பட்டது. 

வெறுப்பு பேச்சு, ஆதாரமற்ற வதந்திகளை பரப்புவதன் மூலம்    ருவாண்டாவில் துட்சிகளுக்கு எதிரான இனப்படுகொலையையும் இன பதட்டங்களையும் அதிகப்படுத்தியது (1994). மியான்மரில் ரோஹிங்கியா முஸ்லிம் சிறுபான்மையினருக்கு எதிராக இனப்படுகொலையும் (2017) இழிவான மற்றும் மனிதாபிமானமற்ற வார்த்தைகளால் ஏற்றப்பட்ட வெறுப்பு மற்றும் தவறான தகவல் பிரச்சாரத்தால் ஏற்பட்டதாகும். 

வெறுக்கத்தக்க பேச்சு எப்பொழுதும் இருந்து வந்தாலும்  அதன் அதிகரித்து வரும் தாக்கம் இலக்கு வைக்கப்பட்டவர்களுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த சமூகங்களுக்கும் பேரழிவை ஏற்படுத்தும். வெறுப்பு பேச்சு என்பது சகிப்புத்தன்மை,   பன்முகத்தன்மை மற்றும் மனித உரிமைகள்  மற்றும் கொள்கைகளின் சாராம்சத்தின் மதிப்புகளை மறுப்பதாகும். வன்கொடுமை குற்றங்கள் உட்பட மோதல், பதற்றம் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு அடித்தளமாக இருப்பதால் வெறுப்பின் வெளிப்பாடுகள் சமூக அமைதி மற்றும் வளர்ச்சிக்கு தீங்கு விளைவிக்கும். அரசாங்கங்கள், தனியார் துறைகள், ஊடகங்கள், இணைய நிறுவனங்கள், தலைவர்கள், கல்வியாளர்கள், இளைஞர்கள் மற்றும்  சமூகம் உட்பட அனைத்து தனிநபர்களும் அமைப்புகளும்  வெறுப்பூட்டும் பேச்சுக்கு எதிராக உறுதியாகக் குரல் கொடுக்க வேண்டியது அவசியமாகும். 

வெறுக்கத்தக்க சொல்லாட்சிகள் பரவுவது வன்முறையின் ஆரம்ப எச்சரிக்கையாக இருக்கலாம்.   வரலாறு காட்டுவது போல இனப்படுகொலை மற்றும் வெகுஜன அட்டூழியங்கள் வெறுப்பு வார்த்தைகளால் தொடங்குகின்றன. நாளை ஏற்படக்கூடிய தீங்குகளைத் தடுக்க இன்று வெறுப்பூட்டும் பேச்சுகளுக்கு தீர்வு காண்பதற்கான நமது கூட்டுப் பொறுப்பை  அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. ஆனால் வெறுப்பூட்டும் பேச்சை திறம்பட எதிர்ப்பதற்கு சட்டத்திற்கு அப்பாற்பட்ட ஒரு முழுமையான அணுகுமுறை, தடுப்பு நடவடிக்கை தேவைப்படுகிறது.  

வெறுக்கத்தக்க பேச்சை எதிர்த்துப் போராட முதலில் அதன் இயக்கவியலை முழுமையாகப் புரிந்துகொள்ள அதைக் கண்காணித்து பகுப்பாய்வு செய்ய வேண்டும். அதன் பரவலுக்குப் பின்னால் உள்ள உந்துதல்கள் உள்ளிட்டவற்றை   நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.  வெறுப்பு பேச்சு பரப்புதலை அகற்றும் பணியை பள்ளிகள்,   கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் முதலாவது தொடங்க வேண்டும்.  மாணவ, மாணவியர்களுக்கு உரிய வெறுப்பு பேச்சுக்கு எதிரான கல்வியை வழங்குவதற்கு முன்னர் அனைத்து தரப்பு   ஆசிரியர்களுக்கும் வெறுப்பு பேச்சுக்கு எதிரான கல்வியை வழங்குவது அவசியம் ஆகும்.  

அரசு மற்றும் தனியார் அமைப்புகளில் பணியாற்றும் அனைவருக்கும்   வெறுப்பை பேச்சுக்கு எதிரான தக்க நெறிமுறைகளை அரசு வகுக்க வேண்டும்.  குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம், பெண்கள் ஆணையம்,  பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் உள்ளிட்ட ஆணையங்கள் வெறுப்பு பேச்சுக்கு எதிரான மனநிலையை வளர்க்கும் பணியை செய்வதற்கு தக்க அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு   அதற்கான ஏற்பாடுகளை அரசு செய்து தர வேண்டும். 

இந்திய தண்டனைச் சட்டத்தில் அல்லது வேறு வகையில் உரிய சட்ட திருத்தத்தை மேற்கொண்டு வெறுப்பு பேச்சை பரப்பவர்கள் மீது   ஜாமீனில் வழி வர இயலாத வழக்கு பதிவு செய்ய வழி செய்யப்பட வேண்டும்.  குற்றவியல் அரசு வழக்கறிஞர்களுக்கு இத்தகைய வழக்குகளை நடத்த தகுந்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட வேண்டும். உண்மைக்கு புறம்பான கருத்துக்களை, ஒளிநாடாக்களை   சமூக ஊடகங்களில் வெளியிடும் நபர்கள் மீது தக்க நடவடிக்கை எடுப்பதோடு அவ்வாறு வெளியிடப்பட்டவை சம்பந்தப்பட்ட சமூக ஊடகத்திலிருந்து நீக்கம் செய்யப்பட நடவடிக்கை  மேற்கொள்ளப்பட வேண்டும்.

மாவட்ட அளவில் வெறுப்பு பேச்சுக்கு எதிரான ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் பொதுமக்கள் அடங்கிய தன்னார்வ குழுக்களை ஏற்படுத்த வேண்டும்.  வெறுப்பு பேச்சு பரப்பவர்களைப் பற்றி அல்லது அத்தகைய தகவல்கள்  பரவுவது குறித்து தகவல் தருபவர்களுக்கு தக்க சன்மானங்களை தருவதோடு அவரது பெயர்களை வெளியிடாமல் வைத்துக் கொள்ள வேண்டும்.செய்தித்தாள்கள், ஊடகங்கள் மூலமாக வெறுப்பு   பேச்சு பரப்பப்படுவது குறித்த தகவல்களை தகவல்களை எங்கு அனுப்புவது என்பது குறித்த விவரங்கள் வெளியிடப்பட வேண்டும்.

வெறுப்பு பேச்சுக்களை பரப்புதல் குறித்த தகவல்களை திரட்ட மாவட்டத்துக்கு ஒரு கண்காணிப்பாளர் நியமனம் செய்யப்பட வேண்டும்.  காவல்துறையின் உளவு பிரிவினருக்கு இது குறித்த பயிற்சி வழங்கப்பட்டு தக்க அறிவுறுத்தல்கள் வழங்குவதோடு போதிய தகவல்களை முன்கூட்டியே தெரிவிக்க தவறும் காவல்  அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வகை   செய்யப்பட வேண்டும்.  திரையரங்குகளில் வெறுப்பு பேச்சுக்கு எதிரான விளம்பர குறும்படம்   கட்டாயமாக்கப்பட வேண்டும்.  வெறுப்பு, பேச்சுக்கு எதிராக எழுதப்படும் சிறந்த கதை கட்டுரை எழுத்தாளர்களுக்கு ஆண்டுதோறும் விருது வழங்கிய கௌரவிக்கப்படலாம்.  

சுருங்க கூறின், வெறுப்பு பேச்சுக்களை பரப்புவதன் மூலமாக சமூக ஒற்றுமை சீரழிவதோடு மக்களின் அமைதி அழிந்து விடும்   என்ற கருத்தை அனைத்து தரப்பு மக்களுக்கும் கொண்டு செல்ல வேண்டிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அரசின் கடமையாகும். வரலாறு காட்டுவது போல தவறான தகவல்களுடன் சேர்ந்து வெறுப்பூட்டும் பேச்சு இன படுகொலைகளுக்கும் வன்முறைகளுக்கும் காரணமாக அமைந்து விடும் என்பதை மனதில் நிறுத்தி செயல்பட வேண்டிய தருணம் இதுவாகும்.

க.கதிர்வேல்
க.கதிர்வேல்
க.கதிர்வேல், ஊடகவியலார்

தொடர்புடைய கட்டுரைகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -Central Learning campus

சமீபத்திய கட்டுரைகள்