spot_img
July 27, 2024, 8:14 am
spot_img

தனியார் அறக்கட்டளைகள் நடத்தும் ஆன்மீக மையங்களுக்கு செல்லும் போது   கூறப்படும் தல வரலாறு உண்மையா?  என்பதை அறிவது அவசியம்

திருப்பூர் குருநாதர் தெருவில் வசிக்கும் கோவிந்தராவ் மகன் கேசவராவ் (58) என்பவர் கடந்த 2018 ஆம் ஆண்டு கோயம்புத்தூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அதில் அவர் கூறியிருந்ததாவது:  கடந்த 2006 ஆம் ஆண்டு கோயம்புத்தூரில் ஞானாலயா வள்ளுவர் கோட்டம் என்ற பெயரில் ஆசிரமம் வைத்துள்ள திருஞானந்தாசாமி (57) அவர்களை சந்தித்தேன்.  அதன் பின்னர்   அவரது திருப்பூர்   கிளை ஆசிரமத்துக்கு தொடர்ந்து சென்று ஆன்மீக பணிகளை செய்து வந்தேன்.  திருப்பூர் கிளை ஆசிரம  தலைவராக கந்த சுவாமி (69) என்பவரும் செயலாளராக ரவிச்சந்திரன் (65) என்பவரும் இருந்தனர்.

வடலூர் அருகே ஆசிரமம் அமைக்க இடம் வாங்குவதற்கும் தைப்பூச திருவிழா செலவிற்கும் வாக்கி டாக்கி வாங்குவதற்கும் திருப்பூர் கிளை தலைவரும் செயலாளரும் என்னிடம் ரூ 3,35,000/- ஐ சில தவணைகளில் பெற்றார்கள்.  கடந்த செப்டம்பர் 2013 முதல் ஜூன் 2016 வரை 34 மாதங்கள் மாதம் ஒன்றுக்கு ரூபாய் 3,000/-  வீதம் ரூ 1,02,000/- ஐ காயசித்தி என்ற பயிற்சியை வழங்குவதற்காக என்னிடம் அவர்கள் பெற்றுக் கொண்டார்கள்.  இவ்வாறு ரூ  4,47,000/- ஐ நான் முழு மனதுடன் ஆசிரமத்துக்காக வழங்கி உள்ளேன். 

வடலூரில் இடம் வாங்கிய ஆவணத்தை காட்டுமாறு கேட்டபோது அவர்கள் சரிவர பதில் அளிக்கவில்லை.  ஆசிரமத்துக்கு   வருபவர்களிடம் பணம் வசூலிப்பதையே அவர்கள் நோக்கமாகக் கொண்டிருந்தனர்.  இதனை தெரிந்து கொண்ட பின்பு தான்   கொடுத்த பணத்தை திருப்பிக்   கேட்டபோது என்னை அவர்கள் மிரட்டினார்கள். தாம் செலுத்திய பணத்தையும் தமக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு இழப்பீடாக ரூ  2,00,000/- ஐ திருஞானந்தாசாமி  மற்றும் திருப்பூர் கிளை தலைவர், செயலாளர் ஆகியோர் வழங்க வேண்டும் என்று அவர்  வழக்கில்   கேட்டிருந்தார்.

இந்த வழக்கில் ஆசிரமத்தை சேர்ந்த திருஞானந்தா, கந்தசாமி, ரவிச்சந்திரன் ஆகியோர் நீதிமன்றத்தில் அளித்த பதிலில் தெரிவித்துள்ளதாவது: திருஞானந்த சாமிகள் ஞானாலயா வள்ளுவர் கோட்டம் மூலம் ஏழைகளுக்கு அன்னதானம் செய்து வருகிறார். நடமாடும் சத்திய தர்மசாலையையும் சித்த மருத்துவ ஆராய்ச்சி நிலையத்தையும் இமயமலையில் குழந்தைகளுக்கு பள்ளி   ஒன்றையும் நடத்தி வருகிறார்.  வழக்கு தாக்கல் செய்துள்ளவர் தங்களது ஆசிரமக் கொள்கைகளை பின்பற்றுவோர் அல்ல.   தங்கள் ஆசிரமத்துக்கு எந்த நன்கொடையும் வழங்கியது இல்லை.  உறவினர் ஒருவருக்கு சித்த வைத்திய சாலையில் உயரிய சிகிச்சை வழங்கியதற்கு உரிய கட்டணத்தை கூட வழக்கு தாக்கல் செய்துள்ள கேசவ  ராவ் வழங்கவில்லை. 

கடந்த 2016 செப்டம்பரில் கேசவ  ராவ் திருஞானந்த சாமிகளையும் சந்தித்து   திருப்பூர் கிளை தலைவர் பதவியை தமக்கு வேண்டும் என்று கேட்டார். அப்போது சாமிகளும் அப்படியே ஆகட்டும் என்று கூறிவிட்டார். ஆனால் அவர் கிளையில் அன்னதானப் பணிகளை சொந்த காரணங்களால் விட்டு விட்டு சென்று விட்டார். இதனால் மீண்டும் கந்தசாமி, ரவிச்சந்திரன்  ஆகியோரை அவர் வரும் வரை பணிகளை செய்யுமாறு சாமிகள் தெரிவித்தார். இதனால் கோபம் கொண்டு புறம்பான வழக்கை கேசவ   ராவ் தாக்கல் செய்துள்ளார் என பதிலில்   கூறியுள்ளனர்.

விரைவான விசாரணைக்கு கடந்த 2022 ஜூலை மாதம் நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்ட இந்த வழக்கில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிபதி டாக்டர் வீ. ராமராஜ்,  தலைமையிலான அமர்வு வழங்கிய தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.  தனிநபர் அல்லது தனியார் அறக்கட்டளைகள் நடத்தும் ஆன்மீக மையங்களுக்கு செல்லும் போது அந்த இடங்களில் கூறப்படும் தல வரலாறு உண்மையா? என்பதையும் அத்தகைய இடங்களில் உள்ள சாமியார் என கூறப்படுபவர் அல்லது அங்கு   சாமியார் ஒருவர் இருந்ததாக கூறப்படுவது குறித்த சங்கதிகள் உண்மையா? என்பதையும் அத்தகைய மையங்களில் நடத்தப்படும் பயிற்சிகள் மற்றும் வழங்கப்படும் சேவைகள்  ஆகியவற்றால் ஏற்படுவதாக கூறப்படும் பலன்கள் அறிவியல் பூர்வமாக சரியானதா? என்பதையும் அறிந்து கொள்ளாமல் 10 ஆண்டுகள் ஒரு ஆசிரமத்தின் பக்தராக இருந்து விட்டு திடீரென ஆசிரமம் பணத்தை நோக்கமாக கொண்டு செயல்படுகிறது என குற்றம்சாட்டியுள்ள நிலையில் அதனை நிரூபிக்க  பயிற்சிக்காகவும் நன்கொடையாகவும் பணம் செலுத்தியதற்கு ரசீதுகள் எதுவும்  இல்லாமல் வழக்கு தாக்கல் செய்துள்ளது ஏற்புடையதல்ல.

ஆசிரம நிர்வாகிகள் தாக்கல் செய்துள்ள பதிலில் வழக்கு தாக்கல் செய்தவர்   தங்கள் கொள்கைகளை பின்பற்றுபவர் அல்ல என்றும் தங்களுக்கு நன்கொடை கொடுத்ததில்லை என்றும் திருப்பூர் கிளை தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோர் சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்து உடையவர்கள் என்றும் கூறி விட்டு   கொள்கைகளை பின்பற்றாதவராக கூறப்பட்ட வழக்கு தாக்கல் செய்த கேசவ  ராவ் தலைவர் பதவி கேட்டதும் திருஞானந்த சாமிகள் அப்படியே ஆகட்டும் என்று கூறியுள்ளதும் அவர் பணியை   விட்டு விட்டு சென்றதால் அவர் வரும் வரை ஏற்கனவே இருந்தவர்கள் பார்க்கட்டும்  எனக் கூறியதாக ஆசிரமம் பதிலில் தெரிவித்திருப்பது நம்பும்படியாக இல்லை என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

பயிற்சிக்காகவும் நன்கொடையாகவும் பணம் கொடுத்ததற்கு ஆதாரம்   இல்லாததால் வழக்கை தள்ளுபடி செய்ததோடு நீதிமன்றத்தின் நேரத்தையும் மனித உழைப்பையும் வீணடித்ததற்காக அபராதமாக ரூபாய் 10 ஆயிரம் வழக்கை தாக்கல் செய்த   கேசவ ராவ் நான்கு வார காலத்துக்குள் செலுத்த வேண்டும் என்று நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்பவர்கள் தாங்கள் எவ்வாறு எதிர் தரப்பினருக்கு நுகர்வோர் என்பதை கவனித்து வழக்கு தாக்கல் செய்ய வேண்டும் என்பதே இந்த தீர்ப்பு உணர்த்தும் பாடமாகும்.  ஒரு பொருளை அல்லது சேவையை எதிர் தரப்பினிடம் பெறுவதற்காக பணம் செலுத்துவதற்கு எவ்வித ஆதாரமும் இல்லாமல் வழக்கு தாக்கல் செய்யும்போது வழக்கு தாக்கல் செய்தவர் தங்கள் நுகர்வோர் அல்ல என்ற நிலையை எதிர் தரப்பினர்கள் மேற்கொள்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

சாஜ். ம
சாஜ். ம
சாஜ். ம, வழக்கறிஞர்/ சட்டக் கல்லூரி விரிவுரையாளர்

தொடர்புடைய கட்டுரைகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -Central Learning campus

சமீபத்திய கட்டுரைகள்