தவறான தகவலை கூறி காசோலையை திருப்பிய வங்கி வாடிக்கையாளருக்கு ரூ 50,000/- வழங்க நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு
நாமக்கல் நகரில் நல்லிபாளையத்தில் வசித்து வருபவர் குழந்தைவேல் மகன் ரவிச்சந்திரன் (62) நாமக்கல் நகரில் உள்ள ஐடிபிஐ வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளார். கடந்த 2021 பிப்ரவரி மாதத்தில் வங்கி சேமிப்பு கணக்கில் இருந்து பெறப்பட்ட காசோலை ஒன்றை ரூபாய் நான்கு லட்சத்துக்கு பூர்த்தி செய்து கையொப்பமிட்டு லலிதா என்பவருக்கு வழங்கி பணத்தைப் பெற்றுக் கொள்ளுமாறு ரவிச்சந்திரன் லலிதாவிடம் தெரிவித்துள்ளார். இந்தக் காசோலையை லலிதா அவரது வங்கிக் கணக்கில் வசூலுக்காக தாக்கல் செய்த போது ஐடிபிஐ வங்கியில் இருந்து ரவிச்சந்திரனின் கணக்கில் போதுமான பணம் இல்லை (cheque returned as insufficient funds) என காசோலை திரும்ப வந்துவிட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த லலிதா ரவிச்சந்திரன் சந்தித்து இது குறித்து தெரிவித்துள்ளார்.
ஐடிபிஐ வங்கி மேலாளரை ரவிச்சந்திரன் நேரில் சந்தித்து தமது கணக்கில் ரூ.4,24,398/- உள்ளது என்றும் ஆனால், தாம் ரூபாய் நான்கு லட்சத்துக்கு வழங்கிய காசோலையை போதுமான பணம் இல்லை என ஏன் திருப்பி அனுப்பி உள்ளீர்கள்? என்று கேட்டதற்கு வங்கியின் தரப்பில் சரியான பதில் வழங்கப்படவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த வங்கியின் வாடிக்கையாளர் சேமிப்பு கணக்கில் பணம் இருந்தும் ஏன் தமது காசோலைக்கு பணம் வழங்கப்படவில்லை? என்று கேட்டு வங்கிக்கு வழக்கறிஞர் மூலம் அறிவிப்பு அனுப்பியுள்ளார்.
வாடிக்கையாளரின் அறிவிப்பைபெற்றுக்கொண்டு ஒரு மாதம் கழித்து வங்கி நிர்வாகம் வாடிக்கையாளருக்கு அனுப்பியுள்ளது. “வாடிக்கையாளரின் மகள் வேறு ஒரு வங்கியில் சேமிப்பு கணக்க வைத்துள்ளார். அந்த கணக்கில் இருந்து வாடிக்கையாளரின் மகள் வாடிக்கையாளருக்கு ரூபாய் ஐந்து லட்சத்துக்கு காசோலை ஒன்றை வழங்கியதாக வாடிக்கையாளர் அவரது வங்கி கணக்கில் வசூலுக்கு தாக்கல் செய்திருந்தார். அதனை வாடிக்கையாளரின் மகளின் வங்கிக்கு அனுப்பிய போது அந்த வங்கியும் ரூபாய் ஐந்து லட்சத்தை வாடிக்கையாளரின் வங்கிக்கு அனுப்பி வைத்தது. இதனால் வாடிக்கையாளரின் கணக்கில் அந்த பணம் வரவு வைக்கப்பட்டது. இந்நிலையில் வாடிக்கையாளரின் மகளின் காசோலையில் மகளது கையொப்பத்தை மோசடியாக செய்து காசோலையை வசூலுக்கு தாக்கல் செய்ததாக வாடிக்கையாளரின் மகள் அவரது வங்கியில் புகார் தெரிவித்துள்ளார். இதனால் அந்த வங்கி காசாலைக்கு வழங்கப்பட்ட பணத்தை திரும்ப வழங்குமாறு கடிதம் அனுப்பி உள்ளது. இது குறித்து காவல்துறையினரும் கடிதம் கொடுத்துள்ளனர். இதனால்தான் தாங்கள் வாடிக்கையாளர் வழங்கிய காசோலைக்கு பணம் வழங்காமல் நிறுத்தி வைத்தோம்” என்று வங்கி பதில் கடிதத்தில் வாடிக்கையாளருக்கு தெரிவித்துள்ளது.
வங்கியின் பதிலில் திருப்தி அடையாத ரவிச்சந்திரன் நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் காசோலையை பணம் இருந்தும் திருப்பி அனுப்பிய வங்கி மீது வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி டாக்டர் வீ. ராமராஜ் தலைமையிலான அமர்வு கடந்த 27 ஆகஸ்ட் 2024 -ல் தீர்ப்பு வழங்கியது. தமது சேமிப்பு கணக்கில் பணம் இருந்தும் ஏன் தாம் வழங்கிய காசோலைக்கு பணம் வழங்கப்படவில்லை? என்று கேட்டு வழக்கு தாக்கல் செய்துள்ளவர் வங்கிக்கு வழக்கறிஞர் மூலம் அறிவிப்பு அனுப்பிய போது பதில் வழங்கிய வங்கி அந்த பதிலில் கூறியுள்ள காரணங்களை தெரிவித்து காசோலையை திருப்பி அனுப்பி இருக்க வேண்டும். மாறாக, போதுமான பணம் இல்லை என்ற தவறான பதிலை தெரிவித்து காசோலையை திருப்பி அனுப்பியது வங்கியின் அனுப்பிய வங்கியின் செயல் சேவை குறைபாடு என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
வங்கியின் சேவை குறைபாடு காரணமாக வழக்கு தாக்கல் செய்தவருக்கு இழப்பீடாக ரூ 50,000/- மற்றும் வழக்கின் செலவு தொகையாக ரூ 5,000/- ஐ நான்கு வாரங்களுக்குள் வழக்கு தாக்கல் செய்தவருக்கு வங்கி நிர்வாகம் வழங்க வேண்டும் என்று நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் வங்கிக்கு உத்தரவிட்டுள்ளது.