சமீப காலமாக புற்றீசல்கள் போல் பல பகுதிகளில் ஜீவசமாதி என்ற பெயரில் பல சாமியார் மடங்கள் தோன்றியுள்ளன. இயற்கையாக அமைந்துள்ள கோவில்களுக்கு செல்வதை விட இந்த ஜீவசமாதி என்ற பெயரிலான சாமியார் மடங்களுக்கு மக்கள் அதிகம் செல்கின்றனர். இந்நிலையில் கடவுள் எங்கே இருக்கிறார்? என்ற முல்லாவின் கதையை படிக்க நேர்ந்தது. தாங்களும் இந்த கதையைப் படித்துப் பாருங்கள்.
முல்லா நஸ்ருதீன் சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்னர் துருக்கி, ஈரான் பாக்தாக் நகரங்களில் உள்ள பாலைவனத்தில் அலைந்து திரிந்து கொண்டு இருப்பார். இவர் போதனை செய்வதோ அல்லது சொற்பொழிவு ஆற்றுவதோ கிடையாது. பண்டைக்கால நகைச்சுவை முறையையும், எளிமையான எடுத்துக்காட்டுகளையும் உபயோகித்து விவரித்துக் கூறுவார். ஏதாவது ஒன்றைப் பற்றி வேடிக்கையான முறையில் விவரித்தால், அது மனதில் ஆழமாக வேரூன்றி விடும் என்பது முல்லாவின் நம்பிக்கை.
ஒரு நாள் முல்லா கடைத்தெரு வழியாக சென்று கொண்டு இருந்தார். அவர் வழக்கமாக கழுதையின் மீது அமர்ந்து சவாரி செய்வார். அதன் பின்புறத்தை நோக்கி அமர்ந்து, சவாரி செய்தார். அவரது இந்த நடைமுறையானது மக்களை சிரிக்கும்படி செய்தது.
முல்லா அந்தக் கடைவீதியில் இருக்கும் கடைக்குச் சென்று, கொஞ்சம் பேரீச்சம் பழங்களை வாங்கினார். கடைக்காரருக்கு பணம் கொடுக்க வேண்டிய சமயத்தில் முல்லா, தன்னுடைய காலணிகளை கையில் எடுத்துக் கொண்டு தரையில் உட்கார்ந்தார். காலணிகளின் மூலை முடுக்கெல்லாம் தேடினார். ஆனால், பணம் அங்கு இல்லை. தன்னுடைய பைஜாமா பாக்கெட்டின் உள்ளே தேடினார். அங்கும் பணம் இல்லை. அந்த நேரத்தில், அங்கு ஒரு பெரிய கூட்டமே கூடி விட்டது. ஏற்கனவே, முல்லா கழுதையின் மீது வித்தியாசமான முறையில் அமர்ந்து சவாரி செய்தது ஒன்றே போதும், கூட்டம் கூடுவதற்கு. இப்போது அவர் செய்யும் இந்த வேடிக்கையான செயலானது, மக்களின் கவனத்தை அவரை நோக்கி ஈர்த்தது.
இப்போது முல்லா, ஒரு புறத்தில் பணத்தை வித்தியாசமான இடங்களில் தேடிக் கொண்டும், மற்றொரு புறத்தில் தான் வாங்கிய பேரீச்சம்பழங்களை சாப்பிட்டுக் கொண்டும் இருந்தார். இதைப் பார்த்த கடைக்காரருக்கு வருத்தம் ஏற்பட்டது. இந்த மனிதர் பணம் கிடைக்க வாய்ப்பில்லாத இடங்களில் அதைத் தேடிக் கொண்டும், பணம் கொடுக்காமல், அந்த பேரீச்சம் பழங்களை சந்தோஷமாக சாப்பிட்டுக் கொண்டு இருக்கிறாரே! என்று கடைக்காரர் நினைத்தார். இவரால் பணத்தைக் கண்டுபிடிக்காமல் போய்விட்டால், நான் இவருடைய வயிற்றில் இருந்து பழங்களை எடுக்க முடியுமா?
இவ்வாறாக கடைக்காரர் எண்ணிக்கொண்டு இருக்கும் போது, முல்லா தன்னுடைய தொப்பியை தலையில் இருந்து எடுத்து, அதனுள் பணத்தைத் தேடிக்கொண்டு இருந்தார். முல்லாவின் இந்த செயலைப் பொறுக்க முடியாமல், “ஏன் நீங்கள் இங்கும் அங்குமாக பணத்தைத் தேடுகிறீர்கள்? நீங்கள் முதலில் உங்கள் குர்தாவில் இருக்கும் பையில் பார்த்திருக்கலாமே?” என்றார்.
இதற்கு, முல்லா நீ சொல்வது சரிதான். இந்த ஆலோசனையை நீ முன்பே கூறியிருக்கலாமே? என்றார். முல்லா தன்னுடைய கையை குர்தாவின் பையிற்குள் நுழைத்து, அங்கிருந்து பணத்தை எடுத்து கடைக்காரரிடம் கொடுத்தார். அவரிடம், “இந்தப் பணம் இவ்வளவு நேரமாக இங்குதான் இருந்தது. இந்தப் பணத்தை எடுப்பதற்கான வாய்ப்பை நான் இப்போதுதான் கொடுத்தேன்” என்றார்.
இதைக் கேட்டவுடன் அந்தக் கூட்டத்தினர் அனைவரும் சிரித்தனர். அந்த கூட்டத்தில் உள்ள வயதான மனிதர் ஒருவர், “இவனுக்கு பைத்தியம் பிடித்து இருப்பது போல தெரிகிறது. பணம் குர்தாவில் இருப்பது தெரிந்தும், அதை இங்கும் அங்குமாக தேடிக் கொண்டு இருக்கிறார்.
இப்போது முல்லா, “பணம் எங்கு வைத்திருக்கிறேன் என்பதைப் பார்க்க முடியாமல் போன அந்த சிறிய விசயத்திற்காக நீங்கள் என்னை முட்டாள் என நினைக்கின்றீர்கள். ஆனால், தயவு செய்து நீங்கள் உங்களுக்குள் பாருங்கள். உங்களை சுய பரிசோதனைக்கு உட்படுத்தி எண்ணிப் பாருங்கள். கடவுள் உங்கள் இதயத்தினுள் இருக்கிறார் என்பதை அறிந்த நிலையிலும், நீங்கள் அவரை வெளியே தேடிக்கொண்டுதான் இருக்கிறீர்கள். நான் முட்டாள் என்றால், இப்போது உங்களைப் பற்றி என்ன சொல்ல! நான் ஒரு சிறிய செயலுக்காக, முட்டாளாக இருக்கிறேன். ஆனால், நீங்களோ வாழ்க்கையின் மிகச்சிறந்த உண்மையைப் பற்றி அறியாமல் முட்டாளாக இருக்கிறீர்கள்.”
முல்லாவின் கூற்று, இன்றும் மனித சமுதாயம் முழுமைக்கும் ஒரு பாடமாகவும்; கவனிக்கத்தக்க ஒரு படிப்பினையாகவும் இருக்கிறது. தெய்வீகம் நம் இதயத்தினுள் இருக்கிறது என்று தெரிந்தும், நாம் அதை வெளியே எங்கேயோ தேடிக் கண்டுபிடிக்க முயற்சி செய்து கொண்டு இருக்கிறோம்.
“பாசம் உள்ள பார்வையிலே கடவுள் வாழ்கிறார்; அவர் கருணையுள்ள நெஞ்சினிலே கோவில் கொள்கிறார். “முடிவே இல்லாத மகிழ்ச்சியை, நாம் மனதில் ஆழத்தில் தான் பார்க்க முடியும். கடவுளை தரிசிக்க விரும்பினால் இயற்கையாக அமைந்துள்ள கோவில்களுக்கு செல்லுங்கள். மாறாக, செயற்கையாக உருவாக்கப்பட்டுள்ள சாமியார் மடங்களுக்கு செல்லலாமா? என்பதை நீங்களே யோசித்துப் பாருங்கள்.