தெங்குமரஹாடா: அழகிய, அதிசய, காண வேண்டிய தமிழக கிராமத்துக்கு செல்ல அனுமதி பெறுவது எப்படி? கிராமம் முழுமையும் இடமாற்றமா?

மூன்று பக்கங்களில் அடர் வனம், மலைகளும் ஒரு பக்கத்தில் முதலைகள் அதிகம் உள்ள மோயார் என்ற  ஆறும் இந்த கிராமத்தை சூழ்ந்துள்ளது.  இந்த கிராமம் யானைகளின் வலசைப்பாதையாக உள்ளதுடன் இந்த கிராமத்தின் ஒரு பக்கம் உள்ள மாயாற்றில்  முதலைகளும் தெங்குமரஹடா கிராமத்தை சுற்றியுள்ள மலைப்பகுதிகளில் புலி, யானை, சிறுத்தை, கரடி, மான், காட்டு முயல், செந்நாய் உள்ளிட்ட விலங்குகள் அதிகம் காணப்படுகின்றன. இந்தப் பகுதிகளில் ஆற்றில் ஓடும் நீரின் ஓசையும் பல வகையான பறவைகளின்  ஓசையும் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. எங்கு பார்த்தாலும் பச்சை போர்த்திய விவசாய நிலமாக பசுமையான நெல் வயல்கள்,  செவ்வந்தி பூந்தோட்டங்கள், வாழை தோட்டங்கள்   உள்ளிட்டவை காணப்படுகிறது.  தெங்குமரஹாடா ‘நீலகிரியின் நெல் கிண்ணம்’ என்று அழைக்கப்படுகிறது. இயற்கையை விரும்பும், மாசற்ற பகுதியை விரும்பும்  மக்களின் உள்ளத்தை கொள்ளை கொள்ளும் பகுதியாக இந்த கிராமம்   உள்ளது. தமிழகத்தில் பலரும் அறிந்திராத ‘தெங்குமரஹடா’ என்ற இந்த தனித்தீவிற்குள்  அனுமதி இல்லாமல் அவ்வளவு எளிதாக யாரும் உள்ளே நுழைந்து விடமுடியாது.