மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் தாக்கல் செய்யப்படும் புகார் நிரூபிக்கப்பட்டால் பாதிக்கப்பட்ட நுகர்வோருக்கு எத்தகைய பரிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என்று நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 2019-ல் கூறப்பட்டுள்ளது. இவ்வாறு சட்டத்தில் கூறப்பட்டுள்ள பரிகாரங்களை மட்டுமே நுகர்வோர் ஆணையம் வழங்க இயலும் என்பதால் நுகர்வோர் ஆணையத்துக்கு அதிகாரம் இல்லாத பரிகாரங்களை கேட்டு புகார் தாக்கல் செய்யக்கூடாது.
ஒரு பொருளை வாங்கிய நுகர்வோர் அதில் குறைபாடு (defect) உள்ளது என்று கருதி மாவட்ட நுகர்வோர் ஆணையத்தில் புகார் தாக்கல் செய்யும் போது முறையீட்டாளர் நிரூபிக்க தகுந்த ஆய்வகத்துக்கு (lab) பொருளை அனுப்பி அறிக்கை பெற ஆணையத்தில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தகுந்த ஆய்வகத்தில் சோதனை செய்யப்பட்டு உற்பத்தி குறைபாடு உள்ளது என்ற அறிக்கை ஆணையத்தில் தாக்கல் செய்யப்படும் போது பொருளில் உள்ள குறைபாட்டை நீக்கி தருமாறு (remove the defect) அல்லது அதே வகையான புதிய பொருளை வழங்குமாறு (replace new goods) விற்பனையாளருக்கு அல்லது உற்பத்தியாளருக்கு உத்தரவிட நுகர்வோர் ஆணையங்களுக்கு அதிகாரம் உள்ளது. இதைப் போலவே நுகர்வோர் செலுத்திய விலை அல்லது கட்டணத்தை வட்டியுடன் திரும்ப நுகர்வோருக்கு செலுத்துமாறு (returning the price or charge with interest) நுகர்வோர் ஆணையங்கள் உத்தரவிடலாம்.
எதிர் தரப்பினரின் அலட்சியத்தால் (negligence) நுகர்வோருக்கு ஏற்பட்ட இழப்பு (loss) மற்றும் சிரமங்களுக்கு (injury) இழப்பீடு வழங்கவும் தகுந்தது என ஆணையம் கருதும் சூழ்நிலைகளில் தண்டனைக்குரிய சேதங்களை (punitive damage) நுகர்வோருக்கு வழங்க உத்தரவிடும் அதிகாரம் நுகர்வோர் ஆணையங்களுக்கு உள்ளது. குறைபாடு உள்ள பொருளால் அல்லது சேவையால் ஏற்பட்ட பிரச்சனைக்கு பொருளின் உற்பத்தியாளர் அல்லது விற்பனையாளர் அல்லது சேவை வழங்கியவர் நுகர்வோருக்கு இழப்பீடு வழங்க நுகர்வோர் ஆணையங்கள் உத்தரவிடலாம்.
பொருட்களில் உள்ள குறைபாடுகள் அல்லது கேள்விக்குரிய சேவைகளில் உள்ள குறைபாடுகளை நீக்கவும் நியாயமற்ற வர்த்தக நடைமுறை அல்லது கட்டுப்படுத்தப்பட்ட வர்த்தக நடைமுறையை நிறுத்தவும் மீண்டும் செய்யாமல் இருக்கவும் அபாயகரமான அல்லது பாதுகாப்பற்ற பொருட்களை விற்பனை செய்யக்கூடாது என்றும் அபாயகரமான பொருட்கள் விற்பனை செய்யப்பட்டதை திரும்பப் பெறுமாறும் அபாயகரமான பொருட்களின் உற்பத்தியை நிறுத்தவும் அபாயகரமான சேவைகளை வழங்குவதை நிறுத்தவும் ஆணை பிறப்பிக்கும் அதிகாரம் நுகர்வோர் ஆணையங்களுக்கு உள்ளது.
பலர் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதாக ஆணையம் கருதும் நிலையில் பாதிப்புக்கு உள்ளானவர்களின் அடையாளத்தை காண இயலாத போது அவர்களுக்கு ஏற்பட்ட இழப்பு மற்றும் சிரமங்களுக்கு இழப்பீடு வழங்கி அதனை மாநில நுகர்வோர் நிதியில் சேர்க்க உத்தரவிடவும் நுகர்வோர் ஆணையங்கள் அதிகாரம் பெற்றுள்ளன.
தவறான விளம்பரத்தை வெளியிட்ட எதிர் தரப்பினர் அவருடைய செலவில் தவறான விளம்பரத்தை நடுநிலையாக்கும் வகையில் சரியான விளம்பரத்தை வெளியிட வேண்டும் என்று உத்தரவிடவும் தவறாக வழிநடத்தும் விளம்பரங்கள் வெளியிடுவதை நிறுத்துமாறும் புகாரை தாக்கல் செய்தவருக்கு போதுமான செலவு தொகையை வழங்குமாறும் நுகர்வோர் ஆணையங்கள் உத்தரவிடலாம்.
நுகர்வோர் ஆணையங்கள் இடைக்கால தடையாணை (injunction/stay) வழங்கவும் சாட்சிகளை விசாரிக்க, நிபுணத்துவ அறிக்கைகளை தயாரிக்க ஆணையம் (appointing commission) அமைத்து உத்தரவு பிறப்பிக்கவும் ஆவணங்களையும் இதர தேவையானவற்றையும் ஆணையத்தின் முன்பு சமர்ப்பிக்க உத்தரவிடவும் பொருட்களை ஆய்வக பரிசோதனைக்கு உட்படுத்தவும் அதிகாரம் பெற்றுள்ளது.
நுகர்வோர் ஆணையங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களில் உள்ள பரிகாரங்களை கேட்டுத்தான் நுகர்வோர் புகார்களை மாவட்ட நுகர்வோர் ஆணையத்தில் தாக்கல் செய்ய வேண்டும். உதாரணமாக, வங்கியில் தமக்கு ஒரு சேவை குறைபாடு ஏற்பட்டது எனக் கூறி அதற்கு இழப்பீட்டை தருமாறு கேட்கலாமே தவிர வங்கியின் நிர்வாகி மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று கேட்க முடியாது.
ஆணையத்தால் வழங்கப்பட்ட உத்தரவை எதிர் தரப்பினர் நிறைவேற்ற தவறும் போது நிறைவேற்றுகை மனுக்களை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டு அதில் தகுந்த உத்தரவுகளை பிறப்பிக்கும் அதிகாரம் நுகர்வோர் ஆணையங்களுக்கு உள்ளது. இத்தகைய நிறைவேற்றுகை அதிகாரம் பற்றிய விரிவான தகவல்களை விரைவில் ஒரு பகுதியாக பார்க்கலாம்.