கடந்த 1986 ஆம் ஆண்டு அமலுக்கு வந்த நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் நீக்கப்பட்டு புதிய அம்சங்களுடன் 2019 ஆம் ஆண்டு நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் இயற்றப்பட்டது. இந்தச் சட்டம் நுகர்வோர் பாதுகாப்புக்கு பல்வேறு புதிய அம்சங்களை வழங்கியுள்ளது. சந்தையில் விற்கப்படும் ஒவ்வொரு பொருளின் மற்றும் வழங்கப்படும் சேவையின் விலையை நிர்ணயம் செய்தல் (price fixation), விலைகளை கண்காணித்தல் (price monitoring) மற்றும் விலை கட்டுப்பாடு (price control) ஆகியனவும் நுகர்வோர் பாதுகாப்பும் பிரிக்க இயலாதது. ஆனால், புதிய நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்திலும் பொருட்கள், சேவைகளில் விலை நிர்ணயம், விலை கண்காணிப்பு மற்றும் விலை கட்டுப்பாடு ஆகிய அம்சங்கள் நேரடியாக விரிவான அளவில் இடம் பெறவில்லை என்பது ஒப்புக் கொள்ளப்பட வேண்டிய உண்மையாகும்.
ஒவ்வொரு பொருளின் விலையை நிர்ணயம் செய்யும் போது கொள்முதல் விலையை நிர்ணயிப்பதும் பிற செலவுகளை கணக்கிடுவதும் மிக முக்கியமான அம்சங்கள் ஆகும். அப்போதுதான் ஒவ்வொரு பொருளுக்கும் விற்பனை விலை (selling price) நிர்ணயம் செய்ய இயலும். இதே போலவே வழங்கப்படும் சேவைக்கான விலையை நிர்ணயம் செய்வதற்கு உள்ள காரணிகளை ஆய்வு செய்து ஒவ்வொரு சேவைக்கும் விலையை நிர்ணயம் செய்வது அவசியமானதாகும்.
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போன்றவற்றிற்கு விலையை நிர்ணயம் செய்வதற்கு பெட்ரோலியம் ஒழுங்குபடுத்துதல் ஆணையம் (petroleum regulatory board) அமைக்கப்பட்டுள்ளது. இதை போலவே சில மருந்துகள் மற்றும் அத்தியாவசிய பொருள்களின் உயர்ந்த பட்ச விலை அரசால் நிர்ணயம் செய்யப்படுகிறது. கரும்பு உள்ளிட்ட விவசாய விளை பொருட்களுக்கு அரசால் கொள்முதல் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. சேவை பிரிவை எடுத்துக் கொண்டால் ரயில் மற்றும் பேருந்துகளில் பயணம் செய்வதற்கு அரசு கட்டணத்தை நிர்ணயம் செய்கிறது. இதை போலவே மின்சார கட்டணத்தை நிர்ணயம் செய்வதற்கு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் செயல்படுகிறது.
மனிதர்கள் வாழ தேவையான அத்தியாவாசிய பொருட்கள் மற்றும் அவர்களுக்கு அவசியமாக தேவைப்படும் மின்சாரம், போக்குவரத்து ,எரிபொருள், வங்கி, காப்பீடு போன்ற சேவைகளின் விலைகளை நிர்ணயம் செய்வது அரசின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டியது மிக அவசியமான ஒன்றாகும். விலை நிர்ணயம் நுகர்வோர் பாதுகாப்பில் மிகவும் முக்கியமான ஒன்று.
வணிக ரீதியான பயன்பாட்டுக்கு அல்லாமல் நாட்டில் மக்களின் தேவைகளுக்காகவும் சுய தொழிலுக்காகவும் விற்பனை செய்யப்படும் ஒவ்வொரு பொருள் மற்றும் வழங்கப்படும் சேவையின் விலையை தொடர்ந்து கண்காணிப்பது நுகர்வோர் பாதுகாப்புக்கு இன்றியமையாதது. அரசின் நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சகத்தில் இத்தகைய பிரிவு இருந்தாலும் கூட நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தில் நேரடியாக விலை கண்காணிப்பு குறித்த அம்சங்கள் இடம் பெறுவது அவசியமானதாகும்.
கொரோனா பெருந்தொற்று காலத்துக்கு முன்பு மக்களின் வாழ்க்கைக்கு மிக அத்திவசியமாக தேவைப்படும் அரிசி, பருப்பு, எண்ணெய் வகைகள் போன்றவற்றின் விலைகள் இருந்ததற்கும் கொரோனா முடிவுற்று தற்போது அதன் விலைகள் உள்ளதற்கும் மிக அதிக வித்தியாசம் காணப்படுகிறது. இவ்வாறான விலைவாசி உயர்வை தடுப்பதற்கு விலை கட்டுப்பாடு குறித்த அமைப்பு ஒன்று அரசின் கண்காணிப்பில் தன்னிச்சையாக செயல்படுவது அவசியமானதாகும். இத்தகைய விலை கட்டுப்பாடு குறித்த எந்த அம்சங்களும் நேரடியாக நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தில் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
மனிதனின் வாழ்க்கைக்கு அவசியமான அத்தியாவசிய பொருட்கள், மருத்துவம் உள்ளிட்ட சேவை பணிகள் உட்பட அனைத்து வகையான பொருட்களுக்கும் சேவைகளுக்கும் விலை நிர்ணயம், விலை கண்காணிப்பு மற்றும் விலை கட்டுப்பாடு முறையாக இருந்தால் மட்டுமே 100% நுகர்வோர் பாதுகாப்பை அரசு வழங்குகிறது என்று எண்ண இயலும். இந்த மூன்று அம்சங்களையும் பற்றி பேசாத நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தை முழுமையான நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் என்று கூற இயலாது.
அரசின் அன்றாட அலுவல் பணிகளில் ஒன்றாக நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சகத்தில் இந்தப் பணியை மேற்கொள்வது அல்லது அரசாணை மூலமாக அமைப்புகளை ஏற்படுத்தி இத்தகைய பணிகளை மேற்கொள்வது மட்டும் போதுமானது அல்ல. நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தில் இந்த மூன்று அம்சங்களுக்கும் உரிய வரையறைகள் வழங்கப்பட்டு சட்ட அந்தஸ்து பெற்ற குழுக்கள் ஏற்படுத்த நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தில் தக்க திருத்தங்களை மேற்கொள்ளுவது மிக அவசியமானதாகும்.
இதற்கான பணியை நடைபெறும் தேர்தல்கள் முடிவடைந்து ஆட்சி அமைக்கும் அரசியல் கட்சி மேற்கொள்ளுமா? என்பது மில்லியன் டாலர் கேள்வியாகும். நுகர்வோர் கவுன்சில்கள், மத்திய நுகர்வோர் பாதுகாப்பு அதிகார அமைப்பு மற்றும் நுகர்வோர் நீதிமன்றங்கள் ஆகியவை நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தால் உருவாக்கப்பட்டுள்ளது போல நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தில் தக்க திருத்தங்களை மேற்கொண்டு விலை நிர்ணயம், விலை கண்காணிப்பு மற்றும் விலை கட்டுப்பாடு ஆகியவற்றுக்கு தகுந்த அமைப்புகளை உருவாக்க வேண்டும்.