கடந்த 1968 ஆம் ஆண்டு பழனி அருகே உள்ள கணக்கன்பட்டி கிராமத்தில் பிறந்த பொருளூர் செல்வா. அவர்கள் எழுத்து, கலை, இலக்கியம் ஆகியவற்றில் மிகுந்த ஆர்வமும் திறமையும் கொண்டவர். பொறியியல் கல்லூரியில் வாழ்க்கையை தொடங்கிய போதிலும் கிராமிய வாழ்வில் அதிக நாட்டம் உடையவராக திகழ்ந்ததால் ஒட்டன்சத்திரம் வட்டத்தில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகள் இல்லாத குக்கிரமம் ஒன்றை தேர்ந்தெடுத்து வசித்து வருகிறார். நுகர்வோர் பூங்காவின் இணையதள இதழின் புதிய ஆசிரியராக பொறுப்பேற்றுள்ள பொருளூர் செல்வா அவர்களுக்கு அமைதிக்கான உத்திகள் நிறுவனத்தின் சார்பில் வாழ்த்துக்கள்! |
வாய்ப்புகளை பயன்படுத்துகின்றவர்கள் வெற்றிகரமாக வலம் வருகின்றனர்! பதிமூன்று வயதில் படிப்பு போச்சு.. வீட்டில் ஏழ்மை.. தொடர்ந்து பல நாட்களாக பசி… வேலை தேடித் தேடி அலுத்துப் போச்சு… ஒருநாள், பசியால் மயக்கமடைந்து ஒரு நாடகக் கொட்டகை வாசலில் சொருகும் கண்களுடன் அமர்ந்திருந்தான் அந்த சிறுவன். ஒரு பணக்காரர் குதிரையில் நாடகம் பார்க்க வந்தார். பையனிடம், ”டேய் இங்கே கட்டிவிட்டு செல்லும் குதிரைகள் காணாமல் போகின்றன. நீ இதைப் பார்த்துக் கொள். வரும் போது காசு தருகிறேன்,” என்றார். ஆஹா… இப்படி ஒரு வேலையா?’ பையன் ஆர்வமாகத் தலையாட்டினான். தெம்புடன் எழுந்தான். நாடகம் முடிந்து பணக்காரர் வெளியே வந்தார். வெளியே நிற்பது தன் குதிரைதானா? என்ற சந்தேகம் வந்து விட்டது. குதிரையைச் சுத்தப்படுத்தி, சேணத்தை பளபளப்பாக துடைத்து வைத்திருந்தான் பையன். சற்று அதிகமாக பணத்தை அவனிடம் நீட்டினார் பணக்காரர். சில்லரை கிடைக்குமென நினைத்தவனின் கையில் பணம்… மகிழ்ந்தான். மறுநாள், நாடகம் பார்க்க வந்த மற்றவர்களும் குதிரையை அவனிடம் ஒப்படைக்க, அவற்றையும் பாதுகாத்து, சுத்தப்படுத்திக் கொடுத்தான். வருமானம் பெருகவே, குதிரை லாயமே அமைத்து, உதவிக்கு வேலைக்கு ஆள் அமர்த்தி முதலாளியாகி விட்டான். அதோடு விட்டானா… நாடகங்களையும் கவனித்தான். மிகப்பெரிய இலக்கிய மேதையாகி விட்டான். அந்தச் சிறுவன் தான், உலகப்புகழ் பெற்ற இலக்கிய மாமேதை ஷேக்ஸ்பியர். மனிதர்களுக்கு எப்போது வேண்டுமானாலும் நல்ல நேரம் வரும். வருகிற சந்தர்ப்பத்தை மட்டும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டால், குதிரைக்காரனும் குபேரனாகி விடலாம். வாய்ப்புகளை பயன்படுத்துகின்றவர்கள் வெற்றிகரமாக வலம் வருகின்றனர்… |
சிறுவன் சொன்னான் ஒரு பையன் தினம் வங்கிக்கு வந்து ஆயிரம் ரூபாய் டெபாசிட் செய்து கொண்டு இருந்தான். இதை கவனித்த வங்கி மேலாளர் அவனை என்ன சேதி என்று கேட்க, அதற்கு அந்த சிறுவன் வாங்க உங்க உங்க அறைக்கு அங்க போய் பேசலாம்! என்றான். உள்ளே போனதும் சிறுவன் சொன்னான் சார்! தினம் நான் ஒருவரிடம் ஆயிரம் பந்தயம் கட்டுவேன்! ஜெயித்த காசை இங்கு வந்து டெபாசிட் செய்கிறேன் என்றான். சரி இன்று என்னுடன் பந்தயம் கட்டு ஜெயித்தால் உனக்கு ஆயிரம் ரூபாய் கொடுக்கிறேன்! சொல்லு என்ன பந்தயம்?. சிறுவன் சொன்னான் என் கண்ணை என்னால் முத்தமிட முடியும்! சரி பந்தயம் தயார் எங்கே உன் கண்ணை நீ முத்தம் இடு பார்க்கலாம். என்றார் மேலாளர். அவனும் உடனே தன் செயற்கை கண்ணை முகத்தில் இருந்து கையில் எடுத்து முத்தம் கொடுத்தான்! வங்கி மேலாளரும் தன் தோல்வியை ஒப்பு கொண்டார். ஆனால் அவர் தோல்வியை தாங்கி கொள்ள முடியவில்லை, சிறுவனிடம் இன்னும் ஒரு தடவை பந்தயம் கட்டலாம், ஆனால் இந்த தடவை பந்தயம் என்னை வைத்து கட்ட வேண்டும். சரி என்றான் சிறுவன் மேலாளரை பார்த்து நீங்கள் இன்று பட்டா பட்டி டவுசர் தான் போட்டு இருக்கீங்க அதே ஆயிரம் ரூபாய் பந்தயம்! என்றான். இப்பொழுது மேலாளருக்கு சந்தோசம்! சரி என்று பந்தயதிற்கு ஒப்பு கொண்டார். ஆனால், சிறுவன் ஒரே ஒரு கண்டிசன் வங்கியில் வேலை செய்யும் பத்து பேர் முன்னிலையில் தான் நடக்கனும் என்று சொல்ல அவரும் சரி என்றான். பத்து பேர் முன்னிலையில் அவர் தன் கால் சட்டையை விளக்கி காட்ட, என்ன ஆச்சரியம் அவர் அன்று பட்டா பட்டி டவுசர் போடவே இல்லை! சிறவனை ஜெயித்து விட்டோம் திரும்பி ஆயிரம் ரூபாயை வாங்கி விட்டோம் என்று மகிழ்ச்சியில் அவர் தள்ளி குதிக்க! வங்கி ஊழியர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து என்ன சார் இப்படி செய்து விட்டீர்கள். என்று சொல்ல அவர் பதறி போய் என்ன ஆச்சு என்று கேட்க, இந்த சிறுவன் எங்கள் எல்லாரிடமும் வந்து உங்கள் வங்கி மேலாளரை இன்று உங்கள் முன் டவுசரை கழட்டி நிற்க வைக்கிறேன் என்று ஆயிரம் ரூபாய் பந்தயம் கட்டினான். நாங்களும் நீங்கள் மிகவும் கண்டிப்பானவர் கட்டாயம் நாங்கள் தான் ஜெயிப்போம் என்று பத்து பேரும் தலைக்கு ஆயிரம் பந்தயம் கட்டினோம் என்றார்கள். சிறுவன் தோற்ற ஆயிரத்தை மேலாளரிடம் கொடுத்து விட்டு பத்து பேரிடம் பத்தாயிரம் வாங்கி கொண்டு வேற வங்கிக்கு செல்ல ஆரம்பித்தான். |
தியானம் என்பது என்ன? குடும்பத்தாரோடு ரமண மகரிசியின் தரிசனத்திற்கு வந்திருந்த ஒரு சிறுவன் மகரிசியிடம் கேட்டான், “மாஸ்டர், தியானம் என்றால் என்ன?” ரமணர் சிரித்தவாறு தன்னுடைய சீடரிடம் ஒரு தோசை எடுத்து வந்து, அந்த சிறுவனுக்குக் கொடுக்கும்படி கேட்டுக்கொண்டார். ஒரு இலையில் தோசை வைத்துக் கொடுக்கப்பட்டது. ரமணர் சிறுவனிடம், “நான் ‘ஹக்கூம்’ என்று சொன்ன பிறகு நீ சாப்பிட ஆரம்பிக்க வேண்டும். பிறகு ‘டைகர் கா ஹக்கூம்’ என்று நான் சொன்ன பிறகு ஒரு துண்டு தோசை கூட இலையில் மீதி இருக்கக் கூடாது.” சிறுவன் உற்சாகத்தோடு சம்மதித்தான். சிறுவன் அந்த அடையாள ஒலியைக் கேட்பதற்காக ஆவலோடு காத்துக்கொண்டு இருந்தான். ‘ஹக்கூம்’ ஒலியைக் கேட்டவுடனே, சாப்பிடத் தொடங்கினான். அவனது கவனம் முழுவதும் ரமணர் மீதே இருந்தது. அடுத்த அடையாள ஒலிக்கு முன்பாக தோசையை சாப்பிட்டு முடிக்க வேண்டும் என்று அவன் தோசையை பெரிய துண்டுகளாக விழுங்கினான். படிப்படியாக தோசையின் அளவு குறைந்துகொண்டே வந்தது. ஒரு சிறிய துண்டு மட்டுமே இருந்தது. ரமணர் ‘டைகர் கா ஹக்கூம்’ ஒலி கொடுத்த அந்தக் கணமே அந்த கடைசி துண்டு தோசையையும், வாயில் போட்டுவிட்டான். அவனிடம் ரமணர் கேட்டார், “தோசை எப்படி இருந்தது?” “என் கவனம் முழுவதும், குறித்த நேரத்தில் தோசையை சாப்பிடுவதில் மட்டுமே இருந்தது. எனவே அதன் சுவை பற்றி அறியவில்லை” என்றான் சிறுவன். ரமணர், “ஆமாம், நீ சுறுசுறுப்பாக தோசையை சாப்பிட்டு முடிப்பதில் ஆர்வமாக இருந்தாய். அதிலிருந்த மொறுமொறுப்பான சுவையை பொருட்படுத்தவில்லை. இதே மாதிரி, நீ உனது தினசரி செயல்களை செய்யும்போது, உனது கவனம், எண்ணங்கள் அந்த செயலை சிறப்பாக செய்து முடிப்பதில் இருக்க வேண்டும். இதுதான் தியானம் என்று அறியப்படுகிறது.” தியானம் நமது மனசாட்சியைப் பண்படுத்தும் ஒரு கலை. |