spot_img
April 2, 2025, 9:19 pm
spot_img

படித்ததில் பிடித்தது: ஆபத்தை அதிகரிக்கும் தேவையற்ற நுகர்வு கலாச்சாரம்

உலகின் தற்போதைய தலையாய பிரச்சினை  மக்கள் தொகைப் பெருக்கம் என்று நினைக்கிறீர்களா அதைவிட தலையாயப் பிரச்சினை தேவையற்ற நுகர்வுக் கலாச்சாரமாகும்.

சூப்பர் மார்க்கெட் ஒன்றுக்குச் சென்று பார்த்தால் என்னென்னவோ தயாரிப்புகள் கலர் கலராக, வகை வகையாக, வெவ்வேறு சைஸுகளில் அடுக்கி வைக்கப்பட்டு இருக்கும். இதை எல்லாம் கூட வாங்குவார்களா என்று யோசிப்போம். வாங்கதானே வைக்கிறார்கள் ?

பிரியாணி மசாலா ஓகே, தக்காளி சாதம், லெமன் சாதம், தேங்காய் சாதத்துக்குக் கூட மசாலா வந்திருக்கிறது. ஒன்றுக்கொன்று என்ன வித்தியாசம் என்று தெரியவில்லை. பூஜா பொட்டலம் (Kit )விலை 180 ரூபாய். உள்ளே ஒரு காட்டன் துணி, இரண்டு விளக்குத் திரி பாக்கெட், ஊதுபத்தி, கொஞ்சம் கற்பூரம், குட்டியூண்டு பாட்டிலில் பன்னீர், அவ்வளவு தான். தேவையற்ற பொருட்களை, தயாரிப்புகளை வாங்கிக் குவிக்கும் கலாச்சாரம் ! 

ஆணிகளை முதலில் விற்று விட்டுப் பிறகு சுத்தியலுக்கான தேவையை உருவாக்கும் வியாபார யுக்தி. தேவையே இல்லாவிட்டாலும் ஒருவித போலியான தேவையை (Fake Demand) உருவாக்குவதிலும் கார்ப்பரேட்கள் வல்லவர்கள். சமீபத்திய உதாரணம் காய்கறி கழுவும் சாதனம் (Vegetable Washer). 250-300 ரூபாய்க்கு விற்கிறார்கள். இதை இதற்கு முன் நாம் கேள்விப்பட்டு இருப்போமோ. பெரும்பாலும் மார்க்கெட்டில் இருந்து காய்கறிகளை வாங்கிவந்து அப்படியே தான் பிரிட்ஜில் வைத்துக்கொண்டு இருந்தோம். 

எல்லா Productகளிலும் சகட்டு மேனிக்கு 99.9% கிருமிகளைக் கொல்கிறது )Kills 99.9% Germs) என்று போட்டு விடுகிறார்கள். கொரோனா வைரஸில் இருந்து பாதுகாக்கிறது என்று போடுகிறார்கள். எந்த ஆராய்ச்சியின் அடிப்படையில் இந்த முடிவுக்கு வருகிறார்கள் போன்ற விவரங்கள் இல்லை. கொரோனா வைரஸில் இருந்து பாதுகாக்க வேண்டி கடவுளை வழிபடுவதற்கு எங்கள் ஊதுபத்தி சிறந்தது  என்று கூடிய சீக்கிரம் விளம்பரங்கள் வந்து விடும் !

நாம் நம் தாத்தாவை விட 8 மடங்கு அதிகம் நுகர்ந்தோம் என்றால் நம் பேரன் நம்மை விட 64 மடங்கு அதிகம் நுகர்வான். நம் தாத்தாவுக்கு இருந்தது ஒரே ஒரு சோப் என்றால் நம் பேரன் முன்பு 64 சோப்புகள் கடை விரிக்கப்படும்.  எல்லா சோப்புகளும் ஒன்றுதான் என்ற அறிவு நம்மிடம் இருப்பதில்லை. 64 வகை சோப்புகள், சூப்பர் மார்க்கெட்டில் கால்வாசி இடத்தை அடைத்துக் கொண்டு உள்ளது ! 

இரண்டு பொருட்களில் இருந்து ஒன்றைத் தேர்ந்தெடுக்க நமக்கு 10 நிமிடங்கள் ஆகிறது என்றால் மூன்று பொருட்களில் இருந்து தேர்ந்தெடுக்க நமக்கு 100 நிமிடங்கள் ஆகுமாம். நான்கு பொருட்கள் என்றால் ஆயிரம் நிமிடங்கள் !நம்முடைய நேரத்தையும் சத்தமில்லாமல் திருடி விடுகின்றன இந்த ஹைப்பர் மார்க்கெட்டுகள். இது நல்லது தானே ? நிறைய தயாரிப்புகள் என்றால் நிறைய வேலைவாய்ப்பு என்று நினைத்தால் தப்பு. அந்தக் குறிப்பிட்ட தயாரிப்பு எப்படி சந்தைக்கு வருகிறது என்ற விவரம் நம்மிடம் இல்லை. 

ஹைப்பர் மார்க்கெட்டுகள் பஞ்சபூதங்களையும் கணிசமான அளவு பதம் பார்க்கிறது. அதற்கான தயாரிப்பில் எத்தனை தண்ணீர் உறிஞ்சப்பட்டது?. எத்தனை ஏக்கர் மண் மலடானது?. எத்தனை டன் காற்று மாசுபட்டது?. அந்தத்தயாரிப்பு எவ்வளவு கரியமில வாயுவை பூமியின் வளிமண்டலத்தில் வெளிவிட்டது? என்றெல்லாம் நமக்கு தெளிவாகத் தெரிவதில்லை. மேலும் அந்தத் தயாரிப்பின் பின்புலத்தில் நசுக்கப்பட்டவர்கள் யார்?, மிரட்டப்பட்டவர்கள் யார்?, அதன் பின்புலத்தில் இயங்கும் சமூக, பொருளாதார, அரசியல் ஆதரவாளர்கள் யார்? என்றெல்லாம் நமக்கு விளங்குவதில்லை.

கடை விரித்தேன் கொள்வார் இல்லை என்ற வாசகம் இப்போது எடுபடாது. எங்கே கடைவிரித்தாலும் எங்கிருந்தோ கொள்வார்கள் வந்து விடுகிறார்கள். வீட்டு தயாரிப்பு (Home-Made) என்று போட்டுவிடு, ரசாயன கலப்படமற்றது (Organic) என்று எழுது, 

100% சுகாதாரமானது (Hygienic) என்று எழுது, கல்லீரலுக்கு நன்று (Good for Liver) என்று போடு,  ஏதோ ஒரு வைட்டமின் இருக்கிறது என்று அளந்துவிடு, கவரில் பற்கள் தெரியச் சிரிக்கும் ஒரு மகிழ்ச்சியான குடும்ப (Happy Family) படத்தைப் போட்டுவிட்டு, அவ்வளவுதான்.

இவை எல்லாம் நமக்கு ஏற்கனவே தெரிந்த விஷயங்கள் தானே என்றால் பொருட்களை மட்டும் அல்ல, சேவைகளையும் (services) நாம் அதிகமாக நுகர்கிறோம் என்று தோன்றுகிறது. 

தினமும் 3 ஜிபி  டேட்டா இலவசம். வேறு என்ன செய்ய ? வீடியோக்கள் பார்க்க பார்க்க மேலெழும்பி வந்து கொண்டே இருக்கின்றன. இரவு முழுவதும் பார்க்கலாம். எதையும் புதிதாக கற்றுக்கொண்டு இருக்க மாட்டோம். எதுவும் நம்மை மாற்றி இருக்காது. அரைவேக்காடுகளை, கத்துக்குட்டிகளை நாம் தான் பிரபலம் ஆக்குகிறோம். வாங்குவோர் இல்லை யென்றால் விற்பனை செய்வோர் இல்லை. பார்ப்போர் இல்லை என்றால் பிரபலங்கள் இல்லை. 

டேட்டா என்றில்லை, மின்சாரம், தண்ணீர், எரிபொருள் எல்லாமே அதிகமாக நுகர்கிறோம். சுயமாக எடுத்துக் கொள்ளும் உணவகத்துக்கு செல்லும்போது எல்லா அயிட்டங்களிலும் ஒன்றை எடுத்து உள்ளே தள்ளுகிறோம். விளைவு -வயிற்று வலி, இரண்டு நாள் வயிற்று உப்புசம், உபாதை. இலவச மருத்துவம் என்பதற்காக நோயை வலிய வரவழைத்துக் கொள்ளவும் செய்வோம் நாம்.

நாம் வாழ்க்கையையும் அதிகமாக நுகர்கிறோம். நாளை என்பது நிச்சயம் இல்லை, இன்றே அனுபவித்து விடு என்பதெல்லாம் சரிதான். ஆனால் வாழ்க்கையில் நம் அனுபவங்களை, சுகங்களை, சந்தோஷங்களை சரி சமமாக பார்க்கிறோமா? விநியோகிக்கிறோமா? 40 வயதுக்குள்ளாகவே எல்லாவற்றையும் முடித்து விட்டு போதும்டா சாமி என்று பலர் வெளியேறி விடுகிறார்கள்.

8 வயது சிறுவன் 28 வயது இளைஞன் போலப் பேசுகிறான்  மஞ்சத்திலே கொஞ்சக் கொஞ்ச என்று ஆறு வயது குழந்தை ஒன்று பாடுகிறது. ஜட்ஜுகள் (?!) தீர்ப்பு சொல்கிறார்கள். ஆன்மிகம் என்பது ஒருவருக்கு வயது முதிர்ந்தபின் தான் அர்த்தமுள்ளதாகும். 50+…அந்தந்த வயதில் அது இனிக்கும். ஆன்மிகத்திற் கென்று ஓர் ஓய்வு, ஒரு விரக்தி, ஒரு களைப்பு, ஒரு சோர்வு, ஓர் அர்த்தமின்மை எல்லாம் தேவைப்படுகிறது. 20 வயதில் எல்லாமே அர்த்தமுள்ளதாகத் தான் தெரியும். 20 வயதில் ஆன்மிகத்தின் பக்கம் ஒதுங்கினால் அதில் ஆழம் இருக்காது. அது வெறும் அதிக நுகர்வுதான்.

சின்னக் குழந்தைகள் ஆன்மிக கதா காலட்சேபம் செய்வது பொருத்தமாகுமா?. பத்து வயதில் காதலித்து, 20 -ல் ஆன்மிகம் பேசி விட்டு, முப்பதில் முடித்து விட்டால் என்ன தான் செய்வது ?40-ல், 50-ல், 60-ல் வாழ்க்கை என்னும் காலிபாட்டிலை வைத்துக்கொண்டு எதை அனுபவிப்பது ? நாளைக்கென்று கொஞ்சம் மிச்சம் வைப்போம். நீரை, மின்சாரத்தை, கனிம வளங்களை, பெட்ரோலை நம் பேரப்பிள்ளைகளுக்கும் விட்டு வைப்போம் என்ற எண்ணம் நமக்கு வருவதே இல்லை. 

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சன்றோ. சரி. இதற்கான தீர்வு தான் என்ன? மிகவும் எளிது! விருப்பத்திற்காக நுகராதீர்கள். தேவையிருந்தால் மட்டும் நுகருங்கள். அப்படியென்றால், என் ஆசைகள் விருப்பங்கள் என்னாவது ? உங்கள் அத்தியாவசிய தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகி விட்டதா? என்று பாருங்கள். அதற்கு முன்னுரிமை தாருங்கள், அதன் பின் நீங்கள் விரும்புவதை நுகருங்கள். அந்த நுகர்வும் உடல் ரீதியாகவும் , பொருளாதார ரீதியாகவும் உங்களை பாதிக்காத வண்ணம் இருக்க வேண்டியது அவசியம். நீங்கள் விரும்பும், உங்களுக்கு அத்தியாவசிய தேவை இல்லாத எதையும் கடன் வாங்கி நுகராதீர்கள். 

தொடர்புடைய கட்டுரைகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -Central Learning campus

சமீபத்திய கட்டுரைகள்