நாமக்கல் மாவட்டம், பேளுக்குறிச்சி அருகே உள்ள கள்ளுக்காடு கிராமத்தில் வசிப்பவர் ரவிச்சந்திரன் மகன் பி ஆர் முகிலன் (41). இவர் நாமக்கல்லில் சேலம் சாலையில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் (ஹெச்டிஎஃப்சி வங்கி) கடந்த 2017 டிசம்பரில் ரூபாய் 23 லட்சத்தை கடனாக பெற்று லாரி ஒன்றை வாங்கி உள்ளார். இவர் கடந்த செப்டம்பர் மாதத்தில் கடன் வழங்கிய வங்கி மீது வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்
லாரி உரிமையாளர் வழக்கில் தெரிவித்துள்ள விவரங்கள் பின்வருமாறு. 59 மாதங்களுக்கு ரூ 48,400/- வீதம் கடன் தொகையை செலுத்த வேண்டும் என்ற ஒப்பந்தப்படி 16 மாதங்கள் மாதாந்திர தவணை தொகைகளை வங்கியில் செலுத்திய நிலையில் கடந்த 2019 செப்டம்பர் மாதத்தில் எவ்வித அறிவிப்பும் கொடுக்காமல் லாரியை வங்கி நிர்வாகம் அடியாட்களை வைத்து கைப்பற்றிக் கொண்டது. சொந்த பணம் ரூபாய் 12 லட்சத்தையும் கடன் பெற்ற பணம் ரூபாய் 23 லட்சத்தையும் செலுத்தி ரூ 35 லட்சத்தில் லாரியை வாங்கிய நிலையில் கடந்த 2021 ஜூன் மாதத்தில் சட்ட நடைமுறைகளை பின்பற்றாமல் 13,65,000/-க்கு லாரியை வங்கி விற்று விட்டது. லாரியை விற்ற பணம் போக இன்னும் ரூ 11,39,786/- வங்கிக்கு செலுத்துமாறு வங்கி தமக்கு அறிவிப்பு அனுப்பி உள்ளது. இத்தகைய சேவை குறைபாட்டிற்காக வங்கி தமக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று வழக்கில் கேட்கப்பட்டுள்ளது.
மாதாந்திர தவணைத் தொகைகளை சரிவர செலுத்தாததால் லாரியை ஒப்பந்தப்படி கைப்பற்றினோம் என்றும் சட்ட நடைமுறைகளை பின்பற்றி லாரியை விற்பனை செய்தோம் என்றும் தங்கள் தரப்பில் எவ்வித சேவை குறைபாடும் புரியப்படவில்லை என்றும் வங்கியின் தரப்பில் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது. வங்கியின் வாதத்தை நிராகரித்த நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி டாக்டர் வீ. ராமராஜ் தலைமையிலான அமர்வு நேற்று (02-07-2024) வழங்கிய தீர்ப்பில் விசாரணையில் வங்கி சேவை குறைபாடு புரிந்துள்ளதாக நிரூபிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.
குறைந்த விலையில் லாரியை ஏலத்தில் விற்பனை செய்ததற்கு ரூ 6,75,000/- இழப்பீடாகவும் சேவை குறைபாட்டால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு ரூ 4,54,786/- இழப்பீடாகவும் (மொத்தம் ரூ 11,39,786/-) நான்கு வார காலத்திற்குள் லாரி உரிமையாளருக்கு வாடிக்கையாளருக்கு வங்கி நிர்வாகம் வழங்க வேண்டும் என்று நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற தீர்ப்பில் உத்தரவிட்டுள்ளது. இந்தத் தொகையிலிருந்து வங்கிக்கு செலுத்த வேண்டிய பணத்தை பிடித்தம் செய்து கொண்டு வழக்கு தாக்கல் செய்தவர் வங்கிக்கு எவ்வித தொகையும் செலுத்த வேண்டியது இல்லை என்று சான்றிதழை வழங்குமாறும் இந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.