திறன் விளையாட்டு
ஒரு விளையாட்டின் முடிவு விளையாடுபவரின் திறமையால் தீர்மானிக்கப்படக்கூடிய அம்சமாக இருப்பின் அதனை திறன் விளையாட்டு (game of skill) எனலாம். அறிவுத்திறன் அல்லது உடல் திறன் அடிப்படையிலான சதுரங்கப் போட்டி, பொது அறிவு வினாடி வினா, பாட்டு போட்டி, நடன போட்டி, குத்துச்சண்டை உள்ளிட்ட பல வகையான விளையாட்டுகளை திறன் விளையாட்டுகளுக்கு உதாரணமாக கூறலாம்.
வாய்ப்பு விளையாட்டு
ஒரு விளையாட்டின் முடிவு விளையாடுபவருக்கு கிடைக்கும் வாய்ப்பு அல்லது அதிர்ஷ்டத்தால் தீர்மானிக்கப்படக்கூடிய அம்சமாக இருப்பின் அதனை வாய்ப்பு விளையாட்டு (game of chance) எனலாம். நேரடியாக அல்லது இணையதள வழியாக, குலுக்கல் முறையிலான விளையாட்டுக்கள், பகடை உருட்டுதல் முறையிலான விளையாட்டுக்கள் உள்ளிட்ட பல வகையான விளையாட்டுகளை வாய்ப்பு அல்லது அதிர்ஷ்ட விளையாட்டுகளுக்கு உதாரணமாக கூறலாம்.
சட்டபூர்வமானதா?
பொதுவாக, திறன் விளையாட்டுக்கள் சட்டபூர்வமாகவும் வாய்ப்பு விளையாட்டுக்கள் விரோதமானதாகவும் கருதப்படுகிறது. திறமை மற்றும் வாய்ப்பு விளையாட்டுகளுக்கு இடையேயான சட்டரீதியான வேறுபாடு, விளையாட்டின் முடிவை தீர்மானிப்பதில் திறமை மற்றும் வாய்ப்பின் ஒப்பீட்டு முக்கியத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது. ஆனால், திறமை அல்லது வாய்ப்பு விளையாட்டு எது என்பதை யார் தீர்மானிக்க வேண்டிய பணி அரசை சார்ந்ததாகும். வாய்ப்பு அல்லது அதிர்ஷ்டத்தின் விளையாட்டுகளில் பணம் அல்லது வேறு பொருட்களை பணயமாக வைத்து விளையாடுவது சூதாட்டமாகும்.
சூதாட்ட சட்டம்
கடந்த 1867 ஆம் ஆண்டு இந்தியாவில் முதன்முதலாக பொது சூதாட்டச் சட்டம் இயற்றப்பட்டது. இந்தச் சட்டம் எந்த ஒரு சூதாட்ட விளையாட்டையும் தடை செய்யவில்லை. ஆனால் சூதாட்டம் விளையாடுபவர்களுக்கு அபராதம் விதிக்க வழி வகுத்தது. சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்வது மாநில அரசுகள் சம்பந்தப்பட்டது என்ற நிலையை இந்த சட்டம் உருவாக்கியது. இந்தச் சட்டம் இயற்றப்பட்ட போது இணையதள வசதிகள் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.
சூதாட்ட அனுமதி
சிக்கிம், கோவா மாநிலங்கள் மற்றும் டாமன் யூனியன் பிரதேசம் ஆகியவற்றில் மட்டும் சுற்றுலாத் தொழிலை கருத்தில் கொண்டு சூதாட்ட அனுமதி சிறப்பு சட்டம் இயற்றப்பட்டுள்ளது. கோவா, சிக்கிம் மாநிலங்களில் வாய்ப்பு மற்றும் அதிர்ஷ்டத்தை அடிப்படையாகக் கொண்ட கேசினோஸ் மற்றும் சில ஆன்லைன் விளையாட்டுகள் அனுமதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கோவாவில் கேசினோஸ் விளையாட்டில் அந்த மாநிலத்தில் வசிப்பவர்கள் விளையாட தடை செய்யப்பட்டுள்ளது. வில்வித்தைப் போட்டியில் பந்தயம் கட்டுவது மேகாலய மாநிலத்தில் சட்டப்படி அங்கீகரிக்கப்பட்டுள்ளது. தமிழகம் உட்பட மற்ற மாநிலங்களில் சூதாட்டம் தடை செய்யப்பட்டுள்ளது தமிழகத்தில் லாட்டரி சீட்டு தடை செய்யப்பட்டிருந்தாலும் இன்னும் சில மாநிலங்கள் லாட்டரி சீட்டை அரசின் வருமானத்தை கருத்தில் கொண்டு அனுமதித்துள்ளனர்.
ஆன்லைன் விளையாட்டு
இணையதள கண்டுபிடிப்பு நிகழ்ந்து அசுர வளர்ச்சி பெற்று பெரு நகரங்கள் முதல் கிராமங்கள் வரை இணையதளத்தின் பயன்பாடு கட்டாய தேவையானதாக தற்போது மாறி உள்ளது. சமீப காலமாக ஸ்மார்ட் மொபைல் ஃபோன்களை பயன்படுத்துவர்களின் எண்ணிக்கை பல மடங்காக அதிகரித்து இருக்கிறது. ஒவ்வொரு கண்டுபிடிப்பு தோன்றும் போதும் பல நன்மைகள் ஏற்படுவது போலவே தீமைகளும் ஏற்படுவது வழக்கமே. கடந்த 1990 -களில் இணையதள விளையாட்டு தொடங்கியது எனலாம். கடந்த பத்தாண்டுகளாக இந்தியாவில் இணையதள விளையாட்டு பல மடங்குகளாக அதிகரித்துள்ளது. இதில் ஆன்லைன் ரம்மி போன்ற விளையாட்டுகளை பலர் பணம் செலுத்தி விளையாடுகின்றனர். இணையதள விளையாட்டு அடிமைகளாக மாறி கடன் வாங்கியும் சொத்துக்களை விற்றும் விளையாடி பணத்தை இழந்த பலர் தற்கொலை செய்து கொள்வது வாடிக்கையான ஒன்றாகிவிட்டது.
பல லட்சம் கோடிகள்
ஆன்லைன் சூதாட்ட இணையதளங்களை நடத்தும் நிறுவனங்கள் இந்தியாவிலிருந்து ஆண்டொன்றுக்கு ரூபாய் 8.2 லட்சம் கோடி வருவாய் பெற்றதாக அண்மையில் திங்க் சேஞ்ச் ஃபோரம் (Think Change Forum) என்ற அமைப்பின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பெரும்பான்மையான நிறுவனங்கள் இந்தியாவிற்கு வெளியில் இருந்து இந்த இணையதள விளையாட்டுகளை நடத்தி இந்தியாவிலிருந்து பணத்தை அள்ளிச் செல்கின்றன. இந்த விளையாட்டுக்களால் மக்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளவதோடு இந்தியாவின் பணம் அதிக அளவில் வெளியில் செல்வதால் இந்திய பொருளாதாரத்திற்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. சமூக வலைத்தளங்களான பேஸ்புக், வாட்ஸ் அப், டெலிகிராம் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்றவைகள் மூலம் பணத்தை கொள்ளை கொள்ளும் ஆன்லைன் விளையாட்டுக்கள் பெரிதும் வளர்ச்சி அடைந்துள்ளன.
சட்டத்தை வென்ற நிறுவனங்கள்
அஇஅதிமுக தலைமையிலான மாநில அரசால் கடந்த 2021 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட இணையதள சூதாட்ட தடைச் சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. தற்போதைய திமுக தலைமையிலான மாநில அரசால் கடந்த ஆண்டு இயற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தையும் சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துவிட்டது. இந்த சட்டங்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்த நிறுவனங்கள் இரண்டு முறையும் மக்கள் மன்றத்தால் இயற்றப்பட்ட சட்டத்தை தோற்கடித்து விட்டனர்.
ஆன்லைன் ரம்மி சட்டபூர்வமானதா?
கடந்த 1957 ஆம் ஆண்டில் “பாம்பே மாநிலம் -எதிர்- ஆர். எம். டி. சாமர்பக்வாலா” (State of Bombay v RMD Chamarbaugwala) என்ற வழக்கில் உச்ச நீதிமன்றம் திறன் விளையாட்டு தொடர்பான தீர்ப்பு ஒன்றை வழங்கியது. இந்த தீர்ப்பில் திறமையை அடிப்படையாக வைத்து கொண்டு விளையாடும் விளையாட்டுகளை தடை செய்ய இயலாது என்றும் இந்திய அரசியலமைப்புச் சட்டம், 19(1)(g) என்ற கோட்பாட்டின்படி இத்தகைய வணிக நடவடிக்கைகளுக்கு பாதுகாப்பு உள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.
கடந்த 1967 ஆம் ஆண்டில் “ஆந்திரப் பிரதேச மாநிலம் -எதிர்- சத்தியநாராயணா” (State of Andhra Pradesh v K Satyanarayna) என்ற வழக்கில் ரம்மி விளையாட்டு திறன் அடிப்படையிலானது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 1996 ஆம் ஆண்டில் “டாக்டர் கே.ஆர்.லக்ஷ்மணன் -எதிர்- தமிழ்நாடு மாநிலம்” (Dr KR Lakshmanan v State of Tamil Nadu) என்ற வழக்கின் தீர்ப்பிலும் உச்ச நீதிமன்றம் ரம்மி விளையாட்டை திறன் அடிப்படை விளையாட்டு என்று உறுதிப்படுத்தியது. இருந்த போதிலும் அவ்வப்போது சில மாநில அரசுகள் ரம்மி போன்ற சூதாட்டங்களை தடை செய்வதும் அதனை நடத்தும் நிறுவனங்கள் நீதிமன்றத்தில் வெற்றி பெறுவதும் தொடர் கதையாகவே உள்ளது.
சீரழியும் சமூகம்
ஆன்லைன் சூதாட்டங்களை மாநில அரசுகள் தடை செய்ய இயலாத நிலை நீடிப்பதால் மக்களுக்கு நிகழும் பாதிப்புகள் தொடர்கின்றன. பொழுதுபோக்குக்காக இணையதள விளையாட்டுகளை விளையாடத் தொடங்கும் சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை போதைக்கு அடிமையாகுவது போல இணையதள விளையாட்டுகளுக்கு அடிமையாகி பணத்தை இழக்கிறார்கள். இதனால் பல குடும்பங்கள் பாதிக்கப்படுகின்றன. பலர் தற்கொலை செய்து கொள்கிறார்கள். கடனாளியான பலர் பணத்தைப் பெற கொலை, கொள்ளை போன்ற குற்றங்களை புரிகிறார்கள் இன்னும் பலரோ மதுவுக்கு அடிமையாகி விடுகிறார்கள் இவ்வாறு சொல்ல முடியாத பல சீரழிவுகளை இணையதள சூதாட்டங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. லட்சக்கணக்கான கோடிகளில் இந்திய பணம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி ஆகிக்கொண்டிருக்கிறது.
மத்திய அமைச்சரின் கருத்து
“பந்தயம் மற்றும் சூதாட்டம்” என்பது இந்திய அரசியலமைப்பின் ஏழாவது அட்டவணையில் உள்ள மாநில அதிகாரப் பட்டியலில் 34 -ஆம் அம்சமாக வருகிறது. இது தொடர்பாக மாநிலங்களுக்கு சட்டம் இயற்றும் அதிகாரம் உள்ளது. மத்திய அரசு துறைப் பணிகள் விதி ஒதுக்கீடு திருத்தத்தில் 23.12.2022 தேதியிட்ட அறிவிப்பின் மூலம் “ஆன்லைன் கேமிங்” என்ற விவகாரம், மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் இணையதள சூதாட்டங்களை தடுக்க மாநில அரசுகள் சட்டம் இயற்றிக்கொள்ளலாம் என்று தமிழக நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு மத்திய தகவல் ஒளிபரப்பு துறை அமைச்சர் கடந்த மார்ச் 2023-ல் பதில் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
நுகர்வோர் நீதிமன்றம்
நுகர்வோர் பாதுகாப்பு சட்டம், 2019 -ல் நியாயமற்ற வணிக நடவடிக்கை எவை என்பது விளக்கப்பட்டுள்ளது. ஆனால் திறனை அடிப்படையாகக் கொண்ட விளையாட்டு குறித்த வழக்குகளை நுகர்வோர் நீதிமன்றங்களில் தாக்கல் செய்வதற்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தை திருத்தம் செய்து இணையதள விளையாட்டுக்கள் திறன் அடிப்படையில் நடத்தப்படுகின்றனவா? என்பதை தீர்மானிக்கும் அதிகாரத்தை நுகர்வோர் நீதிமன்றங்களுக்கு மத்திய அரசு வழங்க வேண்டும். இதன் மூலம் அந்தந்த மாவட்டங்களிலேயே மக்கள் நிவாரணங்களை தேடிக்கொள்ள இயலும் என்பது கவனிக்கத்தக்கது.
எளிதில் தடை செய்யலாம்
சூதாட்டம் மாநில அரசின் அதிகாரப் பட்டியலில் இருப்பதால் தேசம் முழுவதும் சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்ய மத்திய அரசால் சட்டம் இயற்ற இயலாது. சூதாட்ட விவகாரங்களை மாநில பட்டியலில் இருந்து மத்திய மற்றும் மாநில அதிகார பட்டியலுக்கு அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தின் மூலம் அரசால் மாற்ற முடியும். இதனால் சூதாட்டத்தை ஏழாம் அட்டவணையில் மத்திய – மாநில அதிகாரப்பட்டியலான மூன்றாம் பட்டியலுக்கு கொண்டு சென்று மத்திய அரசால் தேசம் முழுவதும் “ஒரே நாடு- ஒரே சூதாட்ட தடை” சட்டத்தை கொண்டு வரலாம்.
மத்திய அரசு இந்தியாவில் இணையதள சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்வதை விரும்பினால் மத்திய சட்டம் மூலமாக இத்தகைய விளையாட்டுக்கள் திறன் அடிப்படையிலான விளையாட்டுக்கள் அல்ல என்று சட்டத்தை இயற்றி மக்களை பாதித்துக் கொண்டிருக்கும் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட அனைத்து வகையான இணையதள விளையாட்டுகளையும் எளிதில் தடை செய்யலாம். மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் மூலமாக ஆன்லைன் சூதாட்டங்களை நாட்டை விட்டு துரத்தலாம். “ஒரே நாடு- ஒரே சூதாட்ட தடை” நடவடிக்கையை மேற்கொள்ள மத்திய அரசு விரைவில் முன்வரும் என்று நம்புவோம்.