நிதி கமிஷன்
இந்தியாவில் மாநிலங்களில் இருந்து வசூலிக்கப்படும் நிதியானது மத்திய அரசிடம் சென்ற பிறகு மத்திய அரசுக்கான பங்கீடு போக மீதத் தொகையானது மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது. இந்திய அரசியலமைப்பின் 280 ஆம் கோட்பாட்டின்படி ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கும் நிதி கமிஷன் (Finance Commission) அமைக்கப்படுகிறது. நிதி கமிஷன் பரிந்துரைக்கும் அளவுகோலின்படி மாநிலங்களுக்கு மத்திய அரசு வரிப்பகிர்வு நிதியை வழங்குகிறது. தற்போது பதினைந்தாவது நிதி கமிஷனின் பரிந்துரைகள் அமலில் உள்ளன. இந்தப் பரிந்துரைகள், 2021 ஆம் ஆண்டுலிருந்து 2026 ஆம் ஆண்டு வரையில் அமலில் இருக்கும்.
வரி பகிர்வு முறை
மாநிலங்களின் பரப்பு (15%), மாநிலங்களின் மக்கள் தொகை (15%), மிகக் குறைந்த தனிநபர் வருவாயைக் கொண்ட மாநிலத்திற்கு கூடுதல் நிதி (45%), வனம் மற்றும் சுற்றுச்சூழல் (10%), வரி வசூலில் மாநிலங்களின் திறன் (2.5%), மக்கள் தொகையைக் கட்டுப்படுத்துவதில் மாநிலங்களின் செயல்பாடு (12.5%) ஆகிய ஆறு அம்சங்களை கணக்கில் கொண்டு வரி வசூலில் 58 சதவீதத்தை மத்திய அரசு வைத்துக் கொண்டு 42 சதவீதத்தை மாநிலங்களுக்கு பகிர்வு செய்து வழங்குகிறது.
மக்கள் தொகை
1970 ஆம் ஆண்டுகளுக்கு பின்னர் இந்தியா மக்கள் தொகையை கட்டுப்படுத்த பல நடவடிக்கைகளை மேற்கொண்டது. கடந்த 1976 ஆம் ஆண்டு முதலாவது தேசிய மக்கள் தொகை கொள்கை உருவாக்கப்பட்டது. இதற்குப் பிறகு மாநில அரசுகள் மக்கள் தொகையை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டன. இதில் தமிழகம் மற்றும் கேரளா உட்பட தென்னிந்திய மாநிலங்கள் சிறப்பாக செயல்பட்டதால் மக்கள் தொகை வெகுவாக தென்னிந்திய மாநிலங்களில் கட்டுப்படுத்தப்பட்டது. ஆனால், வட இந்திய மாநிலங்களில் மக்கள் தொகை தென்னிந்திய மாநிலங்களைப் போல கட்டுப்படுத்தப்படவில்லை. தென்னிந்திய மாநிலங்களில் மற்ற மாநிலங்களை காட்டிலும் பல சமூக நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளதோடு தனிநபர் வருமானமும் அதிகரித்துள்ளது. மக்கள் தொகை, தனிநபர் வருமானம் ஆகியவற்றை கணக்கில் எடுத்து கொள்வதால் அதிக வரியை தென்னிந்திய மாநிலங்கள் செலுத்தினாலும் திரும்பப்பெறும் தொகை மற்ற மாநிலங்களை காட்டிலும் குறைவாக உள்ளது.
அளவுகோல்
கடந்த 14 ஆம் நிதி கமிஷன் பரிந்துரைத்த அளவுகோல்களில் 1971 ஆம் ஆண்டைய மக்கள் தொகையை அடிப்படையாகக் கொண்டே வரி பகிர்வு மத்திய அரசால் மேற்கொள்ளப்பட்டு வந்தது. ஆனால், தற்போதைய 15 ஆம் நிதி கமிஷனின் பரிந்துரையின்படி 2011 ஆம் ஆண்டின் மக்கள் தொகை நிதி பங்கீட்டுக்கு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது. இதனால் மக்கள் தொகையை கட்டுப்படுத்திய தமிழகம் மற்றும் கேரளா உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களுக்கு மத்திய அரசின் நிதி பகிர்வு குறைவாக கிடைக்கிறது. அதே சமயத்தில் மக்கள் தொகையை கட்டுப்படுத்த தவறிய மாநிலங்களுக்கு அதிக மக்கள் தொகை உள்ள மாநிலங்கள் என்ற அடிப்படையில் அதிக நிதி வழங்கப்படுகிறது.
மற்ற நாடுகளில்
அமெரிக்காவில் தெற்கில் உள்ள மாகாணங்கள் வடக்கில் உள்ள மாகாணங்களை விட பின் தங்கியவை. இதனால் மத்திய அரசு தெற்கில் உள்ள மாகாணங்களுக்கு அதிக நிதியை ஒதுக்கிறது. ஜெர்மனியில் கிழக்கு ஜெர்மனி மேற்கு ஜெர்மனியை விட பின்தங்கியதாக உள்ளதால் கிழக்கு ஜெர்மனிக்கு மத்திய அரசால் அதிக நிதி ஒதுக்கப்படுகிறது. இதே நிலைமைதான் சீனாவிலும் உள்ளது. ஆனால், அங்கு பின்தங்கிய மாகாணங்களில் வசிக்கும் மக்கள் தொகை எண்ணிக்கை மிக குறைவாகும். ஆனால், இந்தியாவில் பின்தங்கிய மாநிலங்களிலும் அதிக மக்கள் வசிக்கிறார்கள். அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் மத்திய அரசு மாநிலங்களுக்கு வழங்கும் நிதி பகிர்வு கொள்கைகளுக்கும் இந்தியாவில் உள்ள நிதி பகிர்வு கொள்கைகளுக்கும் வித்தியாசம் உள்ளது.
தமிழகத்துக்கு 26 பைசா – உ.பி.க்கு 220 பைசா
மத்திய அரசின் ஜி.எஸ்.டி. வசூலில் மாநிலங்களுக்கு வழங்கும் வருவாய் பகிர்வில் தென் மாநிலங்களுக்கு பாரபட்சம் காட்டுகிறது என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, கர்நாடகா ஆகிய தென் மாநிலங்களில் இருந்து வசூலிக்கப்பட்ட ஜி.எஸ்.டி. மற்றும் நேரடி வரிகள் (இறக்குமதி வரி மீதான ஜிஎஸ்டியைத் தவிர்த்து)- ரூ.22,26,983.39 கோடி. அதே காலக்கட்டத்தில் உத்திரப் பிரதேசத்தில் வசூலிக்கப்பட்ட வரி – ரூ.3,41,817.60 கோடி. கடந்த 5 ஆண்டுகளில் மேற்குறிப்பிட்ட தென் மாநிலங்களுக்கு வழங்கிய வரிப்பகிர்வுத் தொகை – ரூ.6,42,295.05 கோடி. கடந்த 5 ஆண்டுகளில் உத்தரப்பிரதேசத்துக்கு மட்டும் வழங்கிய வரிப்பகிர்வுத் தொகை – சுமார் ரூ.6,91,375.12 லட்சம் கோடி. அதில் மாநிலங்கள் கொடுத்த ஒவ்வொரு ரூபாய்க்கும் மத்திய அரசு திருப்பி அனுப்பிய தொகை வருமாறு:- தமிழ்நாட்டுக்கு 26 பைசா, கர்நாடகாவுக்கு 16 பைசா, தெலுங்கானாவிற்கு 40 பைசா, கேரளாவிற்கு 62 பைசா, மத்தியபிரதேசத்துக்கு 170 பைசா, உத்தரப்பிரதேசத்துக்கு 220 பைசா, ராஜஸ்தானுக்கு 114 பைசா.
பாரபட்சமான நிலை
ஒரே மாதிரியான வரி பகிர்வை வலியுறுத்தி கடந்த மாதத்தில் கேரளா, கர்நாடகா, தமிழகத்தைச் சார்ந்த ஆளும் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் புதுடில்லியில் போராட்டத்தை நடத்தியுள்ளார்கள். உச்சகட்டமாக, கர்நாடகத்தைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் வரி பகிர்வில் பாரபட்சமான நிலை தொடர்ந்தால் தென்னிந்தியாவை தனி நாடாக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்று பாராளுமன்றத்தில் கடந்த கூட்டத் தொடரில் பேசியுள்ளார்.
நிதி ஒதுக்கீடு
ஓரிரு தினங்களுக்கு முன்னர் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்கும் வரி பகிர்வின் கூடுதல் தவணைத் தொகை ரூ.1,42,122/- கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டுக்கு ரூ.5,797/- கோடி நிதி பகிர்வு அளிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக உத்தரபிரதேச மாநிலத்திற்கு ரூ.25,495/- கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து பீகாருக்கு ரூ.14,295/- கோடியும், மத்திய பிரதேசத்திற்கு ரூ.11,157/- கோடியும் மகாராஷ்டிராவிற்கு ரூ.11,157/- கோடியும் வழங்கப்பட்டுள்ளது. வழக்கம் போல் தமிழகத்துக்கு குறைவாக நிதி பகிர்வு வழங்கி உள்ளது விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.
தீர்வு
நிதி பகிர்வில் வட மாநிலங்களுக்கு, குறிப்பாக மத்திய அரசு ஆட்சி புரியும் மாநிலங்களுக்கு, அதிக நிதி வழங்கப்படுகிறது என்ற கருத்தை மாற்றி அமைக்க வேண்டிய தருணம் இதுவாகும். இல்லாவிடில் வடக்கு வாழ்கிறது! தெற்கு தேய்கிறது! என்ற முழக்கங்கள் அதிகரிப்பதோடு வடக்கு – தெற்கு பிரிவினை வாதங்களும் அதிகரிக்கும். இதற்கு தீர்வாக எந்த மாநிலங்களில் எவ்வளவு வரி மத்திய அரசுக்கு வசூலிக்கப்படுகிறதோ அதே சதவீதத்தில் மாநில அரசுக்கு மத்திய அரசு தமது பங்கை எடுத்துக் கொண்டு மீத தொகையை வழங்கும் வகையில் ஒரே நாடு – ஒரே மாதிரி வரி பகிர்வு என்ற கொள்கையை அமல்படுத்துவது அவசியமானது என்று தென்னிந்திய மக்கள் விரும்புகிறார்கள்.
உதாரணமாக, தமிழகத்தில் இருந்து ஒரு கோடி ரூபாய் வரி வசூல் மத்திய அரசால் செய்யப்பட்டால் மத்திய அரசு தமது பங்கான 58 சதவீதத்தை எடுத்துக்கொண்டு மீதி 42 சதவீதமான 42 லட்சத்தை தமிழகத்துக்கே வழங்கி விட வேண்டும். குறைவாக வரி செலுத்தும் மாநிலங்களில் வசூலிக்கப்படும் வரிக்கேற்ப மத்திய அரசு தமது பங்கை எடுத்துக் கொண்டு மீத தொகையை அந்த மாநிலத்திற்கு வழங்க வேண்டும். இதன் மூலம் குறைவான வரி செலுத்தும் மாநிலங்களுக்கு அதிக நிதி ஒதுக்கீடு வழங்கப்படுவதால் அதிக வரி செலுத்தும் மாநிலங்கள் புறக்கணிக்கப்படுகின்றன என்ற குற்றச்சாட்டு முற்றுப்பெறும். பின்தங்கிய மாநிலங்களை வளமைப்படுத்த மாற்று திட்டங்களை மத்திய அரசு கையாள வேண்டும்.