spot_img
December 4, 2024, 1:35 pm
spot_img

புதிய பிரிவுகள், புதிய துணை பிரிவுகளுடன் புதுப்பொலிவுடன் நுகர்வோர் பூங்கா, நீங்களும்  பங்களிக்கலாம் என்பதை விளக்கும் நுகர்வோர் சாமி

இன்று காலை  நுகர்வோர் இதழ் அலுவலகத்திற்கு நுகர்வோர் சாமி வருகை புரிந்தார். அவருக்கு வணக்கம் செலுத்தி செலுத்தி விட்டு “ஏதேனும் முக்கிய செய்திகள் உண்டா சாமி? என கேட்டதற்கு “நுகர்வோர் செய்திகள் இல்லாமல் எந்த நாளையும் கடந்து விட முடியாது” எனக் கூறிவிட்டு உரைவீச்சை ஆரம்பித்தார்  நுகர்வோர் சாமி.

“நுகர்வோர் பூங்கா இதழை புது பொலிவுடன் மாற்றி அமைத்துள்ளீர்கள் வாழ்த்துக்கள் உங்களுக்கு” என்றார் நுகர்வோர் சாமி. “நுகர்வோர் பூங்காவின் மெனுவில் உள்ள மாற்றங்களை கவனித்திருப்பீர்கள் போல, சாமி” என்றேன் நான். 

“இதைக் கூட கவனிக்காமல் இருக்க முடியுமா? சேவை குறைபாடு (deficiency in service_, நியாயமற்ற வர்த்தகம் (unfair trade), குறைபாடான பொருட்கள், கட்டுப்படுத்தப்பட்ட வர்த்தகம் (restrictive trade), நியாயமற்ற ஒப்பந்தம் (unfair contract), அதிக விலைக்கு விற்பது (excessive price), தவறாக வழிநடத்தும் விளம்பரங்கள் (misleading advt) மற்றும் இதர அனைத்தையும் நுகர்வோருக்கு ஏற்படும் “பிரச்சனைகள்” என்ற தலைப்பின் கீழ் மெனுவில் கொண்டு வந்து விட்டீர்கள்.  நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தில் நுகர்வோருக்கு ஏற்படும் பிரச்சனைகள் குறித்து விளக்கப்பட்டுள்ள அனைத்து அம்சங்களும் இதில் கொடுக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியாக உள்ளது” என்றார் நுகர்வோர் சாமி.

“நுகர்வோர் பூங்கா மெனுவில் மாற்றங்களில் வேறென்ன பார்த்தீர்கள், சாமி” என்றேன் நான். “நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் மட்டுமே நுகர்வோர் பாதுகாப்புக்கானது என்று பலர் கருதுகிறார்கள். அதே வேளையில் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டங்களாக உணவு பாதுகாப்பு சட்டம், அத்தியாவசிய பொருட்கள் சட்டம், தரம் நிர்ணயம் குறித்த சட்டம், மருந்து கட்டுப்பாட்டுச் சட்டம், மருத்துவ ஆணையச் சட்டம், வங்கி மற்றும் நிதி நிறுவனங்களுக்கான சட்டங்கள், காப்பீட்டுச் சட்டம், சட்ட அளவையியல் சட்டம் போன்ற பல சட்டங்கள் உள்ளன.  இந்த சட்டங்கள் குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு கொண்டு செல்லும் வகையில் இந்த சட்டங்களை குறிப்பிட்டு “சட்டம்” என்ற தலைப்பின் கீழ் வரிசைப்படுத்தி இருப்பது சிறப்பாக உள்ளது” என்றார் நுகர்வோர் சாமி.

“இதே போலே நுகர்வோர் நீதிமன்றங்களில் நடைபெறும் பல்வேறு துறை வாரியான வழக்குகளின் தீர்ப்புகளை தேடுவதற்கு எளிமையாக “துறைகள்” என்ற தலைப்பில் வீட்டு உபயோகம், உணவு, வீட்டு வசதி, மருத்துவம் மற்றும் மருந்து பொருட்கள், வங்கி, நிதி, காப்பீடு, போக்குவரத்து, அரசு மற்றும் இதர என்று பிரிவுகளை ஏற்படுத்தி இருப்பதும் மக்களுக்கு உபயோகமாக இருக்கும் என்றார்” நுகர்வோர் சாமி.

“சந்தையில் கிடைக்கும் பொருட்கள் மற்றும் சேவைகளை ஆய்வு செய்வது,, நுகர்வோருக்கு பாதிப்பு தரும் குற்றங்களை புலனாய்வு செய்வது, நுகர்வோர் தொடர்பான சட்டங்களையும் விதிகளையும் திறனாய்வு செய்வது, நுகர்வோர் சந்திக்கும் பிரச்சனைகளை கண்டறிவது, நுகர்வோர் சந்திக்கும் சவால்களை கண்டறிவது, நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்துக்கும் மற்ற சட்டங்களுக்கும் உள்ள ஒப்பீடுகளையும் வெளிநாட்டுச் சட்டங்களுடன் ஒப்பீடுகளையும் அறிவது உள்ளிட்டவற்றை “ஆய்வுகள்” என்ற தலைப்பின் கீழ் நுகர்வோர் பூங்காவில் கொண்டு வந்திருப்பது நுகர்வோருக்கு வழிகாட்டும் அம்சங்களாக உள்ளன” என்றார் நுகர்வோர் சாமி.

“நுகர்வோர் பூங்காவில் ஏற்படுத்தப்பட்டுள்ள புதிய தலைப்புகள், புதிய பிரிவுகளில் எழுதுவதற்கு எழுத்தாளர்களும் அறிவு ஜீவிகளும் முன்வர வேண்டும் சாமி. எவ்வித கட்டணமும் இல்லாமல் பொதுத்தளத்தில் நுகர்வோர் பூங்கா வாசகர்களின் ஆதரவுடன் ஒரு ஆண்டு காலத்தை நிறைவு செய்ய உள்ளது. கடந்த ஓராண்டில் ஏற்பட்ட அனுபவங்கள் மற்றும் புதிய மாற்றங்களை மனதில் வைத்து நுகர்வோர் பூங்காவின் புதிய தலைப்புகளும் பிரிவுகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன” என்றேன் நான்.

“நுகர்வோர் பாதிக்கப்படாமல் முன்னெச்சரிகையாக இருக்கவும் பாதிப்புக்குள்ளாகும் போது தீர்வு காணவும் நுகர்வோர் உரிமைகளுக்காகவும் பாதுகாப்புக்காகவும் நுகர்வோர் பூங்காவை படியுங்கள்! எவ்வித கட்டணமும் இல்லாமல் பொதுத்தளத்தில் வெளியிடப்படும் நுகர்வோர் பூங்கா தொடர்ந்து வெளியாக ஆதரவு தாருங்கள்!” 

“நுகர்வோர் பூங்கா சிறப்பாக வெளிவர தாங்கள் நுகர்வோர் பூங்காவின் நல்லெண்ண தூதராக (Goodwill Ambassador), புரவலராக (Patron), விரிவாக்க அலுவலராக (Extension Officer) பணியாற்றலாம். நுகர்வோர் பூங்காவிற்கு விளம்பரங்களை (Advertiser) வழங்கலாம். நுகர்வோர் பூங்காவில் எழுதலாம் (Writer). இதற்கான விவரங்களை நுகர்வோர் பூங்காவில் “நாங்கள்” என்ற பகுதியில் விரிவாக காணலாம்” என்று கூறிவிட்டு கிளம்பினார் நுகர்வோர் சாமி. 

நா.சின்னச்சாமி
நா.சின்னச்சாமி
நா.சின்னச்சாமி, பணி நிறைவுபெற்ற வருவாய்துறை அலுவலர்

தொடர்புடைய கட்டுரைகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -Central Learning campus

சமீபத்திய கட்டுரைகள்