கரெஞ்சித் கவுர் வோரா என்ற இயற்பெயரைக் கொண்ட சன்னி லியோன் இந்திய வம்சாவளியை சார்ந்த இந்தோ-கன்னடியன் ஆவார். இவர் கனடிய பாலிவுட் நடிகையும், பெண் தொழிலதிபரும், முன்னாள் ஆபாசதிரைப்பட நடிகையுமாவார். இவர் 2012ல் பூஜா பட் இயக்கிய ஜிஸ்ம் 2 என்ற திரைப்படத்தில் நடித்து பாலிவுடில் அறிமுகமானார். ஹிந்தி திரைப்படங்களில் நடித்து திரையுலகில் வலம்வந்த இவர், 2014-ம் ஆண்டு தமிழில் வடகறி திரைப்படத்தில் நடித்து அறிமுகமானவர். பின்னர் இவர் தமிழில் வீரமாதேவி திரைப்படத்தில் கதாநாயகியாகவும் நடித்துள்ளார். இவரின் ஆபாச வலைதளத்தால் இவர் இந்தியாவில் இருக்கக்கூடாது என எதிர்ப்பு இவருக்கு ஏற்பட்டது.
லக்னோவைச் சேர்ந்த பிரேமா சின்ஹா என்பவர் எக்ஸ்பீரியன் டெவலப்பர்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தின் மீது உத்தரப் பிரதேச மாநில நுகர்வோர் ஆணையத்தில் புகார் ஒன்றை கடந்த வாரம் தாக்கல் செய்துள்ளார்.
(தொடர்ச்சி கீழே உள்ள அட்டவணை செய்திகளுக்கு கீழ்)
ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்ட பிரமுகர்கள் கலந்து கொள்ளும் உயர்மட்ட இந்திரா காந்தி பிரதிஷ்டான் ஆடிட்டோரியம் மற்றும் உயர் பாதுகாப்பு வளையத்தில் உள்ள உயர்நீதிமன்றம் ஆகியவற்றுக்கு அருகாமையில் உள்ள குடியிருப்பு பகுதியில் எக்ஸ்பீரியன் டெவலப்பர்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தினர் நடிகை சன்னி லியோனின் உணவகம் மற்றும் பார் கட்டுமான பணிகளை மேற்கொண்டு வருவதாக புகாரில் தெரிவிக்கப்பட்டது. குடியிருப்பு பகுதியில் சமூக பயன்பாட்டுக்கு (community centre) ஒதுக்கப்பட்ட நிலத்தை ஒரு வணிக நிறுவனத்துக்கு ஒதுங்கி “சன்னி லியோன் எழுதிய சிகா லோகா” என்ற பெயரில் பார் மற்றும் உணவகத்தை கட்டுவது ஆபத்தானது என்று வழக்கு தாக்கல் செய்தவர் தரப்பில் வாதிடப்பட்டது.
வழக்கு விசாரித்த மாநில நுகர்வோர் ஆணையம் சன்னி லியோனின் சன்னி லியோனுக்கு சொந்தமான உணவகம் மற்றும் பார் கட்டுமானத்துக்கு தடை விதித்து உத்தரவிட்டது. அங்கீகரிக்கப்படாமல் இந்த கட்டிடத்தை கட்டுவது அருகாமையில் உள்ள உயர் நீதிமன்றத்திற்கும் முக்கிய பிரமுகர்கள் வரக்கூடிய ஆடிட்டோரியத்திற்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. இதன் மூலம் அந்த பகுதியில் உள்ள குடியிருப்பாளர்களுக்கு நிரந்தர தொந்தரவு உருவாகிறது. இத்தகைய காரணங்களால் நிறுவனம் கட்டி வரும் கட்டுமானத்தை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரியல் எஸ்டேட் (ஒழுங்குமுறை மற்றும் மேம்பாடு) சட்டம், 2016, உத்தரபிரதேச அடுக்குமாடி குடியிருப்பு (கட்டுமானம், உரிமை மற்றும் பராமரிப்பு மேம்பாடு) சட்டம், 2010 ஆகியவற்றுக்கு முரணாக லக்னோ மேம்பாட்டு ஆணையம் இதுபோன்ற சர்ச்சைக்குரிய திட்டத்திற்கு ஒப்புதல் அளித்ததற்கும், அனுமதிக்கப்பட்ட வரைபடத்தில் மாற்றம் செய்ததற்கும் மாநில நுகர்வோர் ஆணையம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
அனுமதிக்கப்பட்ட திட்ட விதிகளை மீறும் எந்தவொரு கட்டுமானத்தையும் உடனடியாக நிறுத்த வேண்டும், பயன்பாட்டுக்கு ஒதுக்கப்பட்டு ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட பகுதிகளை மீட்டெடுக்க மாநில நுகர்வோர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவை கண்டிப்பாக பின்பற்றுவதை உறுதி செய்யும் வகையில், ஏழு நாட்களுக்குள் கட்டுமான நிறுவனம் உறுதிமொழியை சமர்ப்பிக்க வேண்டும். சட்டவிரோத கட்டிடங்களை அகற்ற தவறினால் அங்கீகரிக்கப்படாத கட்டமைப்புகளை இடிக்கும் உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் என்று நுகர்வோர் ஆணையத்தின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்தரவின் நகலை லக்னோ மேம்பாட்டு ஆணையத்தின் துணைத் தலைவர் மற்றும் செயலாளருக்கு வழங்குமாறும் உத்தரவுகளை அமல்படுத்த உத்தரவிட்டுள்ள நுகர்வோர் ஆணையம் வழக்கின் விசாரணையை பிப்ரவரி 19 ஆம் தேதிக்கு மீண்டும் எடுத்துக் கொள்ள உள்ளது.
நுகர்வோர் பூங்கா (The Consumer Park) கருத்து:
சந்தேகம் சாமிக்கண்ணு: இடைக்கால தடை உத்தரவுகளை பிறப்பிக்க நுகர்வோர் நீதிமன்றங்களுக்கு அதிகாரம் உள்ளதா?
நுகர்வோர் சாமி: நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 2019, பிரிவு 38 (8) -ன்படி இடைக்கால உத்தரவுகளை வழங்கும் அதிகாரம் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
சந்தேகம் சாமிக்கண்ணு: எந்த நுகர்வோர் நீதிமன்றம் இப்படி தடை உத்தரவுகளை வழங்கியதை நான் கேள்விப்பட்டதே இல்லையே?
நுகர்வோர் சாமி: சுமார் 5 லட்சம் ரூபாயை மின் கட்டணமாக செலுத்த தவறினால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்ற அறிவிப்பை தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பொறியாளர் ஒருவர் திருச்செங்கோட்டில் தொழில் செய்து வரும் ஒரு நிறுவனத்துக்கு எந்த முன்னறிவிப்பையும் வழங்காமல் அனுப்பி உள்ளார். இந்த வழக்கை விசாரித்த நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி டாக்டர் வீ. ராமராஜ் தலைமையிலான அமர்வு இந்த மின்சார வாரிய கட்டணக் கேட்புக்கு இடைக்கால தடை உத்தரவை பிறப்பித்து வழக்கு விசாரணையை அடுத்த மாதத்திற்கு ஒத்தி வைத்துள்ளது. கட்டண பாக்கி இருந்தால் எந்த அடிப்படையில் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது என்று விளக்கி மின் நுகர்வோருக்கு அறிவிப்பு கொடுத்து நுகர்வோர் விளக்கம் அளிக்கவாய்ப்பு எதனையும் தராமல், பணம் செலுத்த தவறினால் மின் இணைப்பை துண்டிக்கப்படும் என்ற அறிவிப்பு இயற்கை நீதிக்கு முரணானது என்று இடைக்கால உத்தரவில் கூறப்பட்டுள்ளது.