இமாச்சலப் பிரதேச மாநிலம் குலு மாவட்டத்தில் வசித்து வருபவர் மறைந்த ஸ்ரீ அமர் சந்த் நேகியின் மனைவி செரிங் டோல்மா. இவருக்கு சொந்தமான ‘மாருதி ஆல்டோ கே10’ என்ற வகை காரை நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் கம்பெனியில் காப்பீடு செய்திருந்தார். செப்டம்பர் 21, 2020 அன்று, காரை ஸ்ரீ ராம் சிங்கின் மகன் ஸ்ரீ செரிங் நேகி ஓட்டிக் கொண்டு இருந்தபோது திடீரென மாடு ஒன்று முன்னால் வந்ததால் காரானது விபத்துக்குள்ளானது. இதனால், வாகனம் சாலையை விட்டு விலகி பலத்த சேதமடைந்தது. விபத்து குறித்து காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு, குலு காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.
விபத்தால் ஏற்பட்ட சேதத்துக்கு இழப்பீடு கேட்டு இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் டோல்மா விண்ணப்பம் செய்து தேவையான ஆவணங்களை சமர்ப்பித்துள்ளார். ஆனால், இழப்பீட்டு கோரிக்கையை இன்சூரன்ஸ் நிறுவனம் நிராகரித்துவிட்டது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான வாடிக்கையாளர் இமாச்சலப் பிரதேசம் குலு மாவட்டத்தில் உள்ள மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் கடந்த 2022 செப்டம்பர் மாதத்தில் வழக்கு (CC 14/2022) தாக்கல் செய்துள்ளார்.
டிரைவரின் வேகமும், கவனக்குறைவும்தான் விபத்துக்கு காரணம் என முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், மாட்டைத் தவிர்க்க முற்பட்ட போது வாகனம் சறுக்கி விபத்துக்குள்ளானதாக வழக்கு தாக்கல் செய்துள்ளவர் புகாரில் குறிப்பிட்டுள்ளார். புகாரில் குறிப்பிட்டுள்ள காயங்கள் விபத்தின் சூழ்நிலைகளுடன் பொருந்தவில்லை என்று காப்பீட்டு நிறுவனம் வாதிட்டது. மேலும், உண்மையை மறைத்து தவறான விபரங்களுடன் இழப்பீட்டு கோரிக்கையை கேட்டுள்ளதால் வாடிக்கையாளரின் கோரிக்கையை தள்ளுபடி செய்யப்பட்டது. தங்கள் தரப்பில் எவ்வித சேவை குறைபாடும் இல்லை. இதனால் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று காப்பீட்டு நிறுவனம் நீதிமன்றத்தில் வாதிட்டது .
விசாரணை முடிவடைந்த நிலையில் கடந்த 24 ஆகஸ்ட் 2024 அன்று தீர்ப்பளித்த மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் காப்பீட்டு நிறுவனத்தின் வாதத்தை நிராகரித்து வழங்கிய தீர்ப்பின் விவரம் வருமாறு.
“காரானது விபத்துக்குள்ளாகும் போது அதில் நான்கு பயணிகள் இருந்துள்ளார்கள். விபத்துக்குள்ளானதும் சம்பவ இடத்தில் இருந்த ஒரு மூன்றாம் நபர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த மூன்றாம் மனிதர் கொடுத்த புகாரில் வாகனம் வேகமாகவும் அஜாக்கிரதையாகவும் ஓட்டப்பட்டதால் விபத்து ஏற்பட்டதாக தெரிவித்துள்ளார். காவல் நிலையத்தில் புகார் அளித்தவர் காரின் முன்பாக மாடு வந்ததை பார்க்காமல் இருந்திருக்கலாம். இந்நிலையில் மூன்றாம் மனிதர் கொடுத்த தகவலின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையை முடிவானதாக கருத இயலாது. காவல்துறை விசாரணையிலும் காவல்துறை வழக்கை விசாரித்து தாக்கல் செய்த இறுதி அறிக்கையிலும் (charge sheet) உள்ள சங்கதிகளின் அடிப்படையில் வாடிக்கையாளர் கூறுவது போல விபத்து ஏற்பட்டுள்ளது என்பதை உறுதிப்படுத்த முடிகிறது. இதனால் வாடிக்கையாளரின் இழப்பீட்டுத் தொகையை கோரிக்கையை இன்சூரன்ஸ் நிறுவனம் நிராகரித்தது சேவை குறைபாடு என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது”.
வழக்கு தாக்கல் செய்தவரின் காருக்கு விபத்தால் ஏற்பட்ட சேதத்துக்கு இழப்பீட்டுத் தொகையாக ரூ 1,78,500/- ஐ வழக்கு தாக்கல் செய்த நாளிலிருந்து ஆண்டொன்றுக்கு ஆறு சதவீத வட்டி சேர்த்தும் காப்பீட்டு நிறுவனத்தின் சேவை குறைபாட்டால் ஏற்பட்ட மன உளைச்சலுக்கு இழப்பீடாக ரூ 25,000/- மற்றும் வழக்கின் செலவு தொகையாக ரூ 5,000/- ஆகியவற்றைம் காப்பீட்டு நிறுவனம் வழக்கு தாக்கல் செய்தவருக்கு வழங்க வேண்டும் என்று மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.