பன்னிரண்டாம் வகுப்பு முடித்த மாணவர்கள் பொறியியல் கல்லூரிகளில் நான்காண்டு படித்து பொறியியல் பட்டம் பெறுகிறார்கள். பாலிடெக்னிக் கல்லூரியில் பட்டயம் பெற்ற மாணவர்கள் பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டில் சேர்ந்து மூன்றாண்டுகள் படித்து பொறியியல் பட்டம் பெறுகிறார்கள். சொந்த சூழ்நிலை காரணமாக பன்னிரண்டாம் வகுப்பு முடித்த மாணவர்கள் கல்லூரிக்கு செல்ல இயலாத சூழ்நிலை ஏற்பட்டால் அஞ்சல் வழி கல்வியில் கலை மற்றும் அறிவியல் பட்டங்களை பலர் படிக்கிறார்கள். சூழ்நிலை காரணமாக கல்லூரியில் சேராவிட்டாலும் பொறியியல் பட்டம் பெற முடியுமா? என்றால் முடியும் என்பதுதான் இந்தக் கட்டுரையில் உள்ள விவரங்கள் ஆகும்.
தி இன்ஸ்டிடியூஷன் ஆஃப் இன்ஜினியர்ஸ் இந்தியா (The institution of Engineers India) என்ற அமைப்பு மெக்கானிக்கல் இன்ஜினியரிங், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங், எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங், கம்ப்யூட்டர் சயின்ஸ் அண்ட் இன்ஜினியரிங், கெமிக்கல் இன்ஜினியரிங், சிவில் இன்ஜினியரிங் உட்பட உட்பட 15 வகையான இன்ஜினியரிங் பட்டங்களுக்கான தேர்வுகளை நடத்துகிறது. கடந்த 1920 ஆம் ஆண்டு சென்னையில் தொடங்கப்பட்ட இந்த அமைப்பு பின்னர் இதன் தலைமையிடத்தை கொல்கத்தாவிற்கு மாற்றியது. இந்திய அரசின் கல்வித் துறையும் இந்த அமைப்பு வழங்கும் ஏ.எம்.ஐ.இ., (Associate Membership in Institution of Engineers) என்ற பட்டம் பி.இ., மற்றும் பி. டெக்., பட்டங்களுக்கு சமமானது என்று அங்கீகரித்துள்ளது.
ஏ.எம்.ஐ.இ., படிப்பில் முதல் பகுதியில் (Section A) பன்னிரண்டாம் வகுப்பு படித்தவர்கள் 10 பாடங்களில் தேர்வு எழுத வேண்டும். பட்டய படிப்பு படித்தவர்கள் நான்கு பாடங்களில் தேர்வு எழுதினால் போதுமானது. இந்தப் பாடங்களில் வெற்றி பெற்ற பின்னர் இரண்டாம் பகுதியில் (Section B) எந்த பொறியியல் படிப்பில் பட்டம் பெற நினைக்கிறோமோ அதற்குரிய 9 பாடங்களில் தேர்வு எழுதி வெற்றி பெற வேண்டும். ஆய்வுக்கூட பாடங்களும் ப்ராஜெக்ட் தயாரிப்பு பாடங்களும் இவற்றோடு நிறைவு செய்ய வேண்டும். இவற்றில் வெற்றி பெற்றால் தி இன்ஸ்டிடியூஷன் ஆஃப் இன்ஜினியர்ஸ் அமைப்பில் அசோசியேட் மெம்பர்ஸ் என்ற சான்றிதழ் வழங்கப்படுகிறது. இந்த சான்றிதழே பொறியியல் பட்ட சான்றிதழுக்கு இணையானதாகும். அனைத்து மாநிலங்களிலும் இத்தேர்வுகளை எழுத தேர்வு மையங்கள் உள்ளன. லட்சக்கணக்கானோர் இந்த தேர்வுகளை எழுதி வெற்றி பெற்றுள்ளார்கள். சர்வதேச அளவில் இந்த பட்டத்துக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இதை போலவே தி ஏரோநாட்டிக்கல் சொசைட்டி ஆப் இந்தியா என்ற அமைப்பு ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங் பிரிவில் தேர்வுகளை நடத்தி ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங் பட்டத்துக்கு இணையான சான்றிதழை வழங்குகிறது. தி மெக்கானிக்கல் இன்ஜினியர்ஸ் இந்தியா என்ற அமைப்பு மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பிரிவில் தேர்வுகளை நடத்தி மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படத்துக்கு இணையான சான்றிதழை வழங்குகிறது. தி பயர் என்ஜினியர்ஸ் இந்தியா என்ற அமைப்பு பயர் இன்ஜினியரிங் பிரிவில் தேர்வுகளை நடத்தி பயர் இன்ஜினியரிங் பட்டத்துக்கு இணையான சான்றிதழ் வழங்குகிறது.
இந்த அமைப்புகளின் இணையதளங்களில் சென்று பட்டங்களின் அங்கீகாரம், எழுத வேண்டிய தேர்வு தாள்களின் எண்ணிக்கை மற்றும் பாடங்கள், தேர்வு எழுதும் மையங்கள், கட்டணங்கள் போன்ற அனைத்து விவரங்களையும் அறிந்து கொள்ளலாம். இதே அமைப்புகள் எம் இ பட்டத்துக்கு இணையான பாடங்களில் தேர்வுகளையும் நடத்தி சான்றிதழ்கள் வழங்குகின்றன. எல்லாவற்றிற்கும் ஒரு மாற்று வழி உண்டு. கல்லூரிக்கு செல்லாமலே இன்ஜினியரிங் பட்டம் பெறுவதற்கும் வழிகள் உள்ளது. முயற்சி பலமுறை என்னை கைவிட்டது உண்டு. ஆனால் முயற்சியை நான் ஒருபோதும் கைவிடமாட்டேன் என்பதற்கு ஏற்ப பொறியியல் கல்லூரியில் சேர இயலவில்லை என்று கவலை வேண்டாம். மாற்று வழிகளில் இணையான பட்டங்களை பெற்று வெற்றி பெறலாம்.