spot_img
October 18, 2024, 8:27 am
spot_img

குறைபாடான தொலைக்காட்சி பெட்டியை விற்பனை செய்ததற்காக அமேசான் நிறுவனமும் விற்பனையாளரும் இழப்பீடு வழங்க எர்ணாகுளம் நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு

கேரள மாநிலம் கொச்சியில் வசித்து வருபவர் டி. யு. அனீஷ். இவர் கடந்த 30 ஆகஸ்ட் 2018 அன்று அமேசான் ஆன்லைன் விற்பனை தளத்தின் மூலம் ரூ 49, 990/- செலுத்தி கிளவுட் டெயில் இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற விற்பனையாளரிடமிருந்து பானாசோனிக் நிறுவனத்தால் உற்பத்தி செய்யப்பட்ட தொலைக்காட்சி பெட்டியை விலைக்கு வாங்கியுள்ளார். டெலிவரி செய்யப்பட்ட தொலைக்காட்சி பெட்டியில் உற்பத்தி குறைபாடு இருந்துள்ளது. பலமுறை தொலைக்காட்சி பெட்டியை   இயக்க முயற்சித்தும் தொலைக்காட்சி பெட்டி வேலை செய்யவில்லை. இது குறித்து அமேசான் நிறுவன வாடிக்கையாளர் பிரிவில் பலமுறை தெரிவித்தும் அமேசான் நிறுவனத்திடம் இருந்து சரிவர பதில் வழங்கப்படவில்லை. விற்பனையாளரான கிளவுட் டெயில் நிறுவனமும் தொலைக்காட்சி பெட்டியை பழுது நீக்கி தரவோ அல்லது அதனைப் பெற்றுக் கொண்டு பணத்தை திரும்ப வழங்கவோ அமேசான் நிறுவனம் முன் வரவில்லை.

செலுத்திய பணத்துக்கு உரிய பொருளை வழங்காமல் உற்பத்தி குறைபாடான பொருளை  வழங்கப்பட்டதால் மனமுடைந்த டி. யு. அனீஷ் எர்ணாகுளம் நுகர்வோர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் அமேசான் நிறுவனத்தின் மீதும் கிளவுட் டெயில் நிறுவனத்தின் மீதும் வழக்கு தாக்கல் செய்தார். நீதிமன்றத்தில் இருந்து அமேசான் நிறுவனத்துக்கும் கிளவுட் டெயில் நிறுவனமும் சம்மன் அனுப்பப்பட்டும் இரண்டு நிறுவனங்களும் நீதிமன்றத்தில் ஆஜராகி தங்களது பதிலை தெரிவிக்கவில்லை.  இந்நிலையில் கடந்த மாதத்தில் (2024 ஜூன்) எர்ணாகுளம் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கியுள்ளது. 

இந்தத் தீர்ப்பின் கூறப்பட்டுள்ளதாவது, அமேசான் மற்றும் க்ளவுட் டெயில் நிறுவனங்களுக்கு மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் இருந்து அறிவிப்பு அனுப்பப்பட்டும் அந்த நிறுவனங்கள் ஆஜராகி பதிலளிக்க தவறிவிட்டனர். நிறுவனங்களின் இத்தகைய போக்கு புகாரில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை நிறுவனங்கள் ஏற்றுக் கொள்கின்றன என கருதப்பட வேண்டி உள்ளது. மேலும், வழக்கு தாக்கல் செய்துள்ளவர் கூறுவதை நிறுவனங்கள் மறுக்காத நிலையில் அவருடைய புகாரில் உள்ள சங்கதிகள் ஏற்றுக்கொள்ள வேண்டியதாக உள்ளது. வழக்கு தாக்கல் செய்தவர் சமர்ப்பித்துள்ள சாட்சியம், ஆவணங்கள் மற்றும் சான்று பொருளான தொலைக்காட்சி பெட்டி ஆகியவற்றின் மூலம் அமேசான் மற்றும் க்ளவுட் டெயில் ஆகிய நிறுவனங்கள் சேவை குறைபாடு மற்றும் நியாயமற்ற வர்த்தக நடைமுறையை புரிந்துள்ளனர் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. 

அமேசான் மற்றும் க்ளவுட் டெயில் ஆகிய நிறுவனங்கள் வழக்கு தாக்கல் செய்தவரிடம் இருந்து அவருக்கு வழங்கப்பட்ட குறைபாடான தொலைக்காட்சி பெட்டியை பெற்றுக்கொண்டு அவர் வாங்கிய அதே வகையான புதிய குறைபாடு இல்லாத தொலைக்காட்சி பெட்டியை வழங்க வேண்டும் அல்லது வழக்கு தாக்கல் செய்தவருக்கு தொலைக்காட்சி பெட்டியை வாங்குவதற்காக செலுத்திய ரூ 49, 990/- ஐ வழங்க வேண்டும். மேலும், நிறுவனங்களின் சேவை குறைபாடு மற்றும் நியாயமற்ற வர்த்தக நடைமுறை காரணமாக வழக்கு தாக்கல் செய்தவருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு இழப்பீடாக ரூபாய் 15 ஆயிரத்தையும் வழக்கின் செலவுத் தொகையாக ரூபாய் 10 ஆயிரத்தையும் நிறுவனங்கள் இரண்டும் வழங்க வேண்டும் என்று எர்ணாகுளம் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பொதுவாக, ஆன்லைன் விற்பனை தளங்கள் மூலம் பொருட்களை வாங்கும் போக்கு மக்களிடம் அதிகரித்துள்ளது. ஆனால், ஆன்லைன் நிறுவனங்கள் தாங்கள் விற்பனையாளரையும் வாடிக்கையாளர்களையும் இணைக்கும் தளம் மட்டுமே எனக் கூறிக்கொண்டு பணம் செலுத்தி வாங்கப்பட்ட பொருளில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் தங்களுக்கு பொறுப்பு இல்லை என்றும் விற்பனையாளரே பொறுப்பு என்றும் தெரிவித்து வருகின்றன. இதனால், ஆன்லைன் மூலம் பொருட்களை வாங்கும் போது நுகர்வோர் கவனமாக இருப்பது அவசியமாக உள்ளது.

தொடர்புடைய கட்டுரைகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -Central Learning campus

சமீபத்திய கட்டுரைகள்