spot_img
September 8, 2024, 7:36 am
spot_img

பிஎம்டபிள்யூ கார் நிறுவனம் வாடிக்கையாளருக்கு ரூபாய் 50 லட்சம் வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

ஜிவிஆர் இன்ஃப்ரா ப்ராஜெக்ட்ஸ் என்ற நிறுவனம் கடந்த 2009 செப்டம்பர் 25 அன்று பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் வகை காரை பிஎம்டபிள்யூ கார் உற்பத்தி நிறுவன டீலரிடமிருந்து வாங்கி உள்ளது. 2009 செப்டம்பர் 29 அன்று வாங்கப்பட்ட புதிய காரின் இயக்கத்தில் பிரச்சனை ஏற்பட்டு தீவிரமான உற்பத்தி  குறைபாடு (defective manufacture) தெரிய வந்துள்ளது. இதன் காரணமாக பிஎம்டபிள்யூ கார் சர்வீஸ் சென்டருக்கு காரை எடுத்துச் செல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. அப்போதைக்கு குறைபாட்டை சர்வீஸ் சென்டர் நிர்வாகம் சரி செய்து கொடுத்த போதிலும் கடந்த 2009 நவம்பர் 16 அன்று மீண்டும் காரின் இயக்கத்தில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் காரை வாங்கியவர் தரப்பில் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டு மோசடி பிரிவின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டது.

தங்கள் மீது பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யுமாறு கார் உற்பத்தி நிறுவனம் தெலுங்கானா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தது. கார் உற்பத்தி நிறுவனம் தாக்கல் செய்த வழக்கில் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்வதற்கு போதுமான அம்சங்கள் (ingredients) புகாரில் இல்லை எனக் கூறி முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்ததோடு வாடிக்கையாளரின் உற்பத்தி குறைவான காரை வாடிக்கையாளிடமிருந்து எடுத்துக் கொண்டு புதிய காரை வழங்குமாறு உயர்நீதிமன்றம் கடந்த 2012 மார்ச் மாதத்தில் உத்தரவிட்டது.

உயர்நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து கார் உற்பத்தி நிறுவனம்   விற்பனை செய்த காரை எடுத்துக்கொண்டு புதிய காரை வழங்க முன் வந்துள்ளது. ஆனால், காரை வாங்கியவர் புதிய காரை பெற்றுக் கொள்ள மறுத்துவிட்டதோடு இழப்பீடு வழங்க வேண்டும் என்று கார் உற்பத்தி நிறுவனத்திடம் கேட்டுள்ளார். இதற்கு கார் உற்பத்தி நிறுவனம் எவ்வித பதிலையும் தெரிவிக்கவில்லை. 

முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்ததை எதிர்த்து தெலுங்கானா காவல்துறையும் காரை வாங்கிய வாடிக்கையாளரும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.  பிரச்சனைக்குரிய கார் விற்கப்பட்ட 15 ஆண்டுகளுக்குப் பின்னர் உயர்நீதிமன்ற உத்தரவு வழங்கப்பட்ட 12 ஆண்டுகளுக்கு பின்னர் உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கின் விசாரணை சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்றது. விசாரணைக்கு பின்னர் உச்ச நீதிமன்றம் கடந்த ஜூலை 10 அன்று வழங்கிய தீர்ப்பின் விவரம் பின்வருமாறு.

தங்கள் மீது பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கை ரத்து செய்ய வேண்டும் என்று கார் உற்பத்தி நிறுவனம் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்வதற்கு போதுமான அம்சங்கள் (ingredients) புகாரில் இல்லை எனக் கூறி முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்து தீர்ப்பு வழங்கி விட்டு கார் உற்பத்தி நிறுவனத்தை விற்பனை செய்த காரை எடுத்துக்கொண்டு புதிய காரை வழங்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது தவறு என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பில் தெரிவித்துள்ளது.  எவ்வாறு இருப்பினும் விற்கப்பட்ட காரை பெற்றுக் கொண்டு புதிய காரை வழங்க கார் உற்பத்தி நிறுவனம் முன் வந்துள்ளது என்பதை சுட்டிக்காட்டிய உச்ச நீதிமன்றம் வாடிக்கையாளர் வாங்கிய கார்   தற்போது விற்பனை செய்த டீலரிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டது என்பதையும் சுட்டிக்காட்டி “வாடிக்கையாளருக்கு வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதிக்கு ரூபாய் 50 லட்சத்தை இழப்பீடாக வழங்குமாறு கார் உற்பத்தி நிறுவனத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது”.

காரை வாங்கிய நிறுவனம் நீதியை பெறுவதற்கு 15 ஆண்டு காலம் போராடி உள்ளது என்பது கவனிக்கத்தக்கது.  சொந்த உபயோகத்திற்காக ஒரு நுகர்வோர் காரை வாங்கி அதில் பிரச்சனை ஏற்பட்டிருந்தால் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ய இயலும். வணிக பயன்பாடுகளுக்கு (commercial purpose) கார் உள்ளிட்ட எந்த பொருளை வாங்கினாலும் நுகர்வோர் என்ற வரையறையில் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய இயலாது. அதே சமயத்தில் சுய தொழிலுக்காக (self-employment) வணிக பயன்பாட்டுக்காக எந்த பொருளை வாங்கினாலும் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யலாம் என்பது கவனிக்கத்தக்கதாகும். 

சாஜ். ம
சாஜ். ம
சாஜ். ம, வழக்கறிஞர்/ சட்டக் கல்லூரி விரிவுரையாளர்

தொடர்புடைய கட்டுரைகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -Central Learning campus

சமீபத்திய கட்டுரைகள்