இன்று காலை நுகர்வோர் இதழ் அலுவலகத்திற்கு நுகர்வோர் சாமி வருகை புரிந்தார். அவருக்கு வணக்கம் செலுத்தி செலுத்தி விட்டு “என்ன சாமி செய்திகள்? என்றேன் நான். “லாட்டரிகள் சட்டப்படி, லாட்டரி சீட்டு விற்பனையில் உள்ள மாநிலங்களில் பணம் கொடுத்து லாட்டரி சீட்டை வாங்கிய பின்னர் ஏற்படும் பிரச்சனை தொடர்பாகவும் திறன் விளையாட்டு (game of skill) என கூறப்படும் ஆன்லைன் உள்ளிட்ட விளையாட்டின் போது செலுத்திய பணத்தை தொடர்பாகவும் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய இயலாது” என்றார் நுகர்வோர் சாமி.
“என்ன சாமி நியாயம்! பணம் கொடுத்து ஒரு பொருளை அல்லது சேவையை வாங்கினால் அதில் பிரச்சனை ஏற்படும் போது நுகர்வோர் நீதிமன்றத்திற்கு செல்லலாம் என்றுதானே நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் தெரிவிக்கிறது என்றேன்” நான். “2019 நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தில் நியாயமற்ற வர்த்தக நடைமுறை என்றால் என்ன? என்ற பிரிவில் இவற்றிற்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக மத்திய அரசு 2020- ஆம் ஆண்டு தனியாக ஒரு அரசு ஆணையையும் வெளியிட்டுள்ளது. இதனால் லாட்டரி சீட்டுகள், திறன் விளையாட்டுகள் தொடர்பாக பணம் செலுத்தியதில் பிரச்சனை ஏற்பட்டால் நுகர்வோர் நீதிமன்றத்திற்கு செல்ல முடியாது புரிந்து கொள். ஆன்லைன் சூதாட்டமானது திறன் வகை விளையாட்டு என்று உச்ச நீதிமன்றத்தால் வகைப்படுத்தப்பட்டுள்ளது. முழு விவரத்தையும் அறிந்து கொள்ளாமல் சட்ட மேதை போல பேசாதே.” என்று செல்லமாக கோபப்பட்டார் நுகர்வோர் சாமி.“
“கடந்த 1995 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட தீர்ப்பு ஒன்றில் மருத்துவர்கள் மீதான வழக்கை நுகர்வோர் நீதிமன்றங்கள் விசாரிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருந்தது. வழக்கறிஞர்கள் மீது நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய இயலாது என்று கடந்த 14 மே 2024 அன்று உச்ச நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் அமர்வு தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பில் இது போன்ற விலக்கை மருத்துவர்களுக்கும் வழங்க பரிசீலிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்திருந்தனர். இதன் காரணமாக மருத்துவர்கள் மீதான வழக்கை நுகர்வோர் நீதிமன்றங்கள் விசாரிக்கலாமா? என்று முடிவு செய்ய மூன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகளை அடங்கிய அமர்வு அமைக்கப்பட்டது. விசாரணைக்கு பின்னர் நேற்று (07 நவம்பர் 2024) வெளியான தீர்ப்பில் மருத்துவர்கள் மீது நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்வதற்கு தடை விதிக்க முடியாது என்று மூன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு தீர்ப்பளித்துள்ளது” என்றார் நுகர்வோர் சாமி.
“பணம் செலுத்தி வாங்குகின்ற பொருள் மற்றும் சேவைகளில், இவர் மீது வழக்கு தாக்கல் செய்ய முடியாது. அவர் மீது வழக்கு தாக்கல் செய்ய முடியாது என்று நுகர்வோர் நீதிமன்றத்தை அதிகாரத்தை குறைப்பதற்கு எந்த முயற்சியும் நடைபெறாமல் இருந்தால் சரி சாமி” என்றேன் நான்.
“கடந்த 25 அக்டோபர் 2024 அன்று உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் எது மருத்துவ அலட்சியம்? என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவத் தொழிலில் உரிய கவனிப்பை கடைபிடிக்க தவறுதல் (failing exercise due care) கடமையை மீறுதல் (breach of duty) மற்றும் இவற்றின் காரணமாக ஏற்படும் சேதங்கள் (consequential damage) ஆகியவை மருத்துவ அலட்சியம் என முடிவு செய்யப்பட்டு நடவடிக்கை (actionable medical negligence) எடுக்க தக்கனவையாகும். மருத்துவத் தொழிலில் ஏற்றுக் கொள்ளக் கூடிய நடைமுறையை ஒரு மருத்துவர் பின்பற்றும்போது ஏற்படும் எளிய கவனிப்பின்மை (simple lack of care) முடிவு செய்வதில் ஏற்பட்ட பிழை (an error of judgment) அல்லது விபத்து (an accident) போன்றவை காரணமாக பிரச்சனை ஏற்படும் போது, அவற்றை மருத்துவ அலட்சியம் என்று கருத இயலாது. ஒரு மருத்துவர் தேவையான கல்வித் தகுதி மற்றும் திறமை இல்லாமல் சிகிச்சை அளிப்பது (not possessed with the requisite qualification or skill) மருத்துவ அலட்சியமாகும். ஒரு மருத்துவர் தேவையான கல்வித் தகுதியையும் திறமையும் பெற்றிருந்த நிலையிலும் நியாயமான திறமையை பயன்படுத்த தவறினால் (fails to exercise reasonable skill) அத்தகைய செயலும் மருத்துவ அலட்சியமாகும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது” என்றார் நுகர்வோர் சாமி.
“சாமி! நுகர்வோர் பூங்காவில் கடந்த 28 அக்டோபர் 2024 அன்று இந்த தீர்ப்பின் முழு விவரம் வெளியிடப்பட்டுள்ளது” என்றேன் நான்.
“அதி தொழில்நுட்ப (hyper technical) காரணங்களை கூறி இன்சூரன்ஸ் பணத்தை கேட்பதை தள்ளுபடி செய்யக்கூடாது என்று தேசிய நுகர்வோர் ஆணையம் கடந்த ஜூலை 8 அன்று தீர்ப்பு வழங்கியது. இது குறித்து இது குறித்தும் நுகர்வோர் பூங்காவில் 13 ஆகஸ்ட் 2024 அன்று கட்டுரை வெளியாகி உள்ளது. போக்குவரத்து வாகனங்களை ஓட்ட லைசன்ஸ் இல்லாதவர் போக்குவரத்து வாகனத்தை ஒட்டியதால் ஏற்பட்ட விபத்துக்கு இழப்பீடு வழங்க முடியாது என்று இன்சூரன்ஸ் நிறுவனம் தெரிவித்ததை தவறு என்று கூறி சொந்த வாகனங்களை ஓட்ட லைசன்ஸ் இருந்தால் 7500 கிலோக்கு மிகாத போக்குவரத்து வாகனங்களை ஓட்டலாம் என்றும் இதனால் இன்சூரன்ஸ் நிறுவனம் இழப்பீடு வழங்க முடியாது எனக் கூறியது தவறு என்றும் ஓரிரு தினங்களுக்கு முன்பு உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது” என்றார் நுகர்வோர் சாமி.
“நுகர்வோர் பாதுகாப்பு சட்டம்,2020, பிரிவு 2 (47) – ல் வழங்கப்பட்டுள்ள லாட்டரி மற்றும் ஆன்லைன் சூதாட்டம் போன்ற திறன் வகை விளையாட்டுகளுக்கு வழங்கப்பட்டுள்ள விதிவிலக்கை மத்திய அரசு சட்ட திருத்தம் மூலம் நீக்கிவிட்டால் நுகர்வோர் நீதிமன்றங்களிலேயே ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை பெற முடியும்” என்ற கருத்தை தெரிவித்து விட்டு கிளம்பினார் நுகர்வோர் சாமி. “அற்புதமான யோசனை சாமி! ஒவ்வொரு வாரமும் வாருங்கள் – தங்கள் உரைவீச்சை தாருங்கள் சாமி” என்று கூறி அவரை வழி அனுப்பி வைத்தேன்.