spot_img
December 22, 2024, 9:02 am
spot_img

விலை திடீரென பல மடங்கு உயர்வது ஏன் தெரியுமா? இன்னும் மூன்று மாதத்தில் துவரம் பருப்பின் விலை மூன்று மடங்காகி விடுமா?

இந்த மாதம் வெங்காயம் அல்லது தக்காளி அல்லது உருளைக்கிழங்கு விலை கிலோ ரூபாய் இருபதுக்கு விற்றுக் கொண்டிருக்கிறது என்று உதாரணமாக வைத்துக் கொள்ளுங்கள். திடீரென இந்த விலை ரூபாய் 150/-க்கு விற்பனை ஆகிறது என்றால் எப்படி இருக்கும்? ஆனால் மீண்டும் இவற்றின் விலை ஓரிரு வாரங்களில் பழைய விலைக்கு திரும்பி விடுகிறது.  இதுபோன்று உணவு தானியங்களின் விலைகள் திடீரென வழக்கத்தை விட பத்து மடங்குக்கு மேல் உயர்வதும் பின்னர் ஓரிரு வாரங்களில் திரும்பவும் வழக்கமான விலைக்கு வருவதும் ஏதாவது ஒரு உணவு தானியத்துக்கு வருடத்துக்கு ஒரு முறையாவது நடந்து கொண்டுதான் இருக்கிறது. 

தக்காளி, வெங்காயம் போன்ற காய்கறி வகைகளிலும் துவரம் பருப்பு ,உளுந்தம் பருப்பு போன்ற தானிய வகைகளிலும் இத்தகைய திடீர் விலைவாசி உயர்வு ஏற்படும் போது அரசு தரப்பில் கூறப்படுவது என்ன? “உற்பத்தி குறைவாக உள்ளதால் வரத்து குறைவாக உள்ளது. இதனால் சம்பந்தப்பட்ட பொருளின் பற்றாக்குறை காரணமாக விலைவாசி கூடியுள்ளது. சம்பந்தப்பட்ட பொருளை உடனடியாக வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்து விலைவாசி கட்டுக்குள் கொண்டு வரப்படும்”.  அரசின் இந்த பதிலை ஒவ்வொரு முறையும் ஏதாவது ஒரு பொருளின் விலை ஏற்றத்தின் போது கேட்டுக் கொண்டுதான் இருக்கிறோம். தற்போதைய கேள்வி ஏன் இவ்வாறு திடீர் விலை ஏற்றம் ஏற்படுகிறது. இதனை கட்டுப்படுத்த முடியாதா? என்பதாகும்.

வெங்காயம் அல்லது துவரம் பருப்பு போன்ற எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். விளையக்கூடிய ஒரு உணவுப் பொருளின் உற்பத்தி எந்த மாதத்தில் எவ்வளவு இருக்கும் என்பதை முன்கூட்டியே கணிக்க முடியும். ஒரு குறிப்பிட்ட மாதத்தில் ஒரு குறிப்பிட்ட உணவுப்பொருளின் உற்பத்தி/வரவு குறைவாக இருக்கும் என்று கணிக்கும் போது முன்கூட்டியே அரசு வெளிநாட்டிலிருந்து சம்பந்தப்பட்ட பொருளை இறக்குமதி செய்து விடுகிறது இவ்வாறு, இறக்குமதி செய்துவிட்டால் வழக்கமான விலைவாசி திடீரென பல மடங்கு உயர்வதில்லை. வெங்காயம், தக்காளி அல்லது துவரம் பருப்பு போன்ற ஏதாவது ஒரு பொருளின் விளைச்சல் குறிப்பிட்ட மாதத்தில் மிகக் குறைவாகவே இருக்கும் என்பதை அரசு கணிக்க தவறும் போது சம்பந்தப்பட்ட பொருள் முன்கூட்டியே இறக்குமதி செய்யப்படுவதில்லை இதன் காரணமாக சம்பந்தப்பட்ட பொருட்களை தாறுமாறாக பல மடங்கு உயர்ந்து விடுகிறது இதனால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். 

ஒவ்வொரு கிராமத்திலும் கிராம நிர்வாக அலுவலரிடம் விவசாயம் செய்யும் சாகுபடி நிலப்பரப்பின் கணக்கு உள்ளது. இந்த விவசாய சாகுபடி நிலங்களில் என்ன விவசாயம் செய்யப்படுகிறது என்பதை “அடங்கல்” கணக்காக பராமரிக்க வேண்டியது கிராம நிர்வாக அலுவலரின் பணியாகும். விவசாயம் மற்றும் தோட்டக்கலை துறையினரும் ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள விவரங்களை கணக்காக பராமரிக்க வேண்டும். 

வருவாய் உள்வட்டம் என்று அழைக்கப்படும் ஒவ்வொரு பிர்காவிலும் ரெவென்யூ இன்ஸ்பெக்டர் எனப்படும் வருவாய் ஆய்வாளர் தலைமையில் ஒவ்வொரு மாதமும் மூன்றாவது வாரத்தில் ஒரு நாள் கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் விவசாய, தோட்டக்கலை அலுவலர்களின் கூட்டம் நடைபெறுகிறது. இதில் ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள விவசாய சாகுபடி நிலப்பரப்பில் என்னென்ன பயிரிடப்பட்டுள்ளது என்று கணக்கிடப்பட்டு இந்த மாதத்தில் குறிப்பிட்ட வருவாய் உள்பட்டத்தில் உள்ள மொத்த விவசாய நிலப்பரப்பில் என்னென்ன பயிரிடப்பட்டுள்ளது என்று அறிக்கையை தயாரிக்க வேண்டும் இந்த கூட்டத்தில் புள்ளியியல் துறையின் அலுவலரும் கலந்துகொண்டு வருவாய் ஆய்வாளர் தலைமையில் தயாரிக்கும் அறிக்கையில் கையப்பம் செய்கிறார். ஆனால், அறிக்கையில் உள்ள தரவுகளை தயாரிப்பது கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் விவசாய தோட்டக்கலை துறையினராகும்.

இதைப் போன்ற கூட்டம் தாசில்தார் தலைமையில் ஒவ்வொரு மாத இறுதியிலும் நடைபெறுகிறது. இதில் ஒவ்வொரு கிராமத்திலும் என்ன பயிரிடப்பட்டுள்ளது என்ற கணக்கை ஒவ்வொரு பிர்காவுக்கும் வருவாய் ஆய்வாளர்களும் விவசாயம் மற்றும் தோட்டக்கலை துறையினரும் சமர்ப்பிக்கிறார்கள் இந்தக் கூட்டத்திலும் புள்ளியியல் துறை வட்ட அளவிலான அலுவலர் கலந்து கொண்டு இறுதி அறிக்கையில் கையொப்பம் செய்கிறார். இதைப் போன்ற கூட்டமானது ஒவ்வொரு மாதத்தின் முதல் வாரத்திலும் மாவட்ட வருவாய் அலுவலரின் தலைமையில் நடைபெறுகிறது. இதில் ஒவ்வொரு தாசில்தாரும் தங்களது தாலுகாவில் உள்ள மொத்த சாகுபடி நிலப்பரப்பில் எவ்வளவு நிலத்தில் எந்தெந்த பயிர்கள் இந்த மாதத்தில் பயிரிடப்பட்டுள்ளது என்ற கணக்கை சமர்ப்பிக்கிறார் இதற்கு விவசாய மற்றும் தோட்டக்கலை அலுவலர்கள் உதவியாக இருக்கிறார்கள். இங்கும் மாவட்ட அளவிலான புள்ளியியல் துறை அலுவலர் கூட்டத்தில் கலந்து கொண்டு அறிக்கைக்கு ஒப்புதல் வழங்குகிறார்.

மேற்கண்ட முறையில் மாநிலம் முழுவதும், நாடு முழுவதும் உள்ள விவசாயம் செய்யக்கூடிய நிலப்பரப்பில் ஒவ்வொரு மாதமும் என்னென்ன உணவுப் பொருள்களை விளைவிக்கக் கூடிய பயிரிடுதல் நடைபெற்றது என்பது கணக்கிடப்படுகிறது. இந்த பயிரிடுதலை கணக்கிட்டு எந்த மாதத்தில் எந்த பொருள் எவ்வளவு உற்பத்தியாகும் என்பதை முன்கூட்டியே கணித்து விட முடிகிறது.  இதனால், ஏதாவது ஒரு மாதத்தில் ஒரு பொருளின் வரத்து குறைவாக இருக்கும் என்றால் முன்கூட்டியே வெளிநாட்டிலிருந்து சம்பந்தப்பட்ட பொருளை இறக்குமதி செய்து விலைவாசியை உயராமல் பார்த்துக் கொள்ள முடிகிறது. 

இவ்வாறு உணவு பொருளுக்கான விவசாயத்தின் உற்பத்தி எவ்வளவு இருக்கும் என்பதற்கு என்பதை கணக்கிடுவதற்கு அடிப்படையாக விளங்குவது கிராம நிர்வாக அலுவலரால் பராமரிக்கப்படும் “அடங்கல்” என்ற கணக்குப் பதிவேடு ஆகும்.  இதனை சரியாக பராமரிக்காமல் கிராம நிர்வாக அலுவலர்கள் வருவாய் அலுவலருக்கு எவ்வளவு பரப்பு நிலத்தில் என்ன விவசாயம் செய்யப்பட்டு உள்ளது என்று தவறான கணக்கை வழங்குவதிலிருந்து தொடங்குகிறது உற்பத்தியை கணிப்பதில் குளறுபடி.  விவசாய மற்றும் தோட்டக்கலைத் துறையினரும் தங்களது பகுதியில் நன்றாக விவசாயம் உள்ளது என்பது போன்ற தோற்றத்தை காட்டுவதற்கு கிராம நிர்வாக அலுவலர்கள் மூலம் அடங்கல் கணக்கை மிகைப்படுத்தி காட்டுவதால் குளறுபடி அதிகரிக்கிறது.  களத்தில் வருவாய் துறையினரும் விவசாய மற்றும் தோட்டக்கலை துறையினரும் உள்ள நிலையில் புள்ளியியல் துறையினரால் அவர்கள் வழங்கும் கணக்கை ஏற்றுக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. இதனால், புள்ளியல் துறையில் மேற்கொள்ளப்படும் உற்பத்திக்கான தோராய எதிர்பார்ப்பு தவறுதலாக மாறுகிறது.  

இவ்வாறான கணக்கீடுகள் மூலமாகவே ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு மாதமும் என்ன விவசாய பொருள் எவ்வளவு உற்பத்தியாகும் என்பது கணிக்கப்படுகிறது இதையே அரசின் செயலாளர்களும் அமைச்சர்களும் அறிக்கையாக வழங்குகிறார்கள். இந்தக் கணக்கீட்டில் தவறு ஏற்படும் போது முன்கூட்டியே இறக்குமதி செய்ய முடியாத நிலை ஏற்படுவதால்  திடீரென சில பொருட்களின் விலைகள் வானுயிர பறக்கின்றன. இதனால், ஒவ்வொரு மாதமும் எந்தெந்த விவசாயம் எவ்வளவு நிலப்பரவில் பரப்பில் செய்யப்பட்டுள்ளது என்பதை சரியாக கணக்கிட்டால் திடீர் விலைவாசி உயர்வுகள் ஏற்படாது. வேறு வார்த்தையில் சொல்வதென்றால் திடீர் விலைவாசி உயர்வுக்கு காரணம் கிராம “அடங்கல்” கணக்கு சரிவர பராமரிக்காததும் விவசாய மற்றும் தோட்டக்கலை துறையினரால் மிகைப்படுத்தப்பட்ட கணக்கை வழங்குவதும் அடிப்படை காரணமாகும். புள்ளியியல் துறைக்கு அதிகாரங்களை வழங்கினால் இத்தகைய தவறான கணக்குகளை களையெடுத்து விடலாம். 

உதாரணமாக, தற்போது துவரம் பருப்பு கிலோ ரூபாய் 150/-க்கு விற்பதாக வைத்துக் கொள்வோம்.  தமிழகத்தில் இந்த மாதமும் அடுத்த மாதமும் அதற்கு அடுத்த மாதமும் அதாவது ஒரு குறிப்பிட்ட பசலியில் துவரம் பயிரை விவசாயிகள் நிறைய பயிரிட்டு இருப்பதாக கணக்கிட்டு விவசாய நிலப் பரப்பை “அடங்கல்” கணக்கில் குறிப்பிட்டு தமிழக முழுவதும் விவசாய தோட்டக்கலைத் துறையினரின் ஆலோசனையோடு கிராம நிர்வாக அலுவலர்கள் கணக்கு வைக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம்.  இதன் அடிப்படையில் மூன்று மாதங்கள் கழித்து துவரம் பருப்பின் உற்பத்தி எவ்வளவு இருக்கும் என்று மாநில அரசு கணக்கிடுகிறது, இதே போலவே மத்திய அரசு கணக்கிடுகிறது. ஆனால், கொடுக்கப்பட்ட பயிரிட்ட கணக்கு களத்துக்குச் செல்லாமல் அலுவலகத்தில் வைத்து எழுதப்பட்ட, விவசாய மற்றும் தோட்டக்கலை துறையினரால் மிகைப்படுத்தப்பட்ட யூக கணக்காக இருந்தால் என்ன நடக்கும்? என்றால், “தற்போது இருந்து மூன்று மாதத்தில் தமிழகம் முழுவதும் துவரம் பருப்பு வரத்து குறைந்து விடும், வரத்து இருக்கும் என்று எதிர்பார்த்து இறக்குமதியும் செய்யப்படுவதில்லை, இதனால், இன்னும் மூன்று மாதங்கள் கழித்து தமிழகத்தில் துவரம் பருப்பின் விலை பல மடங்கு உயர்ந்து விடும்”. 

உணவுக்கான விவசாய பொருட்களின் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த அரசால் முடியும் என்பதை விளக்குவதற்கு இந்த கட்டுரை ஒரு பதிவாக அமைந்துள்ளது எனலாம். வருங்காலங்களில் எந்த ஒரு பொருளின் விளையும் திடீரென பல மடங்கு உயரக்கூடிய நிலையை ஏற்படாமல் இருக்க மத்திய மாநில அரசுகள் புள்ளியியல் துறைக்கு கூடுதல் கண்காணிப்பு அதிகாரங்களை வழங்கி தக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும்.

நுகர்வோர் பூங்கா
நுகர்வோர் பூங்கா
நுகர்வோர் பூங்காவின் படைப்பு

தொடர்புடைய கட்டுரைகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -Central Learning campus

சமீபத்திய கட்டுரைகள்