கடந்த 2024 பிப்ரவரி மாதத்தில் பெங்களூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் ஜஸ்ட் டயல் நிறுவனம் வாடிக்கையாளருக்கு இழப்பீடு வழங்க உத்தரவிட்ட நிலையில் மற்றொரு வழக்கில் சண்டிகார் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் கடந்த மாதம் வழங்கிய தீர்ப்பில் ஜஸ்ட் டயல் நிறுவனம் சேவை குறைபாடு புரிந்துள்ளதாக தெரிவித்துள்ளது. கடந்த மாதம் வெளியான சண்டிகார் நீதிமன்ற தீர்ப்பை அறிந்து கொள்வதற்கு முன்பாக இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியான பெங்களூர் நீதிமன்றத்தின் தீர்ப்பை முதலாவதாக அறிந்து கொள்வோம்.
பெங்களூரில் கேட் இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டுடோரியல் சென்டர் நிறுவனத்தை நடத்தி வருவோர் ஜஸ்ட் டயல் நிறுவனத்தில் விளம்பரம் செய்வதற்காக முன்பணமாக ரூ 6,00,000/- ஐ செலுத்தியுள்ளார். மேலும், விளம்பர கட்டணமாக ரூ 1,05,360 – ஐ செலுத்தியுள்ளார். ஜஸ்ட் டயல் நிறுவனத்தின் விளம்பரங்கள் மூலமாக அந்த நிறுவனம் வாக்குறுதி அளித்தபடி எண்ணிக்கையிலான நபர்கள் கேட் இந்தியன் இன்ஸ்டியூட் ஆப் டுடோரியலை அணுகவில்லை. இதனால் விளம்பரத்தை நிறுத்திவிட்டு முன்பணத்தை திரும்பத் தருமாறு பலமுறை டுடோரியல் உரிமையாளர் ஜஸ்ட் டயல் நிறுவனத்தை கேட்டுக் கொண்டுள்ளார்.
ஜஸ்ட் டயல் நிறுவனம் முறையான பதிலை வழங்காததால் டுடோரியல் உரிமையாளர் பெங்களூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். வணிக பயன்பாட்டுக்காக விளம்பரம் செய்ததால் டுடோரியல் நிறுவனம் நுகர்வோர் என்ற வரையறைக்குள் வருவதில்லை என்றும் நுகர்வோர் நீதிமன்றம் இதனை விசாரிக்க இயலாது என்றும் ஜஸ்ட் டயல் நிறுவனம் சார்பில் வாதிடப்பட்டது.
இதனை நிராகரித்த நுகர்வோர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் ஜஸ்ட் டயல் நிறுவனம் சேவை குறைபாடு மற்றும் நேர்மையற்ற வணிக முறையை ஜஸ்ட் டயல் நிறுவனம் புரிந்துள்ளதாக தெரிவித்ததோடு, வழக்கு தாக்கல் செய்தவருக்கு அவர் செலுத்திய முன் பணம் ரூபாய் 6 லட்சத்தை திரும்ப வழங்கவும் அவருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு இழப்பீடாக ரூ 30,000/- மற்றும் வழக்கு செலவு தொகையாக ரூ 10,000/- வழங்கவும் கடந்த 2024 பிப்ரவரி மாதத்தில் உத்தரவிட்டது.
இந்நிலையில் கடந்த மாதம் வழங்கிய தீர்ப்பு ஒன்றில் சண்டிகார் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் சுய தொழிலுக்காக விளம்பரம் செய்யும்போது விளம்பரம் வழங்குபவரை வணிகத்துக்காக விளம்பரம் செய்கிறார் என்ற காரணம் கூறி நுகர்வோர் அல்ல என்று முடிவு செய்ய இயலாது என்று தெரிவித்துள்ளது.
இந்த வழக்கு தாக்கல் செய்தவரை ஜஸ்ட் டயல் நிறுவனத்தின் பிரதிநிதி ஒருவர் சந்தித்து நிறுவனத்தின் விளம்பர திட்டங்கள் குறித்து தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து ரூ 28,320/- செலுத்தும் விளம்பர திட்டத்தை வழக்கு தாக்கல் செய்துள்ளவர் தேர்ந்தெடுத்து ஜஸ்ட் டயல் நிறுவனத்திற்கு கூகுள் பே மூலம் முன்பணமாக 4,720/- ரூபாயும் மற்றும் விளம்பரத்திட்டபடி முதலாவது தவணை தொகையாக 2,360/- ரூபாயும் செலுத்தியுள்ளார். ஆனால், ஒப்புக்கொண்டபடி ஜஸ்ட் டயல் நிறுவனம் அவரது விளம்பரத்தை வெளியிடவில்லை. இது தொடர்பாக ஜஸ்ட் டயல் நிறுவனத்தின் தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டும் முறையான பதில் வழங்கப்படவில்லை. இதனால் பணம் செலுத்தியவர் சண்டிகார் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார்.
வணிக நோக்கத்துக்காக விளம்பரத்தை தங்களிடம் வழங்கியதால் வழக்கு தாக்கல் செய்துள்ளவர் நுகர்வோர் என்ற வரையறைக்குள் வரமாட்டார் என்றும் நுகர்வோர் ஆணையம் இந்த வழக்கை விசாரிக்க அதிகார வரம்பு இல்லை என்றும் ஜஸ்ட் டயல் நிறுவனம் சார்பில் வாதிடப்பட்டது. இந்த வழக்கில் கடந்த மாதம் சண்டிகார் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஜஸ்ட் டயல் நிறுவனம் விளம்பரம் வழங்கியவரிடம் பணத்தைப் பெற்றுக் கொண்ட போதிலும் எந்த ஒரு விளம்பரத்தையும் அவர் தேர்ந்தெடுத்த திட்டப்படி வெளியிடவில்லை என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது மேலும் விளம்பரம் வழங்கியவர் சுய தொழிலை மேம்படுத்துவதற்காக விளம்பரம் வழங்கியுள்ளவர் என்ற நிலையில் அவர் நுகர்வோர் ஆவார். இதனால் ஜஸ்ட் டயல் நிறுவனம் சேவை குறைபாடு புரிந்துள்ளதாக தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. இதனால் வழக்கு தாக்கல் செய்தவர் செலுத்திய தொகை ரூ 7,080/- மற்றும் அவருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கான இழப்பீடாக ரூ 5,000/- ஆகியவற்றை வழக்கு செலவு தொகையுடன் வழக்கு தாக்கல் செய்த நுகர்வோருக்கு வழங்க வேண்டும் என்று ஜஸ்ட் டயல் நிறுவனத்திற்கு நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது.