spot_img
December 5, 2024, 12:47 am
spot_img

சந்திர பகவானுக்குரிய பரிகாரதலமான கைலாசநாதர் திருக்கோயில் 

சிறப்புமிக்க நவகிரக கோவில்கள் தமிழ்நாட்டில் கும்பகோணம் மாவட்டத்திற்கு அருகே உள்ள பல்வேறு இடங்களில் அமைந்துள்ளது. இதில் பிரசித்தி பெற்ற சூரியனார் கோவிலை பற்றி இதற்கு முன் உள்ள பதிவில் பார்த்தோம் நவகிரக தலங்களில் இரண்டாவது தலமாக விளங்குவது திங்களூர் கைலாசநாதர் கோவில். இது சந்திர பகவானுக்குரிய பரிகார தலமாக விளங்குகிறது.

அமைவிடம்

நவகிரக கோவில்களில் ஒரு கோவிலான சந்திரனுக்கு அமையப்பெற்ற சந்திர தலமானது தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணத்தில் இருந்து சுமார் 33 கிலோமீட்டர் தொலைவில் திங்களூரில் அமைந்துள்ளது. நீங்கள் பேருந்தில் செல்ல விரும்பினால் கும்பகோணம் பேருந்து நிலையத்திலிருந்து திங்களூர் செல்வதற்கு நிறைய பேருந்துகள் உள்ளன. இதன் மூலம் பாபநாசம், ஐயம்பேட்டை வழியாக 33 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திங்களூரை சுமார் 1 மணி நேர நேரத்தில் அடைந்து விட முடியும்.

சந்திரன்

பௌர்ணமி நாள்களில் ஜீவராசிகள் மட்டுமல்லாமல் கடல் போன்ற நீர் நிலைகளும் சந்திரனின் நிலையை ஒட்டி மாறுகின்றன. பாற்கடலில் மகாலட்சுமி உடன் பிறந்ததால் சந்திரன் லட்சுமியின் சகோதரர் ஆகிறார். அத்திரி – அனுசுயா தம்பதியின் மகனாக பிறந்த சந்திரன் தேவ குருவான பிரகஸ்பதி இடம் கல்வி கற்று கலைகளில் சிறந்து விளங்கினார். திருமாலை நோக்கி தவம் புரிந்து பல வரங்களைப் பெற்ற சந்திரன் நவகிரக பதவியையும் பெற்றார்.

தேவர்களும் அசுரர்களும் அமிர்தத்தைப் பெற வேண்டி திருப்பாற்கடலைக் கடைந்தார்கள்.மந்திர மலையை மத்தாகவும் வாசுகி எனும் பாம்பைக் கயிறாகவும் கொண்டு அவர்கள் பாற்கடலைக் கடைந்தபோது,ஆலகால விஷம் வெளிப்பட்டது.அசுரர்கள் வாசுகியின் தலைப்பக்கத்திலும் தேவர்கள் வால் பக்கத்திலும் நின்றுகொண்டு இருந்தனர்.தேவர்களைக் காப்பாற்றுவதற்காக இறைவன் அந்த விஷத்தை தானே அருந்தினார்.ஆனாலும் நஞ்சின் தாக்கத்தினால் தேவர்கள் மயக்கம் அடைந்துவிட்டனர்.அப்போது அமிர்தத்துடன் எழுந்து வந்த சந்திரன், தேவர்களின் மயக்கத்தைத் தெளிவித்தான்.

சந்திரன் கோவில்

குஜராத்தில் எட்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட சோமநாதர் சிவாலயம், கேரளாவில் திருவனந்தபுரத்தில் பத்தாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட சோமநாத் கோவில், மகாராஷ்டிராவில் நாசிக்கில் பதினொன்றாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட சோமேஸ்வரர் கோவில், ஆகியன சந்திரனுக்கான கோவில்களாக இந்தியாவில் கருதப்படுகிறது. இக்கோவில்களுக்கு முன்னதாகவே கட்டப்பட்ட ஏழாம் நூற்றாண்டில் சோழ மன்னரால் தமிழகத்தில் திங்களூரில் கட்டப்பட்ட கைலாசநாதர் கோவில்தான் சந்திரனுக்கான கோவில்களில் முதன்மையாக விளங்குகிறது முதன்மையான ஒன்றாகும். பதினாறாம் நூற்றாண்டில் நாயக்க மன்னர்களால் புனரமைப்பு செய்து பராமரிக்கப்பட்டுள்ளது. தேவாரப் பாடல் பாடப் பெற்ற தலங்களில் ஒன்றாகும்.

கைலாசநாதர்

திங்களூர் திருத்தலம் கிழக்கு நோக்கி அமைந்துள்ள போதிலும் ஐந்து நிலை ராஜகோபுரம் தெற்கு நோக்கி அமைந்துள்ளது. ராஜகோபுரம் வழியாக உள்ளேன் நுழைந்தால் திருக்கோவில் உள் மண்டபம் உள்ளது. மண்டபத்தின் இடப்புறம் அப்பூதி அடிகள், அவருடைய மனைவி அருள்மொழி, மகன்கள் மூத்த திருநாகரசு மற்றும் இளைய திருநாவுக்கரசு ஆகியோருடைய சிலைகள் உள்ளன. 

ராஜ கோபுரத்தின் நேர் எதிரில் இறைவி பெரிய பெரியநாயகி அம்மன் சன்னதி தெற்கு நோக்கில் அமைந்துள்ளது. இங்கு அம்பாள் நின்ற குளத்தில் அருள் பாலிக்கிறார். கிழக்கு நுழைவாயிலில் நுழைந்தால் இறைவன் கைலாசநாதர் கிழக்கு நோக்கி முடியில் சந்திர பிறையை சூடிய படி காட்சி தருகிறார். சிவன், சந்திரன் தவிர அம்பாள், சுப்ரமணியர், கஜலட்சுமி, பைரவர் போன்ற சன்னதிகளும் இக்கோவிலில் உள்ளன. சன்னதிக்கு எதிரில் சந்திரனால் உருவாக்கப்பட்ட சந்திர தீர்த்தம் மற்றும் யாகசாலை அமைந்துள்ளது. சந்திரனின் நிறம்:  வெண்மை, வச்திரம்: வெள்ளைத்துணி, தானியம்; நெல், உணவு: தயிர் சாதம், மலர்: வெள்ளை அரளி

தல வரலாறு 

சந்திரனைக் கண்ட பிரஜாபதி தர்ஷன் என்ற மன்னன் தனது அஸ்வினி முதல் ரேவதி வரையான தனது 27 நட்சத்திர மகள்களை 27 மகள்களையும் சமமாக அன்பு செலுத்த வேண்டும் என்ற நிபந்தனையுடன் சந்திரனுக்கு திருமணம் செய்து வைத்தார். அவர்களில் ரோகிணியிடம் மட்டும் தனி பிரியம் செலுத்தினான் சந்திரன். மற்ற 26 மனைவிகளும் தட்சனிடம் முறையிட்டனர். மாமனார் தட்சன், 27 மனைவிகளிடமும் அன்பு செலுத்தும்படி கூற, சந்திரன் அதை ஏற்க மறுத்தான். கோபம் கண்ட தட்சன், சந்திரனின் அழகு குறையவும், அவனது கலைகள் மங்கும்படியும் சாபமிட்டான். சாபம் நீங்க சந்திரன் திங்களூரில் உள்ள இத்தலத்தில் நீண்ட காலம் தவம் செய்தான். தன் பெயரில் ஒரு தீர்த்தம் உண்டாக்கி இறைவனை தொடர்ந்து வழிபட்டார் சந்திரன். ஒரு பங்குனி மாதப் பௌர்ணமியில், இறைவன் காட்சி கொடுத்து சந்திரனின் சாபத்தைப் போக்கினார்.

சிறப்பு

ஆண்டு தோறும் பங்குனி உத்திர தினத்தன்று காலை 6 மணிக்கு சூரிய ஒளி கருவறையில் உள்ள கைலாசநாதர் சிவலிங்கத் திருமேனி மீது படர்வதால் அன்று சூரிய பூஜையும், மறுநாள் மாலை 6.30 மணிக்கு சந்திரனின் ஒளி கைலாசநாதர் மீது பொழிவதால் அன்று சந்திர பூஜையும் நடைபெறுவது இவ்வாலயத்தில் சிறப்பு நிகழ்ச்சியாகும். இதைப் போலவே புரட்டாசி மாதத்து பௌர்ணமி அதற்கு முன், பின் ஆகிய இரு நாட்களிலும் சந்திர ஒளி இறைவன் மீது விழுவதை இப்போதும் பார்க்கலாம்.

தல பெருமை

63 நாயன்மார்களில் ஒருவரான அப்பூதியடிகள் என்ற சிவனடியார் திங்களூரில் வாழ்ந்து வந்தார். இவரது மனைவி அருள்மொழி. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள். தேவாரம் பாடிய திருநாவுக்கரசர் மீது கொண்டிருந்த அதிதீத அன்பினால் மூத்த மகனுக்கு மூத்த திருநாவுக்கரசு என்றும் இரண்டாவது மகனுக்கு   இளைய திருநாவுக்கரசு என்றும் அப்பூதியடிகள் பெயர் சூட்டினார். ஒருநாள் திருநாவுக்கரசர் அபூதியடிகளின் இல்லத்திற்கு வந்த பொழுது உணவருந்த வேண்டும் என்று அபூதியடிகள் கேட்டுக் கொண்டதன் காரணத்தினால் திருநாவுக்கரசர் உண்ண அமர்ந்தார் 

தன்னுடைய மகனை வாழை இலை பறிப்பதற்காக தோட்டத்திற்கு அப்பூதியடிகள் அனுப்பி வைத்திருந்தார். அவன் நேரமாகியும் திரும்பி வராததால் சென்று பார்த்த அச்சிறுவன் பாம்பு கடித்து அங்கேயே இறந்து கிடந்தான். இதை சற்றும் பொருட்படுத்தாது மறைத்த வண்ணம் சிறுவனின் உடலை துணியால் மூடி வைத்துவிட்டு. உணவு பரிமாற வாழை இலை கொண்டு சென்று திருநாவுக்கரசரின் பசியை போக்கினார் அபூதி அடிகள். இதனை அறிந்த திருநாவுக்கரசர் சிறுவனை தூக்கிக்கொண்டு திங்களூரில் உள்ள இறைவன் சன்னிதியில் மனமுருகி பாடினார். இதன் காரணமாக இறைவன் அருள் பெற்று அச்சிறுவன் உயிர் பெற்று எழுந்தான். இந்த தலத்தில் திருநாவுக்கரசர் பாடிய பத்து பாடல்கள் “விடம் தீர்த்த திருப்பதிகம்” என்ற பெயரில் அழைக்கப்படுகின்றது. திருநாவுக்கரசர் பாடிய இடம் தற்போதும் அபூதி அடிகளார் தலம் என அழைக்கப்படுகின்றது. 

சிறப்பு வழிபாடுகள்

குழந்தைகளுக்கு முதல் சோறு கொடுப்பதை அன்னப்பிரசானம் என்பர். தமிழகத்தில் அன்னப்பிரசானத்துக்கு மிகச்சிறந்த தலமாக திங்களூர் கைலாசநாதர் கோயில் கருதப்படுகிறது. இத்தலத்தில் தாயாருடன் ஒற்றுமை பெற, தாயார் உடல் நலம் மேம்பட, மன ஆரோக்கியம் மேம்பட, மனவசியம் ஹார்மோன் குறைபாடுகள் நீங்க முக வசீகரம் கூடுதல், தண்ணீரால் ஏற்படும் கண்டத்திலிருந்து விடுபட சந்திரனை வழிபடுகின்றனர். கலைகளில் முன்னேறவும் வெளிநாட்டு பயணங்கள் மேற்கொள்வதில் இருக்கும் தடை விலகவும் இந்த திங்களூர் கைலாசநாதர் மற்றும் பெரிய நாயகி அம்மனை வழிபட்டால் நிவர்த்தி அடையும் என நம்பப்படுகிறது.

இங்கு வாரந்தோறும் திங்கள்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளிலும் ஒவ்வொரு மாதத்திலும் பிரதோஷம், அமாவாசை, பௌர்ணமி ஆகிய நாட்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகிறது. மகாசிவராத்திரி, மார்கழி திருவாதிரை, பங்குனி உத்திரம், திருக்கார்த்திகை ஆகியன முக்கிய விழாக்களாக கொண்டாடப்படுகின்றன. 

ஜாதகத்தில் சந்திரனின் நிலை சரியில்லாத போது சந்திர தோஷம் ஏற்படுவதாக கணிக்கப்படுகிறது. ஜாதகத்தில் ஒருவருக்கு சந்திரனின் நிலை கெட்டு இருந்தால் அவருக்கு மனநிலை கோளாறுகள், தாயுடன் கருத்து வேறுபாடு, நீரில் கண்டம், வெளிநாட்டு பயண தடை போன்ற உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்படலாம். இதனை போக்க சந்திர திசை மற்றும் மற்றும் சந்திர புத்தி நடைபெறும் போது சந்திர பரிகார தலமான இக்கோவிலில் பரிகார பூஜையை பக்தர்கள் மேற்கொள்கிறார்கள்.

சந்திர வழிபாடு

தெற்கு அமெரிக்காவில் உள்ள பெரு நாட்டில்உள்ள மச்சு பிச்சுவுக்கு அருகிலுள்ள ஹுய்னா பிச்சுவில் உள்ள ஒரு இன்கான் சடங்கு கோவிலாக சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்பு சந்திரனுக்கான கோவில் கட்டப்பட்டுள்ளது. குகையின் மையத்தில் பாறையில் செதுக்கப்பட்ட படிக்கட்டுச் சிற்பம் உள்ளது. படிகள் கொண்ட சிற்பத்திற்கு அருகில் குகைக்குள் ஆழமாக செல்லும் படிகள் உள்ளன. 1936 ஆம் ஆண்டில் இந்த கோவில் கண்டுபிடிக்கப்பட்டது.

ஆதிகாலம் முதலே இயற்கையின் வடிவமான சந்திரனை வழிபடுவது உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்துள்ளது. இயற்கையின் வழிபாடாக சந்திரவழிபாடு தோன்றியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

ஜிவிடி
ஜிவிடி
நிர்வாக அலுவலர், அமைதிக்கான உத்திகள் நிறுவனம்

தொடர்புடைய கட்டுரைகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -Central Learning campus

சமீபத்திய கட்டுரைகள்