ஒன்பது கிரகங்களை குறிக்கும் நவகிரக வழிபாடு சைவ சமய வழிபாட்டில் முக்கிய பங்காற்றும் நிலையில், நவகிரக கோவில்கள் பெரும்பாலானவை தமிழ்நாட்டின் கும்பகோணத்தை சுற்றியுள்ள இடங்களில் அமைந்துள்ளது தமிழகத்துக்கு தனி சிறப்பு அளிக்கிறது.
அமைவிடம்
தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவிடைமருதூர் வட்டம், ஆடுதுறை அருகே திருமங்கலக்குடியில் நவக்கிரகக்கோயில்களில் முதன்மையான சூரியனார் கோவில் அமைந்துள்ளது. கும்பகோணத்தில் இருந்து கிழக்கில் 08 கிலோமீட்டர் தொலைவிலும் மயிலாடுதுறையில் இருந்து மேற்கில் 22 கிலோமீட்டர் தொலைவிலும் ஆடுதுறையிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவிலும் திருப்பனந்தாளிருந்து எட்டு கிலோமீட்டர் தொலைவிலும் தஞ்சாவூரில் இருந்து 58 கிலோ மீட்டர் தொலைவிலும் சூரியனார் கோயில் அமைந்துள்ளது இந்த கோவிலுக்கு ரயில் மார்க்கமாக செல்லும்போது ஆடுதுறை ரயில் நிலையத்தில் இறங்கி அணைக்கரை செல்லும் பேருந்து ஏறி திருமங்கலக்குடி காளியம்மன் கோவில் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி சற்று தொலைவு நடந்தால் இத்திருத்தலத்தை அடையலாம்.
சூரியனார் கோவில்
சங்ககாலத்தில் தமிழகத்தில் பூம்புகாரில் இருந்த உச்சிக்கிழான் கோட்டம் என்ற சூரியன் கோவில் கடல்கோளால் அழிந்து விட்டதாக கூறப்படும் நிலையில் சூரியனுக்கு இந்தியாவில் இரண்டு இடங்களில் மட்டுமே புரதான கோவில்கள் தற்போது உள்ளன. வட இந்தியாவில் ஒரிசாவில் அமைந்துள்ள கோனாரக் சூரியன் கோவில் 13 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகும். சர்வதேச அமைப்பான யுனெஸ்கோவால் புரதான சின்னங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டுள்ள கோனாரக் சூரியன் கோவில் உலக புகழ் பெற்றதாகும். இதற்கு முன்பாகவே 11 ஆம் நூற்றாண்டில் குலோத்துங்க சோழர்கள் ஆட்சி காலத்தில் சூரியனுக்கு கட்டப்பட்ட கோவில்தான் தமிழகத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ள சூரியனார் கோவில் ஆகும். சூரியனார் கோவிலில் மற்ற எட்டு கிரகங்களுக்கும் தனித்தனி சன்னதிகளும் அமைந்துள்ளன.
சிவசூர்யன்
சூரிய பரிகார தலமாக விளங்கும் சூரியனார் கோவிலில் அமைந்துள்ள மூலவர் சிவசூர்யன் என்று அழைக்கப்படுகிறார். கோனாரக் கோவிலில் உருவ வழிபாடு இல்லாத நிலையில் சூரியனார் கோவிலில் முதன்மை கடவுளான சூரிய பகவான் இடதுபுறத்தில் உஷா தேவியுடனும் வலது புறத்தில் பிரத்யூஷா தேவியுடனும் எனும் சாயா தேவியுடனும் இரு கரங்களிலும் செந்தாமரை மலரேந்தி மேற்கு பார்த்து நின்று திருமண கோலத்தில் இரண்டு மனைவிகளுக்கு மத்தியில் காட்சி அளிக்கிறார். உக்கிரம் நிறைந்த சூரிய பகவான் முன்பு நின்று வழிபட இயலாது. உக்கிர கிரகமான சூரியனை சாந்தப்படுத்தும் வகையில் எதிரில் குரு பகவான் காட்சியளிப்பதாக இந்த கோவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. சிவலிங்கத்துக்கு முன்னே நந்தி இருப்பது போல சூரிய பகவானுக்கு எதிரில் சூரியனை நோக்கியபடி சூரியனின் வாகனமான குதிரை இத்திருத்தலத்தில் உள்ளது.
தல வரலாறு
காலவ முனிவருக்கு தொழுநோய் ஏற்பட்டதால் நோய் குணமடையும் வரம் வேண்டி அவர் நவகிரக கோள்களையும் வழிபட்டுள்ளார். நவகிரக கோள்களும் அவரது பிரார்த்தனையை ஏற்று அவரது நோயை குணமடையச் செய்ததால் பிரம்மதேவன் கோபம் கொண்டுள்ளார். சிவபெருமானின் ஆணைப்படி எல்லா உயிர்களுக்கும் பாவ புண்ணிய பலன்களை மட்டுமே வழங்குமாறு நவகிரக கோள்களுக்கு கட்டளை வழங்கியிருந்த நிலையில் அதனை மீறி செயல்பட்டு உள்ளதால் நீங்கள் பூலோகத்தில் தொழு நோய்க்கு ஆட்பட்டவர்களாக இருப்பீர்கள் என்று நவகிரக கோள்களை பிரம்மதேவன் சாபமிட்டுள்ளார். இதனால், பூலோகத்தில் வெள்ளைக் காட்டுப் பூக்காடுகளான வெள்ளுருக்கு வனத்தில் பிரம்மாவால் சபிக்கப்பட்ட நவகிரகங்கள் கடும் தவம் இருந்தனர். அவர்கள் முன் சிவபெருமான் தோன்றி இத்தலம் உங்களுடைய தலமாக விளங்கும் என்று அருள் வழங்கி பல்வகை துன்பங்களையும் பொறுத்துக் கொண்டு உங்களை வழிபடும் பக்தர்களுக்கு நீங்கள் அருள் வழங்குங்கள் என்று ஆணையிட்டார் என்பது இத்தல வரலாறாக நம்பப்படுகிறது.
சிறப்பு வழிபாடுகள்
அரசியல் வாழ்க்கை, அரசு வேலை, தலைமைப்பதவி, தந்தை வழி யோகம் ஆகியவற்றிற்கு காரணமானவர் சூரியன்தான் என்று நம்பப்படுகிறது. உலக இயக்கத்திற்கு காரணமான சூரியனை வழிபடும் முறை செளமாரம் என்றும் சூரியனை வழிபடும் விரதங்களில் முக்கியமானதாக கருதப்படும் ரத சப்தமி என்பது சூரிய ஜெயந்தி என்றும் அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் தை மாதத்தில் ரத சப்தமி உற்சவம் 10 நாட்கள் திருவிழாவாக இங்கு கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு தமிழ் மாதமும் முதல் ஞாயிற்றுக்கிழமை அன்று சிவ சூரிய பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் இங்கு நடைபெறுகிறது. குரு பெயர்ச்சி மற்றும் சனி பெயர்ச்சி நாட்களில் இத்திருத்தலத்தில் மிகச் சிறப்பான ஆராதனைகள் நடைபெறுகின்றன. ஒரு நுழைவு கோபுரத்துடன் ஐந்து ராஜகோபுரங்களை கொண்டுள்ள சூரியனார் கோவிலில் சூரிய கடவுளுக்கு நன்றி செலுத்தும் விதமாக பொங்கல் விழாவும் ஒவ்வொரு ஆண்டும் இங்கு மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
பரிகாரம்
பிறந்த இடத்தையும் நாளையும் நேரத்தையும் கொண்டு கணிக்கப்படும் ஜாதகப்படி சூரிய திசை, சூரிய புத்தி, சூரிய பார்வை, சூரிய தோஷங்கள் உள்ளவர்களும் ஏழரை ஆண்டு சனி, அஷ்டம சனி, ஜென்மசனி உள்ளவர்களும் இத்திருத்தலத்தில் வந்து திருத்தலத்திற்கு வந்து சூரிய பரிகாரம் மேற்கொள்கின்றனர். இறைவன் : சூரியன், தல விருட்சம்: எருக்கு, நிறம் : சிவப்பு, வச்திரம்: சிவப்புத் துணி, மலர்: தாமரை மற்றும் எருக்கு, இரத்தினம்: மாணிக்கம், தானியம் : கோதுமை, வாகனம்: ஏழு குதிரைகள் பூட்டிய தேர், உணவு: சர்க்கரைப் பொங்கல், ரவை மற்றும் கோதுமை.
எவை எப்படி இருப்பினும் சூரியனை வழிபடுவது தமிழர்களின் பண்பாடு என்பது சரித்திரம் நமக்கு உணர்த்தும் சங்கதியாகும்!